`காங்கிரஸின் 48 மணிநேரம்' ; மாறியதா ராகுல் மனநிலை? - மாற்று திட்டத்துடன் தி.மு....
ராஜூமுருகன் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் பாராட்டிய குறும்படம் இது! - `லிட்டில் விங்ஸ்' சுவாரஸ்யம்
இயக்குநர்கள் மணிரத்னம், ராஜூமுருகன் ஆகியோரின் உதவியாளரான நவீன் இயக்கியிருக்கும் 'லிட்டில் விங்ஸ்' என்ற குறும்படத்தை ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார். பல்வேறு சர்வதேச விழாக்களில் இந்த விருதுகளை வென்றிருக்கும் இந்த குறும்படம் குறித்து நவீனிடம் பேசினோம்.

ஃபெஸ்டிவல்களில் `லிட்டில் விங்ஸ்'
`` 'லிட்டில் விங்ஸ்'க்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைச்சிருக்கறது சந்தோஷமா இருக்கு. இந்த குறும்படத்துக்கு 71வது தேசிய விருதில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும், கேரள அரசின் சர்வதேச டாகுமெண்ட்டரி, குறும்பட போட்டியில் சிறந்த படமாக தேர்வானது தான் எனக்குள் பெரிய நம்பிக்கையை விதைச்சது.
ஏன்னா, பெரிய பெரிய இயக்குநர்களோட படைப்புகளுக்கு மத்தியில் என் குறும்படத்துக்கும் பெரிய அங்கீகாரம் கிடைச்சதுனால என்னோட பாதை சரியானதாக இருக்குனு சந்தோஷமா இருந்தது. இந்த மாதிரி ஃபெஸ்டிவல்கள்ல நம்ம படங்கள் தேர்வாகும் போது, அந்த வட்டத்துக்குள் நம் மீது ஒரு பெரிய வெளிச்சம் விழுந்துடும். அவங்களே பல விழாக்களுக்கு நம்ம குறும்படத்தை திரையிட கேட்டு வாங்கி உற்சாகப்படுத்துவாங்க.
கோவா திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா கேட்டகிரியில் தேர்வான ஒரே குறும்படம் இதுதான். அதைத் தாண்டி மும்பை திரைப்பட விழாக்கள்லேயும் தேர்வானது. ஃபிலிம் கிரிட்டிக்ஸ் ஆஃப் இந்திய விழாவிலும் 5 பிரிவுகள்ல தேர்வானது. வெளிநாட்டில் சிகாகோவில் நடந்த விழாவில் ரன்னர் அப் விருதை வென்றோம். இப்ப ட் ரீம் வாரியர் நிறுவனம் வெளியிடுறாங்க.

எழுத்தாளர் கந்தர்வனுடைய சிறுகதையான 'சனிப்பிணம்' படிச்சதும் அதை திரைக்கதையாக எழுதிப் பார்க்க விரும்பினேன். ஏன்னா, அந்த கதையே ஒரு சினிமாவுக்கான மெட்ரீயலாக இருந்தது. நான் திரைக்கதை எழுதி முடிச்சதும் என் நண்பர்கிட்ட காண்பிச்சேன். அவர் அதை சில திரைக்கதைகளுக்கான போட்டிகளுக்கு அனுப்பி வச்சா, அதன் மூலமாகமாகவும் இந்த கதையை படமாக்குவதற்கு வேண்டிய பணம் கிடைக்கும்னு சொன்னார். நானும் போட்டிகளுக்கு அனுப்பினேன். அதில் தெற்காசிய அளவிலான திரைக்கதைக்கான போட்டிகள்ல முதல் பரிசை வென்றதுடன், அதை குறும்படமாக எடுப்பதற்கு சில ஆயிரம் கென்னடியன்கள் டாலர்கள் தொகையையும் பரிசாக கொடுத்தாங்க.
ஆனா, அந்த பொருட்செலவுல எடுக்க முடியுமானு யோசிக்கையில் தான் இயக்குநர் ராஜூமுருகன் கைகொடுத்ததுடன், இணை தயாரிப்பாளராகவும் ஆனார். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற சந்திரா என்ற மணிமேகலை, முக்கிய கதாபாத்திரம் செய்திருக்காங்க. வீதிநாடக கலைஞர் காளிதாஸ், ராம்ஜி ஆகியோரும் நடிச்சிருக்காங்க.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குரங்கணியிக்கு அருகில் உள்ள ஒரு இடம் என்னை ரொம்பவே கவர்ந்தது. என்னோட சொந்த ஊர் போடிநாயக்கனூர் என்பதால் நண்பர்களோடு பைக்கில் சுற்றும்போது பீச்சாக்கரை என்ற இடத்தில் ஒரு லொக்கேஷனை கண்டுபிடிச்சேன். என் குறும்படத்துக்கான லொக்கேஷன் ஆக இருந்தது. ஒரு மலைச்சரிவுல இடிந்த ஒரு வீடு. ரெண்டு பேர் தனிமையாக வாழக்கூடிய ஒரு காட்சிக்கு இந்த வீட்டை விட சிறந்த ஒரு இடம் வேறு எங்கும் இல்லை என்பதால், அங்கேயே படமாக்கினேன். நடிகர்களை தாண்டி ரெண்டு சேவல், கோழிக்குஞ்சு ஆகியவையும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. கொரோனா காலகட்டம், மழை என நிஜ சூழலையே கதையிலும் கொண்டு வந்துட்டேன்.
என்னோட பூர்வீகம் தேனி பக்கம் உள்ள போடிநாயக்கனூர். கமர்ஷியலையும் தாண்டி ஒரு படைப்பாக மக்களிடம் நிற்கும் படங்களை கொடுத்த இயக்குநர்கள்கிட்ட உதவியாளரா சேர விரும்பினேன். எனக்கு முதலில் வாய்ப்புக் கொடுத்தவர் ராஜூமுருகன் சார். அவர்கிட்ட என்னை சேர்த்துவிட்டவர் எழுத்தாளர் பவா செல்லத்துரை.

'ஜோக்கர்'ல இருந்து 'ஜப்பான்' வரை ராஜூமுருகன் சார்கிட்ட இருந்தேன். ரெண்டு வருஷங்களுக்கு முன்னரே'லிட்டில் விங்ஸ்'சை எடுத்துட்டு விழாக்களுக்கு அனுப்பி வைக்க ஆரம்பிச்சிட்டேன். 'ஜப்பான்' சமயத்துல அதோட தயாரிப்பாளரான பிரகாஷ் சார், பார்த்துட்டு என்னைக் கூப்பிட்டு பேசினார். அவரும் இலக்கியங்களை விரும்பி வாசிக்ககூடியவர். இப்ப நான் மணிரத்னம் சார்கிட்ட உதவியாளர் ஆகியிருக்கேன். சமீபத்தில் இந்த குறும்படத்தை பார்த்த மணி சார் என்னை பாராட்டினது சந்தோஷமா இருக்கு'' என்கிறார் நவீன்.


















