"இயக்குநராவது குறித்து கனவில்கூட நினைத்ததில்லை" - அமிதாப் பச்சன் சொல்லும் காரணம்...
திருநங்கைகள் குறித்து சர்ச்சை பேச்சு: "நாய்கூடத்தான் குட்டி போடுது” - கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்
கடந்த செப்டம்பர் 25-ம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் வெளியானது.
இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை விமர்சித்து தமிழ் சினிமா இயக்குநர் ஓருவர் நேர்காணல் ஒன்று தந்திருந்தார்.
அந்த நேர்காணலில் இடம்பெற்றிருந்த கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

வெறுப்பைப் பரப்பிக்கொண்டே...
அந்த வீடியோவில், “முதலில் ‘டோரதி’ படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததற்கு அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னும், பின்னும் ஒரு குறிப்பிட்ட குழுவினர் திட்டமிட்டு வெறுப்பைப் பரப்பிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஏனென்றால் ஒரு திருநங்கையின் கதையை மையப்படுத்தி அது வெற்றிப் படமாகிவிடக்கூடாது என்பதில் அவர்கள் தீவிரமாகவும் தெளிவாகவும் இருந்தார்கள்.
ஆனால் அதையும் தாண்டி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதால், அவர்களை நான் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
கல்யாணம் பண்ணி நீங்க என்ன பண்ணப் போறீங்க?
ஆனால் நேற்றைய தினம் என் குழுவினர் ஒரு வீடியோவைக் காட்டினார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் வேதனையாகவும் கோபமாகவும் இருந்தது.
திரைப்பட இயக்குநர் ஒருவர், இந்தப் படத்தைப் பற்றிய விவாதத்தில் நேகா என்ற திருநங்கை அக்காவோடு ஏதோ ஒரு விவாதத்தில் ஈடுபடுகிறார்.
படத்தைப் பற்றிப் பேசுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் அந்த அக்காவிடம், “கல்யாணம் பண்ணி நீங்க என்ன பண்ணப்போறீங்க? கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் என்ன ஆகப்போகுது?” என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார்.

அதற்கு அந்த அக்கா, ஒரு ஆண் ஒரு திருநங்கையைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டால், இருவரும் அன்பைப் பகிர்ந்துகொண்டு சந்தோஷமாக வாழப்போகிறார்கள், ஒரு தோழமை இருக்கும் என்று மிகத் தெளிவாக விளக்குகிறார்.
ஆனால் அவர் திரும்பத் திரும்ப அதே கேள்வியை வலியுறுத்தி, “என்ன பண்ணப்போறீங்க? கல்யாணம் பண்ணி என்ன பண்ணப்போறீங்க?” என்று கேட்டு, இறுதியாக “உங்களால் இயல்பாக உடலுறவு வைத்து ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாது அல்லவா?” என்ற புள்ளிக்கு வருகிறார்.
நாயும் கூட செய்கிறது...
அது கேள்விகூடக் கிடையாது. ஒரு பயங்கரமான அவமானம். அதை அவர்களின் முகத்திற்கு நேராகவே ஒரு தொலைக்காட்சி அல்லது யூடியூப் தளத்தில் முன்வைக்கிறார்.
அனைவரையும் சமமாக மனிதர்களாகப் பாருங்கள் என்றுதான் நாம் கூறுகிறோம். ஆனால் அதையும் மீறி ஒரு பொதுத் தளத்தில் இவ்வளவு திருநங்கை எதிர்ப்புக் கருத்துக்களைப் பேச முடிகிறது என்றால், அது அந்தத் திருநங்கை அக்கா மீது நடத்தப்பட்ட அப்பட்டமான உளவியல் ரீதியான தாக்குதலாகும்.
நான் இதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இயக்குநர் அவர்களே, நீங்கள் படத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
ஆனால் மனிதநேயம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? திருமணம் என்றால் உடலுறவு வைத்து குழந்தை பெற்றுக்கொள்வது மட்டும்தான் வாழ்க்கையின் இலக்கா? அதை நாயும்கூடச் செய்கிறது, குட்டி போடுகிறது.
I Strongly Condemn.... https://t.co/u8n6StgXpg
— karthik subbaraj (@karthiksubbaraj) October 13, 2026
ஆணுக்கும், பெண்ணுக்கு குழந்தை பிறக்காமல் போகலாம்..
அதுதான் மனிதர்களுக்கான இறுதி இலக்கா? அவர்கள் “நாங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்டு சந்தோஷமாக வாழ்வோம்” என்று சொல்லும்போது, “உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது” என்று கேட்கிறீர்கள்.
இயல்பான ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ கூடப் பல சிக்கல்களால் குழந்தை பிறக்காமல் போகலாம். அதற்காக அவர்கள் வாழத் தகுதியில்லாதவர்களா அல்லது ஒன்றாகச் சந்தோஷமாக இருக்கத் தகுதியில்லாதவர்களா?
இது மிகவும் கொடூரமான திருநங்கை எதிர்ப்பு உரையாடலாகும்.
ஒரு மத ரீதியாகவோ சாதி ரீதியாகவோ தவறான கருத்துக்களைப் பேசினால் எப்படிச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பார்களோ,
அதேபோல பாலினப் பாகுபாட்டோடு பேசி ஒருவரை உளவியல் ரீதியாகத் தாக்கி அவமானப்படுத்துவதற்கும் நடவடிக்கை கொண்டுவர வேண்டும்.
ஒருவரால் இவ்வளவு பகிரங்கமாக இத்தகைய கருத்துக்களைப் பேச முடிவதையும், அதை நாம் கடந்து போவதையும் நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
எனவே, அவ்வாறு பேசிய நபரை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். இனிமேல் இப்படிப் பேசாதீர்கள். மற்றவர்களையும் பேச அனுமதிக்காதீர்கள்.
ஏனெனில் எதிரில் இருப்பவரும் ஒரு மனிதர்தான். ஒரு மனிதராக மதித்து, தொலைக்காட்சி நேரலையில் அவர்களைக் காயப்படுத்துவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.




















