செய்திகள் :

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இனச்சான்று வழங்க தாமதம் கூடாது! - சமூக நீதித்துறை புதிய வழிகாட்டுதல்

post image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது என சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக, இனச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் சரிபார்ப்பு தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் ஒருங்கிணைத்து “Manual for Issuance and Verification of Scheduled Caste/Scheduled Tribe Community Certificates” என்ற விரிவான கையேட்டை அரசு வெளியிட்டுள்ளது.

அந்த வழிகாட்டுதலின்படி, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இனச்சான்று கோரி விண்ணப்பித்தால், 2 நாட்களுக்குள் வட்டாட்சியர் சான்றிதழ் வழங்க வேண்டும். பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்தால், ஒரு வாரத்திற்குள் கோட்டாட்சியர் இனச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் எழுந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் மனுவின் மீது உரிய முடிவெடுத்து, அதன் விவரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனச்சான்று கோரி அளிக்கும் மனுக்களில், சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் தேவையற்ற காலதாமதம் செய்வதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, மனுக்கள் மீது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சமூக நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், காலக்கெடுவை மீறி தேவையற்ற தாமதம் ஏற்படுத்தும் சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அரசின் உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.