`அய்யோ அத மறந்துட்டனே.!' - 8 மணிநேர பயணத்துக்குப் பின் ஏறிய டெல்லிக்கே திரும்பிய...
"ராஜசேகரனின் அதிகாரபூர்வ மனைவி நான். ஆனா திருமண பதிவு சான்றிதழ் நகல் தர இயலாதுனு சொல்றாங்க!" - தாரா
மறைந்த நடிகர் ராஜசேகரனின் மனைவி தாரா, தன்னுடைய திருமண பதிவு சான்றிதழின் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், நகல் தர இயலாது என பதில் தந்திருக்கிறது பதிவுத்துறை.
ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜசேகரன் கோவிட் காலத்தில் மரணமடைந்தார். இறக்கும் போது சென்னை வடபழனியில் வங்கியில் கடன் வாங்கி வீடு ஒன்றை வாங்கியிருந்ந்தார். திடீரென அவர் இறந்த நிலையில், அவரது மனைவி தாராவால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகவே, வீட்டை வங்கி ஏலம் விட்டு விட்டது.
தொடர்ந்து தனக்கு குடியிருக்க வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒரு வீடு ஒதுக்கித் தரவேண்டி முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மனு அளித்து வந்தார்.
இது தொடர்பாக விகடன் தளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.
முதல்வர் அலுவலகமும் அந்த மனுக்கள் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறப்பட்டது.
ஆனாலும் எந்தவொரு உதவியும் தாராவுக்கு கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில் கடந்த மாதம் தமிழக அரசின் திரைக்கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ராஜசேகரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த விருதை வாங்கச் சென்ற இடத்தில் விருதை வழங்கிய துணை முதல்வர் உதயநிதியிடமே தன் நிலைமையைச் சொன்னார் தாரா.
தொடர்ந்து உதயநிதியுமே 'இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது.
அதன் பிறகும் கூட எதுவும் நடக்கவில்லை.
'என்ன காரணத்தினால் தாராவின் கோரிக்கை கண்டுகொள்ளப் படாமலேயே இருக்கிறது' என அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, 'ராஜசேகரன் - தாரா திருமணம் மிகவும் தாமதமாக நடந்திருக்கிறது. தாராவை அவர் திருமணம் செய்து கொண்டது கூட திரையுலகிலேயே பலருக்கும் தெரியவில்லை. முதல்வர் அலுவலகத்தில் இருந்து அவரது மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது நிஜம்தான். ஆனால் அவர் ராஜசேகரனின் சட்டபூர்வ மனைவிதானா என்பது குறித்த தெளிவான பதில் கிடைக்காததாலேயே அவரது கோரிக்கை மனு எவ்வித நடவடிக்கையுமில்லாமல் கிடக்கிறது' என்றார்கள்.

தாராவிடம் நாம் இதுகுறித்துக் கேட்ட போது,
'நாங்க கல்யாணம் செய்துகிட்டதுமே அதை பதிவு செய்திடலாம்னு அவர்தான் சொன்னார். அவருடைய குடும்பத்துக்காரங்களால் எனக்கு வரும்காலத்தில் ஏதாவது பிரச்னைகள் வரலாம்னே பதிவு செய்யணும்னு சொன்னார். அதனால பதிவு செய்து சர்டிபிகேட்டும் வாங்கி வச்சிருந்தேன்.
வங்கி வீட்டை ஜப்தி பண்ணினப்ப என்னுடைய பொருட்கள் சிலவற்றைத் தூக்கிட்டுப் போனப்ப சில டாகுமென்டுகளையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க.
வங்கி நடவடிக்கைக்குச் சம்மதம்னு கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு எல்லாத்தையும் வாங்கிக்கோங்கனு சொன்னாங்க. இப்பவும் கூட வீடு திரும்பவும் எனக்குக் கிடைச்சிடாதானு ஒரு நப்பாசையில நான் கையெழுத்துப் போட வரமாட்டேன்னு இருக்கேன்.
இந்தச் சூழல்லதான் முதல்வர் அலுவலகத்துல இருந்து இந்தா அந்தானு கூப்பிட்டாங்க. கடைசியில ஒண்ணும் நடக்கலை. அப்பதான் 'நீங்க அவருக்கு சட்டபூர்வ மனைவியாங்கிற சந்தேகம் வந்துதான் உங்க மனு கிடப்பிலேயே கிடக்கு'னு எனக்கும் சொன்னாங்க.

விசாரிக்க வந்தவங்க என்னையே கேட்டிருக்கலாம். நானே சர்டிபிகேட் காட்டியிருப்பேன். அதை விட்டுட்டு யார்கிட்ட கேட்டங்களோ தெரியல.
ஊரெல்லாம் போய் 'ராஜசேகர் பொண்டாட்டி நான்தான்'னு நோட்டிசா அடிச்சு ஒட்ட முடியும்?
ஒருவழியா அவருடைய அதிகாரபூர்வ மனைவி நாந்தான் அதிகாரிகளுக்குப் புரிய வைக்கிறதுக்குள்ளேயே தேர்தல் வந்திடுச்சு. இனி இந்த விஷயத்துல எந்த நடவடிக்கையும் எடுப்பாங்களா தெரியலை.
இருந்தாலும், சான்றிதழ் கையில வச்சுக்கலாமேனு பதிவு செய்த அலுவலத்தில் போய் நகல் கேட்டேன். எடுத்துத் தர்றோம்னு சொன்னவங்க பத்து நாள் கழிச்சு 'நீங்க கேட்ட திருமண பதிவு சான்றிதழ் நகல் அடங்கிய கோப்புகள் மிக்ஜாம் புயல் காரணமாக சிதிலமடைந்ததால் சான்றிட்ட நகல் வழங்க இயலாத நிலை உள்ளது'னு எழுதிக் கொடுத்துட்டாங்க.
சர்ட்டிபிகேட்டே இல்லனு சொல்லாம 'சேதமாகிடுச்சு'னு சொன்னவரைக்கும் ஆறுதல் அடைஞ்சபடி வந்துட்டேன். இனி புது அரசாங்கம் வந்த பிறகாச்சும் என் கோரிக்கை நிறைவேறுமா தெரியலை'' என்கிறார் அவர்.





















