முதல்வர் விஜய்-யின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்… அரசாணை வெளியீட்டில் எழும் கேள்விகள்!
தமிழக முதல்வர் விஜயின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், அந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகிய விதம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகராக இருந்த காலத்திலிருந்தே விஜயின் நெருங்கிய உதவியாளரும் மேலாளருமான ஜெகதீஷ் பழனிசாமி, நடிகர்கள் நடிகைகளுக்கான நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான The Route-இன் நிறுவனராக அறியப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளாக விஜயின் திரைப்பட மற்றும் பொது நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வந்த அவர், தவெக தொடங்கப்பட்ட பிறகும் விஜயின் மேலாளராக தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முதல்வர் விஜயின் பிறந்தநாளான நேற்று , அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ள ஜெகதீஷ் பழனிசாமி, தாம் முதல்வரின் தனிச் செயலாளராக (அரசியல்) நியமிக்கப்பட்டுள்ளதாக அவரே அறிவித்தார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற சில மணி நேரங்களிலேயே, அதற்கான அரசாணையும் தமிழ்நாடு அரசால் வெளியாகியது.
ஆனால், வெளியிடப்பட்ட அரசாணை மே 12-ஆம் தேதி தேதியிடப்பட்டிருந்தது. நியமனம் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக கடந்த நிலையில், அதுகுறித்த அரசாணை ஜெகதீஷ் பழனிசாமியின் தனிப்பட்ட அறிவிப்புக்குப் பிறகே பொதுவெளியில் வெளியானது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வரின் நெருங்கிய உதவியாளருக்கு அரசு பதவி வழங்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, அதுகுறித்த தகவல் முதலில் அதிகாரப்பூர்வ அரசு வழிகளில் அல்லாமல், சமூக வலைதள பதிவு மூலம் வெளிவந்ததும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. வெளிப்படையான நிர்வாகத்தை வலியுறுத்தி வந்த தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக, முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராக ராதன் ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்த நிலையில், அந்த நியமனத்துக்கான அரசாணை பின்னர் திரும்பப் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ராதன் பண்டிட் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகிய இரண்டு நியமனங்களுகான அரசாணை ஒரே தேதியில் நடைபெற்றிருந்தாலும் ராதன் பண்டிட் அரசாணை மட்டுமே அப்போது வெளியானது.

தமிழக அரசியலில் முதல்வர்களின் நெருங்கிய உதவியாளர்கள் அரசு பதவிகளில் நியமிக்கப்படுவது புதிய நடைமுறை அல்ல. கடந்த திமுக ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் உதவியாளராக இருந்த தினேஷ்குமார், முதல்வரின் தனிச் செயலாளராக அரசு பதவியில் நியமிக்கப்பட்டு, ஆட்சி முழுவதும் அந்தப் பொறுப்பில் செயல்பட்டார் ( தினேஷ்குமார் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை கடைசி வரை வெளியாகவில்லை) இதனால் முதல்வரின் நம்பிக்கைக்குரிய நபர்களுக்கு இதுபோன்ற பொறுப்புகள் வழங்கப்படுவது தமிழக அரசியல் நிர்வாகத்தில் வழக்கமான நடைமுறையாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், ஜெகதீஷ் பழனிசாமி நியமனத்தைச் சுற்றியுள்ள விவாதம், நியமனத்தின் தன்மையை விட அதுகுறித்த தகவல் வெளியிடப்பட்ட விதம் மற்றும் அரசாணை வெளியீட்டின் காலதாமதம் தொடர்பாகவே அதிக கவனம் பெற்றுள்ளது.















