நீட் போராட்டம்: "இளைஞர்களின் சத்தம் புறக்கணிக்க முடியாதது; புறக்கணிக்கவும் கூடாத...
"நாய்கள் மனுவை விசாரிக்க நேரம் இருக்கு; ஆனால்.."- மாணவர்கள் போராட்டத்திற்கு தாக்கரே சகோதரர்கள் ஆதரவு
டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறி இருக்கிறது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்காக பல ஆயிரம் மாணவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர்.
அவர்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. இப்போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இப்போராட்டத்திற்கு ஆதரவாக உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் இணைந்து மும்பையில் இரண்டு நாள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மும்பையில் தற்போது ஒரே இடத்தில் 5க்கும் அதிகமானோர் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தடையை மீறி இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும், மத்திய அரசின் அணுகுமுறையைக் கண்டிக்கவும் தாக்கரே சகோதரர்கள் இந்தக் கூட்டுப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இன்று இரு கட்சிகளும் இணைந்து மாலை 4 மணிக்கு தாதர் சிவாஜி பூங்காவில் உள்ள மீனாதாய் தாக்கரே சிலை அருகே பொதுக்கூட்டம் நடத்துவதோடு, அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு ‘ஒரே தேசம் ஒரே உணர்வு’ என்ற முழக்கத்தின் கீழ் தேசிய கீதமும் இசைக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் சிவாஜி பூங்காவில் இருந்து சித்திவிநாயகர் கோவில் வரை மூவர்ண கொடி ஏந்திய பேரணியை அறிவித்துள்ளனர். இரண்டு நிகழ்வுகளிலும் இந்தியக் கொடி மட்டுமே இடம் பெறும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் கூறுகையில், "நான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசியுள்ளேன். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மோர்ச்சாவை காங்கிரஸ் ஆதரிக்கக்கூடும். இந்த விவகாரம் நீட் தேர்வுக்கு அப்பால் சென்றுவிட்டது. பல ஆண்டுகளாக மோடி ஆட்சியில் மக்கள் மத்தியில் கொதித்தெழுந்த கோபம் வெடித்திருக்கிறது.
நீதிமன்றங்களில் நாய்களுக்கும் புறாக்களுக்கும் நேரம் இருக்கிறது; ஆனால் கரப்பான்பூச்சிகளுக்கு அல்ல. நீதிமன்றத்தின் நிலைமையும் திருதராஷ்டிரனின் நிலைமையாகிவிட்டதா? திரௌபதி, திருதராஷ்டிரனிடம் நியாயம் கேட்பது போல் உள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையில் போராட்டங்களில் பொதுமக்கள் உடையில் குண்டர்களை பாஜக அனுப்புகிறது'' என்று கூறினார்.
இது குறித்து ராஜ் தாக்கரே கூறுகையில்,"ஞாயிற்றுக்கிழமை எங்கள் அமைதிப் பேரணியை யாராவது சீர்குலைக்க முயன்றால், நாங்கள் அவர்களை அடிப்போம். குண்டர்கள் அணிவகுப்புக்குள் நுழைந்தால், நாங்கள் அவர்களை விட்டுவிட மாட்டோம். எதிர்ப்பு ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்துள்ளது. அரசாங்கம் இப்போது பின்வாங்கியுள்ளது. அனைவரும் எங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளலாம். முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அல்லது சரத் பவார் கூட.
இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் போராட்டத்தின் வீடியோக்களைப் பார்க்க தனக்கு நேரமில்லை என்று கூறுகிறார். அவர் கரப்பான் பூச்சியைப் பெற்றெடுத்தார். இப்போது அவருக்கு அவரது குழந்தையைப் பார்க்க நேரமில்லை" என்று ராஜ் கேலி செய்தார்.

முன்னதாக மும்பையில் தடையை மீறி போராட்டம் நடத்திய மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கவேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் மும்பை போலீஸ் கமிஷனரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் தலைமையிலான கட்சி பிரதிநிதிகள், மாநில டிஜிபி சதானந்த் மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பார்தி ஆகியோரை சந்தித்து, தனியுரிமை மீறல், 700 மாணவர்களைச் சட்டவிரோதமாக காவலில் வைத்தல், எஃப்ஐஆர் பதிவு செய்ய தடை உத்தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துதல், போலிஸ் நிலையத்தில் இருக்கும் மாணவர்களை விடுவித்தல் ஆகிய நான்கு பிரச்னைகளை எழுப்பி கோரிக்கை மனு கொடுத்தனர்.
போராட்ட இடத்திற்குக் கூட வராத மாணவர்களை போலீசார் கைது செய்ததாகவும், மாணவர்களின் தொலைபேசிகளைச் சோதனை செய்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.











