தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்! - வ...
Haaland: பை பை பிரேஸில்... உலக நாடுகள் அச்சம் கொள்ள வேண்டிய ஸ்டிரைக்கர் ஹாலண்ட்! - ஏன் தெரியுமா?
கால்பந்து மைதானத்தில் மஞ்சள் நிறத்தில் அலைபாயும் அவரது முடியை வைத்து எளிதாக அடையாளம் கண்டுவிடலாம். ஆனால், இப்போது எர்லிங் ஹாலண்ட் என்ற பெயர், உலகக் கோப்பையில் பிரேசில் போன்ற சாம்ராஜ்யத்தையே சாய்த்த ஒரு சரித்திர நாயகனாக பதிவாகியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த நாக்-அவுட் சுற்றில், பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நார்வே அணி தனது வரலாற்றில் முதல்முறையாக உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணம், ஹாலண்டின் இரண்டு பிரம்மாண்ட கோல்கள்.

குறைந்த தொடுதல், நிறைந்த தாக்கம்!
ஆட்டம் முழுவதும் ஹாலண்ட் பந்தை அதிகம் தொடவே இல்லை. பிரேசில் பாக்ஸிற்குள் வெறும் நான்கு முறை மட்டுமே பந்தை தொட்டிருக்கிறார். ஆனால், ஒரு சிங்கம் பதுங்குவது பாய்வதற்குத்தான் என்பதைப் போல, அந்த சில தொடுதல்களே ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது.
79-வது நிமிடம் வரை கோலின்றி இழுபறியாகச் சென்ற ஆட்டத்தில், ஒரு அருமையான ஹெட்டர் மூலம் முதல் கோல் அடித்து மௌனத்தைக் கலைத்தார் ஹாலண்ட். அடுத்த 11 நிமிடங்களில், பாக்ஸிற்கு வெளியே இருந்து அவர் அடித்த ஒரு புல்லட் ஷாட், கோல் வலையைத் துளைத்தது. இந்த இரண்டு கோல்களும், அவர் ஏன் உலகின் மிகவும் அஞ்சப்படும் ஸ்டிரைக்கர்களில் ஒருவர் என்பதை மீண்டும் நிரூபித்தது.
வாய்ப்பே இல்லாத இடத்தில் ஒரு கோல்!
ஹாலண்டின் இரண்டாவது கோல் பற்றி முன்னாள் ஸ்காட்லாந்து வீரர் பேட் நெவின், "வேறு எந்த வீரராலும் இதைச் செய்திருக்க முடியாது. அங்கே ஒரு கோல் வாய்ப்பே இல்லை. அரை வாய்ப்பு, கால் வாய்ப்புகூட இல்லை. ஒன்றுமே இல்லாத இடத்தில் இருந்து அவர் ஒரு கோலை உருவாக்கியிருக்கிறார்" என்று புகழ்ந்தார்.
முன்னாள் இங்கிலாந்து ஸ்டிரைக்கர் இயன் ரைட், "அவர் எத்தனை முறை பந்தை தொட்டார் என்று எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், ஒரு கோல் அடிக்க அவருக்கு அதிக தொடுதல்கள் தேவையில்லை என்பதே நிதர்சனம்" என்றார்.

வரலாறும், கோல்டன் பூட் போட்டியும்!
இந்த இரண்டு கோல்களின் மூலம், உலகக் கோப்பையின் கோல்டன் பூட் விருதுக்கான போட்டியில் 7 கோல்களுடன், பிரான்சின் எம்பாப்பே மற்றும் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி ஆகியோருடன் ஹாலண்ட் சமநிலைக்கு வந்துள்ளார்.
1998-க்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பையில் ஆடும் நார்வே, இப்போது மெக்சிகோவை 3-2 என வீழ்த்திய இங்கிலாந்தை காலிறுதியில் சந்திக்கிறது. உலகக் கோப்பையை வெல்ல இன்னும் மூன்று வெற்றிகளே தேவை என்ற நிலையில், 'கேம்சேஞ்சர்' ஹாலண்ட் இருப்பதால், எதுவும் சாத்தியம் என நார்வே நம்புகிறது.
"இந்தத் தொடரில் நார்வேயால் வெகுதூரம் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஹாலண்ட் கொடுத்திருக்கிறார்" என்கிறார் வெய்ன் ரூனி. "உலக அரங்கில் அவர் சாதித்தது இல்லை' என்ற விமர்சனம் இனி எடுபடாது. அதை அவர் இப்போது உடைத்தெறிந்துவிட்டார்" என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கேரி நெவில் கூறினார்.
கேப்ரியலுடனான போட்டி!
ஆட்டத்திற்கு முன்பாக, பிரேசில் மற்றும் அர்செனல் வீரரான கேப்ரியலுக்கும் ஹாலண்டுக்கும் இடையே நடக்கும் போட்டி பெரிதாகப் பேசப்பட்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் கேப்ரியல் கையே ஓங்கியிருந்தது. ஆனால் ஆட்டம் சூடுபிடிக்க, ஹாலண்டுக்கான வெளியும் திறந்தது.
இறுதியில், கேப்ரியலைத் தாண்டி ஒரு ஹெட்டர் கோலையும், அவரை வேடிக்கை பார்க்க வைத்து மற்றொரு கோலையும் அடித்து, ஹாலண்ட் பதிலடி கொடுத்தார். ஆட்டம் முழுவதும் வெறும் 30 முறை மட்டுமே பந்தை தொட்டிருந்தாலும், நார்வேயின் ஹீரோ அவர்தான் என்பதில் சந்தேகமில்லை. "அவர் எப்போதுமே இப்படித்தான் ஆடுவார். முக்கியமான தருணங்களில், முக்கியமான நேரங்களில் வந்து நிற்பார்" என புகழ்கின்றனர்.

வைக்கிங் கொண்டாட்டம்!
"இந்தத் தொடரில் நான் சிலமுறை உச்சத்தை அடைந்தேன், ஆனால் இப்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக உணர்கிறேன்," என்று ஹாலண்ட் கூறினார். ஆட்டம் முடிந்ததும், மைதானத்தில் வைக்கிங் கர்ஜனை எதிரொலித்தது. வைக்கிங் ஹெல்மெட்களுடன் கூடியிருந்த தங்கள் ரசிகர்களுடன் இணைந்து, ஹாலண்ட் மற்றும் நார்வே வீரர்கள் 'வைக்கிங் ரோ' எனும் புகழ்பெற்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
"இது நார்வே வரலாற்றில் ஒரு மகத்தான நாள்" என்றார் ஹாலண்ட். பயிற்சியாளர் ஸ்டோல் சோல்பக்கன், "ஒட்டுமொத்த நாடும் எங்களுடன் சேர்ந்து துடுப்பு போடுகிறது. இது ஒரு கொண்டாட்டத்துக்கான கோடைக்காலம். பயிற்சியாளராக இருப்பதை விட, ஒரு ரசிகராக இருப்பது இப்போது சிறப்பாக உள்ளது" என்றார் பெருமையுடன்.
— Out Of Context Football (@nocontextfooty) July 5, 2026




















