"இனி என்னிடம் அரசியல் பேசாதீர்கள்; அன்புமணி.!" - அரசியலில் இருந்து விலகிய ராமதாஸ...
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரவ்னீத் சிங் பிட்டு! - அமைச்சரவை விரைவில் மாற்றம்?
ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறைக்கான மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 21-ம் தேதியே முடிந்துவிட்டது.
அடுத்து ரவ்னீத் சிங் பிட்டுவின் ஃபோக்கஸ் அடுத்த ஆண்டு நடக்க உள்ள பஞ்சாப் தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது.
பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் பீன்ட் சிங்கின் பேரனான பிட்டு, 2024-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததால், இவரை ராஜஸ்தான் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தது பாஜக அரசு.
இந்தப் பதவிக்காலமும் தற்போது முடிவடைய அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேலையில் பிட்டு தீவிரமாக இறங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இவருக்கு முன்பு, கடந்த ஜூன் 23-ம் தேதி, இன்னொரு மத்திய அமைச்சரான ஜார்ஜ் குரியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சரியாக, அந்த நேரத்தில் தான் மத்திய அமைச்சரவை மாற்றம் என்கிற பேச்சு எட்டிப்பார்த்தது.
இதற்கேற்றாற் போல, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்தடுத்து சந்தித்தனர்.
ஜூலை மாதம் நடக்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பு அமைச்சரவை மாற்றம் என்று வலுத்த சத்தங்கள் திடீரென அமைதியானது.

ஏன் இந்த அமைதி?
முர்மு உடனான சந்திப்பு, நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இடையே இந்தியா வந்தார் ஜப்பான் பிரதமர்.
பின்னர், மோடிக்கு அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்கள் இருந்தன.
ஆக, அதில் பிஸி ஆகிவிட்டார் இந்திய பிரதமர் மோடி.
ஜப்பான் பிரதமர் இந்தியா வருவதற்கு முன் திரௌபதி முர்மு ஆந்திராவிற்கு பயணம் சென்றிருந்தார்.
இதனால், அமைச்சரவை மாற்றத்திற்கு தோதாக, குடியரசுத் தலைவர், பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை.
ஆனால், இதனால் மட்டும் தான், மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளி போடப்பட்டது என்று காரணத்தைச் சுருக்கிவிட முடியாது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பு, அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டால், புதிய அமைச்சர்களுக்கு கூட்டத்தொடருக்கு தயாராக குறைந்த நேரமே இருக்காது என்பதும் ஒரு காரணம்.
மாற்றம் இருக்குமா... இருக்காதா...
மத்திய அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று தான் கூறப்படுகிறது. அது செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடக்கலாம் என்கிறது டெல்லி வட்டாரம்.
கடந்த மே 21-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவைச் செயலாளர் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கமான அறிக்கை ஒன்றை வழங்கியிருக்கிறார். அமைச்சரவை மாற்றத்தில் இந்த அறிக்கை முக்கிய இடம்பெறுமாம்.
மேலும், புதிய அமைச்சரவை மாற்றத்தில்...
> இளம் முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த அமைச்சரவையில் 70-80 வயதுகளில் 8 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பதவி பறிபோகலாம்.

> இப்போதுள்ள அமைச்சரவையில் நன்கு தெரிந்த பெண் முகம் நிர்மலா சீதாராமன் மட்டுமே.
2029-ம் ஆண்டு 33 சதவிகித பெண்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே இலக்கு. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, புதிய அமைச்சரவையில் பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படலாம்.
> அடுத்த ஆண்டு ஏழு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. இதை கணக்கில் வைத்து அந்த மாநில முகங்களுக்கு முக்கியம் தரப்படலாம்.
> ஓய்வுபெற்ற அதிகாரிகளும் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பெயர் அடிபட்டு வருகிறது.
அவருக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்படலாமாம். தற்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு எதிரான குரல்கள் மக்களிடையே எழுந்துள்ளதால், அவரது பதவி நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.













