செய்திகள் :

மின்சாரம்: 'வரலாற்றிலேயே இல்லாத அதிக விலை' - தவெக அரசின் முடிவு சரியா? தவறா?| அலசல்

post image

தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 1957-ம் ஆண்டு ஒரு சேவை நிறுவனமாக அரசால் துவங்கப்பட்டது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்பட்டதும், மின்வாரியம் ஒரு சேவை துறை என்பதில் இருந்து வியாபார துறையாக மாற்றப்பட்டது. இதனால், தமிழக மின்வாரியம் சுயமாகத் தயாரிக்கும் மின்சாரத்தின் அளவைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு, தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையில் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, அவை போடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதை மின்சார ஒழுங்குமுறை ஆணையமே ஊக்குவித்து வருகிறது.

தமிழ்நாடு மின்வாரியம்
தமிழ்நாடு மின்வாரியம்

90-களின் இறுதியிலும் 2001-2002 ஆகிய ஆண்டுகளிலும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாடு மின்வாரியத்தின் உதவியுடன் துவங்கப்பட்டன. அதாவது மின்சார வாரியமே தனியாருக்கு பணம் கொடுத்து, நிலம் கொடுத்து நிறுவனங்களை உருவாக்கி உற்பத்தியை நடத்த வைத்தது.

அந்த வகையில்தான் சென்னை பேசன்பிரிட்ஜில் உள்ள ஜி.எம்.ஆர், பிள்ளை பெருமாள் நல்லூர், சாமல்பட்டி பவர், மதுரை பவர், நெய்வேலி பவர் போன்ற நிறுவனங்கள் துவங்கப்பட்டன.

அரசின் நேரடி உற்பத்திக் கழகமான TNPGCL (தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்) மற்றும் TNGECL (பசுமை ஆற்றல் கழகம்) என மின் உற்பத்திக்கு தனிக் கவனம் செலுத்தினாலும், மத்திய அரசின் பொது விநியோகம் மூலம் பெறப்படும் மின்சாரமும் சேர்த்தாலும் தமிழ்நாட்டின் மின் தேவையில் ஏறத்தாழ 40 - 50 சதவிகித மின் தேவையைப் பூர்த்திச் செய்ய தனியாரிடமே எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

எனவே, சூழலுக்கேற்ப குறுகிய கால, நீண்ட கால ஒப்பந்தம் எனத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தமிடுகிறது அரசு. அந்த ஒப்பந்தத்தின் விலைதான் தற்போது தமிழ்நாடு அரசியல் மீட்டரில் சூடு பறக்கிறது.

மின்சாரம்
மின்சாரம்

ஒவ்வொரு ஆண்டும், காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றத்துக்கேற்றவாரு மின் தேவை அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். அதன் அடிப்படையில் அக்டோபர் மாத மின் பற்றாக்குறையைச் சமாளிக்க, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வரலாற்றிலேயே மிக அதிக விலையாக ஒரு யூனிட்டுக்கு ரூ.37 வரை கொடுத்து அவசரகால மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்வளவு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது இதுவே முதல் முறையாகும்.

அக்டோபர் 12 முதல் 31 வரையிலான காலத்திற்கு 24 மணி நேரமும் தொடர்ச்சியாக 1,500 மெகாவாட் மின்சாரத்தைப் பெற மின்சார வாரியம் ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. இதற்காக ஒரு யூனிட்டுக்கு ரூ.31.99 முதல் ரூ.34.49 வரை செலுத்தப்பட உள்ளது. அதேபோல, மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரையிலான உச்சபட்ச மின் தேவையைச் சமாளிக்கக் கூடுதல் 2,000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த மாலை நேரக் கூடுதல் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.33.37 முதல் ரூ.37 வரை மிக அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்தியா முழுவதிலும் உள்ள மாநில மின்வாரியங்களும், மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் குறுகிய கால அல்லது நடுத்தர கால அடிப்படையில் மின்சாரத்தை வாங்கவும் விற்கவும் மத்திய மின்சார அமைச்சகம் உருவாக்கிய DEEP (Discovery of Efficient Electricity Price) ஆன்லைன் மின் ஏலத்தளத்தைப் பயன்படுத்துகின்றன.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மின்சார வாரியங்களும் இந்த 'DEEP' இணையதளம் மூலமாகவே ஏலத்தில் பங்கேற்று மின்சாரம் வாங்குகின்றன.

