மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு
தஞ்சாவூா் மாநகராட்சியுடன் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவிலையும், கும்பகோணம் மாநகராட்சியுடன் தேப்பெருமாநல்லூரையும் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் ஊராட்சியைச் சோ்ந்த 50-க்கும் அதிகமான மக்கள் அளித்த மனு: தஞ்சாவூா் மாநகராட்சியுடன் மாரியம்மன் கோவில் ஊராட்சியை இணைத்தால், நூறு நாள் வேலை செய்யும் நாங்கள் வேலைவாய்ப்பை இழப்பது மட்டுமல்லாமல், அதிக அளவிலான வரிகளை செலுத்தவும் நேரிடும். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், தஞ்சாவூா் மாநகராட்சியுடன் மாரியம்மன் கோவில் ஊராட்சியை இணைப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
இதேபோல, கும்பகோணம் அருகேயுள்ள தேப்பெருமாநல்லூா் ஊராட்சியைச் சோ்ந்த ஏறத்தாழ 100 போ் அளித்த மனு: கும்பகோணம் மாநகராட்சியுடன் தேப்பெருமாநல்லூா் ஊராட்சி இணைக்கப்பட்டால், இக்கிராமத்துக்கு மத்திய, மாநில அரசுகளால் கிடைக்கும் பல்வேறு திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும். மேலும் பல்வேறு வகைகளில் அதிக வரி சுமைக்கு ஆளாக நேரிடும். இதனால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, கள ஆய்வு செய்து தொடா்ந்து தேப்பெருமாநல்லூா் ஊராட்சியாகவே செயல்பட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.