`என் கார்ல வருகிறேன்' - அனிதா ராதாகிருஷ்ணன்; `போலீஸ் வாகனத்துல ஏறுங்க.!' - கைதின...
90+ நிமிடத்தில் நடந்த நாடகம்! கோல், கொண்டாட்டம், VAR அதிர்ச்சி... கண்ணீரில் வெளியேறியது குரோஷியா!
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் கடைசி நிமிடங்கள் எப்படி ஒரு அணியின் தலையெழுத்தையே மாற்றும் என்பதற்கு நேற்றைய போட்டி ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
ரொனால்டோவின் வரலாற்று கோல், கடைசி நிமிடத்தில் ராமோஸின் த்ரில்லர் கோல், அதன்பின் VAR தொழில்நுட்பத்தால் மறுக்கப்பட்ட குரோஷியாவின் சமன் கோல் என அத்தனை நாடகங்களும் அரங்கேற, இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. குரோஷியா அணி வீரர்களும், ரசிகர்களும் கண்ணீருடன் தொடரிலிருந்து வெளியேறினர்.
2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் 32 அணிகள் கொண்ட நாக்-அவுட் சுற்றில் போர்ச்சுகல் மற்றும் குரோஷியா அணிகள் மோதின. போட்டி ஆரம்பம் முதலே இரு அணிகளும் சரிசமமாக மோதினாலும், கோல் அடிக்கும் வாய்ப்புகள் பெரிய அளவில் உருவாகவில்லை. ஆனால், ஆட்டத்தின் இரண்டாம் பாதி பெரும் பரபரப்புடன் தொடங்கியது. போர்ச்சுகல் வீரர் ரஃபேல் லியோ அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்ப, ஆட்டம் சூடுபிடித்தது.

வரலாறு படைத்த ரொனால்டோ!
ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுகளில் இதுவரை ஒரு கோல் கூட அடிக்காதவர் என்ற விமர்சனத்தை சுமந்து வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, அந்தப் பந்தை எடுத்துக்கொண்டார்.
கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பந்தை மிக நேர்த்தியாக கோல் வலையின் நடுவே அடித்து, கோல்கீப்பரை ஏமாற்றினார். இது உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் அவரது முதல் கோல் ஆகும். இந்த கோலின் மூலம், உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து மற்றுமொரு மைல்கல்லை எட்டினார் ரொனால்டோ.

FIFA
கடைசி நிமிட த்ரில்லர்!
ரொனால்டோவின் கோலுக்குப் பிறகு ஆட்டம் இன்னும் வேகமெடுத்தது. குரோஷியா பதில் கோல் அடிக்க கடுமையாகப் போராடியது. கோவாசிச் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது, பாசாலிச்சின் ஹெட் ஷாட் நூலிழையில் வெளியே சென்றது என துரதிர்ஷ்டம் குரோஷியாவைத் துரத்தியது. ஆட்டம் 1-1 என சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+ நிமிடங்கள்) போர்ச்சுகல் வீரர் லியோ கொடுத்த அற்புதமான கிராஸை, கோன்சலோ ராமோஸ் துள்ளி எழுந்து தலையால் முட்டி கோலாக மாற்றினார். போர்ச்சுகல் முகாமில் கொண்டாட்டம் கரைபுரண்டோடியது.
VAR கொடுத்த அதிர்ச்சி... சிதறிய கனவுகள்!
ஆட்டம் முடிவதற்கு சில விநாடிகளே இருந்தன. குரோஷியா தங்களது கடைசி முயற்சியை எடுத்தது. யாரும் எதிர்பாராத வண்ணம், அவர்கள் ஒரு கோல் அடித்து ஸ்கோரை 2-2 என சமன் செய்தனர். குரோஷிய வீரர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கிய நொடியில், நடுவர் VAR தொழில்நுட்பத்தின் உதவியை நாடினார். சில நிமிட பரிசோதனைக்குப் பிறகு, குரோஷிய வீரர் ஆஃப்சைடு நிலையில் இருந்ததாக அறிவிக்கப்பட்டு, அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.
சில விநாடிகளுக்கு முன் கொண்டாட்டத்தில் இருந்த குரோஷிய வீரர்களின் முகத்தில் அதிர்ச்சியும், சோகமும் அப்பிக்கொண்டது. போட்டியும் முடிவுக்கு வந்தது.
வெற்றி பெற்ற போர்ச்சுகல் அணி, அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. மறுபுறம், தங்களின் கடைசி உலகக்கோப்பையில் விளையாடிய லூகா மோட்ரிச்சின் கனவுகள் கண்ணீரில் கரைய, குரோஷியா அணி தொடரிலிருந்து வெளியேறியது.!


















