ஈரோடு: போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பூங்கா! | Photo Album
மேகதாது விவகாரம்: ``முதல்வர் விஜய்யின் இந்தப் போக்கு பெரிய பிரச்னையைக் கொண்டுவரும்" - துரைமுருகன்
`மேகதாதுவில் அணைக்கட்டுவது என் உரிமை. இதற்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் எனக்கு கவலையில்லை' என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்தித்துப் பேசக்கூடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``கர்நாடகா, அணை கட்டுவேன் எனச் சொல்கிறது. எனவே நான் டெல்லிக்குச் சென்று பிரதமரையோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரையோ சந்திப்பேன் என முதல்வர் விஜய் கூறவே இல்லையே. நீங்களாக ஏன் அப்படியான செய்திகளை பரப்புகிறீர்கள். மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு எங்களால் என்ன செய்ய முடியும்? எங்கள் தலைவர் தளபதி, முதல்வரிடம் 'அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்' என்று வலியுறுத்தினார்.
ஆனால், முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுக்கிறார். அவர் எதற்காக டெல்லிக்குப் போகிறார் என்பதையே அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர் எதற்காகப் போனார் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு ஜோசியரைத்தான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. டெல்லி மட்டுமல்ல, கர்நாடகா, ஆந்திரா என அவர் எங்குச் சென்றாலும் அவர் எதற்காக சென்றார் என யாருக்கும் இப்போதுவரை தெரியாதுதானே? அணைக் கட்டுவேன் என சிவக்குமார் அழுத்தமாகச் சொன்னாலும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி எந்தக் கொம்பனாலும் அங்கே அணை கட்ட முடியாது. அதே நேரம், அவரின் பேச்சுக்கு ஒன்று எதிர் சவால் விட வேண்டும்.
இல்லையென்றால், அந்த அமைதியை ஆக்கப்பூர்வமான முறையில், சட்டமன்றத்தில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களை அழைத்து, `நிலைமை இவ்வாறு இருக்கிறது, நான் டெல்லிக்குச் செல்கிறேன். என்ன செய்யலாம்?' என ஆலோசிக்க வேண்டும். இது எதையும் செய்யமாட்டார் என்றால், இந்த மௌனத்தினுடைய விளைவாக தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கை பொய்யாகப் போய்விடும். உச்ச நீதிமன்றம் அணை கட்டிக்கொள்ளுங்கள் என்று எந்தத் தீர்ப்பையும் கொடுக்கவில்லை. ஒரு வழக்கில் கேள்வி கேட்கும்போது, `தண்ணீர் இல்லை என்றால், சொந்தக்காரன் அணை கட்டினால் என்ன?' என்று நீதிபதிகள் ஒரு கருத்து மட்டுமே தெரிவித்தார்கள். அது தீர்ப்பு அல்ல.
அப்படியே தீர்ப்பு கொடுத்தாலும், எல்லோரும் அதை ஏற்றுக்கொள்கிறார்களா என்ன? முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள்தானே தீர்ப்பு சொன்னார்கள்? அதை ஒத்துக்கொள்கிறார்களா? காவிரியில் எங்களுக்குத் தர வேண்டிய தண்ணீரை இதுவரை சரியாகக் கொடுத்திருக்கிறார்களா? தமிழக மக்களுக்கு இதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். முதலமைச்சருடைய இந்தப் போக்கு, இவ்விஷயத்தில் ஒரு பெரிய பிரச்னையைக் கொண்டு வந்துவிடும் என்று நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தில் தொடர்ச்சியாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழ்நாட்டின் மாநிலங்களவைப் பிரதிநிதி தமிழ்நாட்டுக்காரர் இல்லையே. அப்படியிருக்கும்போது, இந்த விஷயத்தில் தமிழ்நாடு மக்களுடைய உரிமையை அவர் எப்படிப் பாதுகாப்பார்?" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb













