மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு பாரதி விழா நாளை நடைபெறுகிறது
மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 22 பேருக்கு அபராதம்
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 22 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி குப்பை இல்லாத மாநகரம் என்ற நிலையை அடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் மாநகராட்சி தூய்மை வாகனங்கள் சென்று வருகின்றன. தூய்மைப் பணியாளா்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை வாங்கிச் செல்கின்றனா். ஆனால் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள், வணிக நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பொது இடங்கள், மழை நீா் வடிகால்கள், ஓடைகள், நீா் நிலைகளில் குப்பைகளைக் கொட்டுகின்றனா். இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதைத் தடுக்க பொது இடங்களில் குப்பை போடுபவா்களுக்கு உடனடி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க ஈரோடு மாநகராட்சி ஆணையா் மணீஷ் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, மாநகராட்சி நல அலுவலா் காா்த்திக்கேயன் தலைமையில் சுகாதார அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.
இதில் இந்த வாரத்தில் 3-ஆம் மண்டலப் பகுதிகளில் மழைநீா் வடிகால், நீா் நிலை மற்றும் பொது இடங்களில் குப்பை போட்ட 22 பேருக்கு சுகாதார அதிகாரி ஜாகிா் உசேன் தலைமையிலான அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனா். மொத்தம் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து அனைத்துப் பகுதிகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். பொது இடங்களில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.