நீட் போராட்டம்: "இளைஞர்களின் சத்தம் புறக்கணிக்க முடியாதது; புறக்கணிக்கவும் கூடாத...
CJP : ``கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதில் பிரதமருக்கு என்ன பிரச்னை?" - அபிஜித் தீப்கே கேள்வி
நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி நள்ளிரவில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
அதில், ``வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையிலான மசோதாவை அரசு அறிமுகப்படுத்தும். வெள்ளிக்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்ற அரசு முயற்சிக்கும்." என்றார். அதைத் தொடர்ந்து சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்த காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, ``மத்திய கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து, குளறுபடிகளுக்கு பொறுப்பேற்கும் வரை இந்தப் போராட்டம் முடிவுக்கு வராது. தலைவர்கள் பேச்சுவார்த்தைக்காக ஜந்தர் மந்தருக்கோ அல்லது ஒரு பொது இடத்துக்கோ வர ஒப்புக்கொண்டால் ஒழிய, அரசைச் சந்திக்கும் திட்டம் எதுவுமில்லை.
அவர்கள் எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது உண்மைதான். ஆனால் கடந்த முறை அவர்கள் எங்களிடம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே பேச, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரை ஐந்து மணி நேரம் உட்கார வைத்தார்கள். அந்த அனுபவம் மீண்டும் தொடர்வதை தாங்கள் விரும்பவில்லை
ஒடிசாவில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக இளம் வயதில் தர்மேந்திர பிரதான் குரல் கொடுத்தது உண்மையென்றால் அவர் ஜந்தர் மந்தரில் எங்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று நினைக்கிறேன். அவரை நாங்கள் வரவேற்போம். அவருடைய ராஜினாமா கடிதத்தையும் நாங்களே தயார் செய்து தருகிறோம். அவர் கையெழுத்திட்டால் மட்டும் போதும்.

பிரதமர் மோடியின் அறிவிப்பு, உண்மையான குற்றவாளியான தர்மேந்திர பிரதான் மீது எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வெளியிடப்பட்ட மிகவும் தெளிவற்ற பதிவு அது. கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே எங்கள் தெளிவான கோரிக்கை. ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்பிற்கு காரணமான தர்மேந்திர பிரதானைப் பாதுகாக்க ஜந்தர் மந்தரில் இனி ரத்தம் சிந்தப்படக் கூடாது. மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். மும்பை, நாசிக், மிசோரம், ஜெய்ப்பூர், மத்தியப் பிரதேசம், பெங்களூரு என இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இத்தனை லட்சம் மக்கள் ஒரு அமைச்சரின் ராஜினாமாவைக் கோரும்போது, ஒரே ஒரு கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதில் பிரதமர் மோடிக்கு என்ன பெரிய பிரச்சினை என்று எனக்குப் புரியவில்லை. லட்சக்கணக்கான மாணவர்களை விட ஒரு கல்வி அமைச்சர் முக்கியமானவர் ஆகிவிட முடியாது. இந்தப் போராட்டம் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கானது. நாளை அமைச்சரவைக்கு வேறு எந்த அமைச்சர் வந்தாலும் அவர்கள் ஏதேனும் தவறு செய்தாலோ, வினாத்தாள் கசிந்தாலோ அல்லது ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டாலோ, அவர்களின் பதவி பாதுகாப்பாக இருக்காது என்பதை உணர்ந்துகொள்வார்கள்." என்றார்.











