’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு
’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு
கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் வரத்தும் குறைவாக இருக்கிறது. 2017- 18 ஆண்டிலும் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. 2019-யிலும் அதே நிலை தான் இருந்தது. மேட்டூர் அணையில் தண்ணீர் கூடுதலாக இருந்தால் மட்டும்தான் திறக்க முடியும். இதை மனதில் வைத்து பிரதமருடன் முதல்வர் பேசும்போது, நமக்குத் தேவையான நீர் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். டெல்டா பகுதி விவசாயிகளுக்காக கூடுதல் தண்ணீர் அணைகளுக்கு விட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார்.
ஆலயத்திற்கு எல்லோரும் செல்வது வழக்கம், விஜய்யும் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று இருக்கிறார். எடப்பாடி ஆட்சியிலும் மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. இந்த மாதத்தில் கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது. மழை குறைவாக இருக்கும் காரணத்தால், வெப்பம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக மின்சாரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு குடும்பத்தில் ஒரு ஏசி இருந்தது. தற்போது இரண்டு மூன்று என ஏசி இருக்கிறது. கூடுதலாக மின்சாரம் தற்போது தேவைப்படும் நிலையில், தி.மு.க ஆட்சியில் டெவெலப்மென்ட் செய்யப்படவில்லை.
சென்னையில் ஐந்தாண்டு காலத்தில் ஏழாயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு, மின்சாரத்தை மக்களுக்கு பயன்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள், அதற்கான கட்டுமான பணிகள் செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல் மொத்தமாக கடந்த ஐந்தாண்டு காலத்தில் 627 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்திருக்கின்றனர். சென்னையை பொறுத்தவரை 3500 மெகாவாட்டிற்கு மட்டுமே கொள்திறன் இருக்கிறது. ஆனால் 5000 மெகாவாட் மின்சாரம் மக்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். புதிதாக மக்களுக்கு தேவையான பணிகளை கடந்த ஆட்சியில் செய்யவில்லை
உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திற்கே 11 மணிக்கு தான் வருவார். அங்குள்ள வருகை பதிவேட்டை பார்த்தால் தெரியும். அவருடைய துறைக்கே அப்போதைய முதல்வர் ஸ்டாலின் தான் முன்மொழிந்தார். இதை எல்லாம் உதயநிதி சொல்லக் கூடாது. இடைத்தேர்தலை பொறுத்தவரை முடிவு செய்ய காலம் இருக்கிறது. அப்போது யாருக்கு அந்த இடத்தை வழங்குகிறார் என்பது முதல்வர் விஜய் முடிவு மேற்கொள்வார். எங்களை பொறுத்த வரையில் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். தேர்தல் அறிவித்த பிறகு என்ன முடிவு எடுக்கிறோம் என்பதை உங்களிடம் சொல்கிறோம்” என்றார்.
















