ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
"மோடி அரசின் அடுத்த அரசியல் ஆயுதம் சென்சார் போர்டு"- விஜய்க்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் எம்.பிக்கள்
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.
ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது.
நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி உஷா அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாக்கூர், எம். பி ஜோதிமணி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.
ஆதரவு தெரிவித்த மாணிக்கம் தாக்கூர்
இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாத போது, அதை நம்பிக்கை உடன் எதிர்கொள்வதற்கு பதிலாக மோடி – ஷா அரசு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில் சினிமா துறையும் தற்போது அவர்கள் கைகளில் சிக்கிக் கொண்டது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(1)(a) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆனால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களின் கீழ், பேச்சு மற்றும் கருத்து சுதந்திர நாளுக்கு நாள் ஒடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

லிஸ்டில் இணைந்த சென்சார் போர்டு
வழக்கமாக எதிக்கட்சியினரை அடக்குவதற்கு அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளை தான் ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது அந்த லிஸ்டில் சென்சார் போர்டும் சேர்ந்து கொண்டது. இதன்மூலம் சினிமாவையும், அதன் கருத்துகளையும் கட்டுப்படுத்த பார்க்கின்றனர். மத்திய அரசின் அமைப்புகள் பொதுவாக ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
ஆனால் தற்போதைய சூழலில் மக்களை அச்சுறுத்தும் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரங்களை 'இதுதான் கலாச்சாரம்' என்ற பெயரில் தவறாக பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர்.
சினிமாவிற்கு அரசியல் ரீதியாக தடையில்லா சான்று தேவையில்லை. அதற்கு அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பு தான் முக்கியம். அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிடப்படும் போது ஜனநாயகம் ஒருபோதும் நிலைத்திருக்காது" விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார்.
ஜோதிமணி பதிவு
ஜோதிமணி வெளியிட்டிற்கும் பதிவில், " ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு, விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும் ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது.
அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது.

மோடி அரசின் அரசியல் ஆயுதம்
அமலாக்கத்துறை,சிபிஐ ,வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.
அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன். என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு.
ஒரு திரைப்படத்தை ஏற்பதும், மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது. ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள், காட்சிகள் தொலைக்காட்சி, யு டியூப், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது.
கடுமையாக எதிர்க்க வேண்டும்!
இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர். இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம். பெண்களை ஆபாசமாகப் பேசுவது, சித்தரிப்பது, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது.
ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விசயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை.
சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்று ஆதரவாக பதிவிட்டிருக்கிறார்.

சான்றிதழை கொடுத்து விடலாம்!
அதேபோல விஜய்க்கு அதிரவாக நேற்று (ஜன.7) சீமானும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். அதாவது " ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழை கொடுத்து விடலாம். அதன் தெலுங்கு பதிப்பை நான் பார்த்திருக்கிறேன். நெருக்கடி தரும் அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை. எனவே தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை" என்று விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.