இந்தியாவில் உள்ள பிற மாநில மின்சார வாரியங்களுக்கும் தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கும் கூட மின் தேவை இருந்தது. அவை இந்த இணையதளத்தில் மின்சாரம் கேட்டு டெண்டர்/ஏலப் புள்ளிகளை (Tenders/Bids) கோரியிருந்தன. ஏலத்தில் மின் உற்பத்தியாளர்கள் கேட்ட விலை ரூ.30-க்கு மேல் மிக மிக அதிகமாக இருந்ததால், பிற மாநிலங்கள் அந்த அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்புக்கொள்ளாமல், ஒப்பந்தங்களை இறுதி செய்யாமல் விலை குறைப்புக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

நிர்மல் குமார்
நிர்மல் குமார்

உதாரணமாக ஆந்திரப் பிரதேச மின் ஒருங்கிணைப்புக் குழு செப்டம்பர் 9-ம் தேதியே ஏலங்களை இறுதி செய்து, ஒரு யூனிட்டுக்கு ரூ.16 முதல் ரூ.20 வரையிலான விலையில் 150 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தது. ஆனால், வரலாற்றிலேயே வேறு எந்த மாநிலமும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.33 முதல் ரூ.37 வரை கொடுத்து வாங்குவதற்கு இந்த இணையதளத்தில் ஒப்பந்தம் செய்ததே இல்லை. ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியமோ (TNPDCL) கடைசி நேரத்தில் அவசரமாக மின்சாரம் தேவைப்பட்டதால், அவர்கள் கேட்ட அந்த அதிகபட்ச விலையையே ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

மத்திய மின் உற்பத்தி நிலையங்களின் ஆண்டுக்காலப் பராமரிப்புப் பணிகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மின்சாரத்தில் சுமார் 4,000 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் காற்றாலை மின் உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் உச்சபட்ச மின் தேவை 17,000 மெகாவாட்டாகவும், தினசரி நுகர்வு 365 மில்லியன் யூனிட்டுகளாகவும் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அக்டோபரில் உச்சபட்ச தேவை 20,000 மெகாவாட்டைத் தொட்டுள்ளதோடு, தினசரி பயன்பாடும் கடந்த ஆண்டை விட 70 மில்லியன் யூனிட்டுகள் வரை அதிகரித்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

மேலும், சந்தையில் வழக்கம் போலக் கிடைக்கக்கூடிய நிலக்கரி சார்ந்த மின்சாரம் தற்போது கிடைக்கவில்லை. இதனால் எரிவாயு மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களுடன் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதில் ஒரு நன்மையும் உள்ளது. ஒப்பந்தம் செய்யப்பட்ட மொத்த மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. நாம் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவிற்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

தேவை குறைந்தால் மின்சாரத்தை வாங்காமல் நிறுத்திக் கொள்ளலாம். அதற்கான நிலையான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என்பதால், நிலக்கரி மின் நிலையங்களுடன் ஒப்பிடும்போது இந்த முறையில் இழப்பு குறைவாகவே இருக்கும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மின்வாரிய பொறியாளர் ஒருவரிடம் பேசினோம். அவர், ``தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் அக்டோபர் மாதத்தில் மின்சாரத்திற்கான தேவை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கும்போது, சந்தையில் விற்பனைக்கான மின்சாரக் கையிருப்பு குறைகிறது. மின் வர்த்தகச் சந்தையில் (Power Exchange) அன்றாட ஏல அடிப்படையில் (Day-to-day basis) தீர்மானிக்கப்படும் விலையிலேயே எந்தவொரு மாநில அரசும் மின்சாரத்தை வாங்க முடியும்; இதில் எந்த மாநில அரசும் தன்னிச்சையாக விலையை நிர்ணயிக்க முடியாது.

மின்சாரம்
மின்சாரம்

கடந்த காலங்களில் யூனிட் ரூ.20-க்கு வாங்கப்பட்ட நிலவரத்தையும் தற்போதைய சூழலையும் ஒப்பிட முடியாது. 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலக்கரியின் விலை, பராமரிப்புச் செலவு மற்றும் தற்போதைய மின் தேவையின் தீவிரத்தன்மை ஆகியவை முற்றிலும் வேறானவை. சந்தையில் கேட்கும் அளவுக்கு மின் உற்பத்தி இல்லாதபோது, அனைத்து மாநிலங்களுக்குமே கொள்முதல் விலை உயர்வது தவிர்க்க முடியாததாகிறது. மாநில அரசிடம் சொந்த மின் உற்பத்தி செய்வதற்கான போதிய உட்கட்டமைப்புகள் இருந்தபோதிலும், சில இயற்கை மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் உற்பத்தியைப் பாதிக்கின்றன.

நீர்மின் நிலையங்களில் (Hydro Power) போதிய தண்ணீர் இல்லாதபோது உற்பத்தியை அதிகரிக்க முடியாது. அனல் மின் நிலையங்களைப் பொறுத்தவரை, அவற்றின் முழு கொள்ளளவை எட்டி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சூரிய ஒளி (Solar) மற்றும் காற்றாலை (Wind) போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் 24 மணி நேரமும் ஒரே சீராகக் கிடைக்காது. குறிப்பாக, சூரிய ஒளி மின்சாரம் பகலில் மட்டுமே கிடைக்கும் என்பதால், இரவு நேர உச்சக்கட்ட மின் தேவையின்போது ஏற்படும் தட்டுப்பாட்டை (Shortfall) சரிசெய்ய வெளிச்சந்தையை அல்லது அவசரக் கொள்முதலை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மின்சாரத்துறை

மின்வாரியத்திற்கு கடன் சுமை அதிகரிப்பதற்கு வெளிச்சந்தையில் ரூ.30-க்கு மேல் கொடுத்து வாங்கினாலும், பொதுமக்களுக்கு வழக்கமான மானிய விலையிலேயே விநியோகிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக அதிக விலைக்கு விற்பனை செய்யும் தொழிலை மேற்கொள்கின்றன. ஆனால், அரசு லாபத்தைப் பார்க்காமல், பொதுமக்களுக்குத் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதாலேயே இந்த நிதி இழப்பும் கடன் சுமையும் உருவாகிறது.

அரசு சார்பில் புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குவதில் பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டியுள்ளதுடன், பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் நிலவுகின்றன. சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance), நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் கட்டுமானப் பணிகளை ஒப்பந்ததாரர்கள் குறித்த காலத்தில் முடித்துத் தராதது போன்றவை அரசுத் திட்டங்களைத் தாமதப்படுத்துகின்றன.

தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையம்

அதேவேளையில், தனியார் நிறுவனங்கள் பேட்டரி சேமிப்பு (BESS) போன்ற நவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வைத்துக்கொண்டு, மின் தேவை மற்றும் விலை உச்சத்தில் இருக்கும் (Peak Hours) நேரங்களில் மட்டுமே உற்பத்தியை மேற்கொண்டு அதிக லாபம் ஈட்டுகின்றன. மின் தேவை குறைந்த நேரங்களில் அவர்கள் மின் நிலையங்களை இயக்குவதில்லை. அரசுத் தரப்பில் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் (Long-term PPAs) போடப்படும்போது குறைந்த விலைக்கு மின்சாரம் கிடைக்கும் என்றாலும், திடீரென ஏற்படும் 10 நாட்கள் அல்லது ஒரு வார கால குறுகிய கால மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அவசரக் கொள்முதல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை."எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். அவர், ``கோடைகாலங்களான மே மற்றும் ஜூன் மாதங்களிலேயே மின்சார நுகர்வு உச்சத்தில் (Peak Level) இருக்கும். அதற்குப் பிந்தைய காலங்களில் வழக்கமாக நுகர்வு குறையுமே தவிர, திடீரென அதிகரிக்க வாய்ப்பில்லை. நமது மாநிலத்தில் வழக்கமாகத் தேவைப்படும் மின்சாரம் 20,500 MW முதல் 21,000 MW வரை மட்டுமே. தற்போதைய சூழலில் தேவை 22,000 MW எனில், அதிகபட்சமாக 1,000 MW வரை மட்டுமே அதிகரித்திருக்க முடியும்.

சோலார்

அப்படி இருக்கும்போது, குறுகிய காலத்தில் 1,500 MW முதல் 3,000 MW வரை திடீரெனத் தேவை எவ்வாறு அதிகரிக்கும்? புதிய தொழிற்சாலைகள் எதுவும் பெரிய அளவில் தொடங்கப்படாத சூழலிலும், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வரும் நிலையிலும் இந்த திடீர் நுகர்வு உயர்வு எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறது.

சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ18 முதல் ரூ.25 வரை ஏலம்/டெண்டர் மூலம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது, அவசர அவசரமாக ரூ.35 வரை அதிக விலை கொடுத்துக் வாங்குவது ஏன்? மின்சாரத் தேவை வழக்கமான ஒன்றாக இருந்தால், அரசு ஏன் முன்னதாகவே திட்டமிடவில்லை?

நாங்கள் எவ்வளவு அதிக விலைக்கு வாங்கினாலும், மக்களுக்கு மானிய விலையில்தான் மின்சாரத்தை வழங்கி வருகிறோம் என்ற நிர்வாகத்தின் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிக விலைக்கு (எ.கா ரூ.35) மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு குறைந்த விலைக்கு (எ.கா ரூ.10) கொடுக்கும்போது ஏற்படும் ரூ.25 இழப்பு என்பது அரசின் கஜானாவிலிருந்தே செல்ல வழிகிறது. இந்தத் தொகையை முதல்வர் விஜயோ, அமைச்சர் நிர்மல் குமாரோ தங்கள் சொந்தப் பணத்திலிருந்து தரப்போவதில்லை; இறுதியில் வரிகள் மூலமாக மக்கள் தலையில்தான் இந்த கடன் சுமை விடியும்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இந்த விவகாரத்தில் இரண்டு முக்கியமான பின்னணி முறைகேடுகள் புலப்படுகின்றன. நமது சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தியைக் வேண்டுமென்றே குறைத்துவிட்டு, 2,500 MW அளவிற்குப் புதிய டெண்டர்களை வெளியிடுகின்றனர். நியாயமான குறைந்த விலையைப் பெற குறைந்தபட்சம் 15 நாட்களாவது அவகாசம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் 5 நாட்களில் டெண்டரை முடிப்பது, யாருக்கு இந்த ஒப்பந்தத்தைக் கொடுக்க வேண்டும் மற்றும் எத்தனை மெகாவாட் வாங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.

சொந்த மின் உற்பத்தியைக் குறைத்து, குறுகிய கால டெண்டர் மூலம் அதிக விலைக்குக் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வது பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும். இந்த நிர்வாகக் குளறுபடிகளும் முறைகேடுகளும் இறுதியில் மக்கள் மீதுதான் பெரும் பொருளாதாரச் சுமையாக வந்து சேரும்." என்றார்.

"மோடியும், ஷாவும் பயப்படும் காலம் இது" - ராகுல் காந்தி தேநீர் விருந்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்... சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) முறைகேடு நடந்துள்ளது என்று இந்தியா கூட்டணி தொடர்ந்து போராட்டத்தையும், எதிர்ப்புக் குரலையும் முன்னெடு... மேலும் பார்க்க

"ராகுல் என்னை தள்ளிவிட்டாரா? எங்களுடையது அன்பும், நம்பிக்கையும் கொண்ட பிணைப்பு!" - DK சிவக்குமார்

கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 12), வாக்காளர் பட்டியலில் முறைகேடு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்கிற மனுவோடு டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றனர் இந்தியா கூட... மேலும் பார்க்க

மம்தா பானர்ஜியைக் குத்திக் கொல்ல முயற்சி? கத்தியை மறைத்து வைத்திருந்த பெண் கைது; என்ன நடந்தது?

கொல்கத்தாவில் உள்ள காளிகாட் பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு வெளியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி துர்கா பூஜை பந்தல் ஒன்றைத் திறந்து வைக்க வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பெண் ஒருவரும் வந்திருந்தார... மேலும் பார்க்க

எல்.முருகன் ராஜினாமா: ``முதலில் நாடு, அடுத்து கட்சி, கடைசியாக சுயநலம்" - பிரதமர் மோடிக்கு கடிதம்

மத்திய இணை அமைச்சர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். 2017 முதல் 2020 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராகப் பணியாற்றிய எல்.முருகன், கேர... மேலும் பார்க்க

Vijay: முதல்வர் விஜய்க்கு ஆந்திராவில் உற்சாக வரவேற்பு; இரு மாநில முதல்வர்களும் பேசிக்கொண்டது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (அக்-13) ஆந்திரப் பிரதேசத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். மதியம் 3:00 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், மாலை 4:00 மணிக்கு விஜய... மேலும் பார்க்க