`வேலூர் தவெக: மும்மூர்த்திகளின் தேர்தல் கணக்கு' டு `பிளாக்கா வேணுமா... ஒயிட்டா வ...
நல்லகண்ணு: "அவரைப் பார்த்துத்தான் நான் அதைச் செய்தேன்; அதுவே என் வீர வணக்கம்" - நடிகர் பார்த்திபன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இன்று மாலை 4 மணியளவில் அரச மரியாதையுடன் அவரின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் படிப்புக்காக ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை முதலே அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் நடிகர் பார்த்திபன், நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``இன்னும் மறையாத ஐயா நல்லகண்ணு. கண் நன்றாக இருந்தால் பார்வை நன்றாக இருக்கும். ஐயா நல்லகண்ணுவுக்கு வாழ்வியலில் நல்ல பார்வை கொண்ட, நேர்மையான, உண்மையான, தூய்மையான என எல்லா வார்த்தைகளுக்கும் உதாரணமானவர்.
இன்று ஐயாவுக்கு மாலை, மரியாதை செய்த அரசியல்வாதிகளில் சிலரைத் தவிர அவரைப் பின்பற்றுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? ஐயாவைச் சிலமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். என் பெரும்பாலான படங்களில் சிவப்பு சிந்தனை பற்றிய சிந்தனையைப் பேசியிருப்பேன். அதையெல்லாம் அவர் பாராட்டியிருக்கிறார். இந்த உலகில் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்வதே அரசியல். ஐயா ஒரு சிறந்த அரசியல்வாதி.
இப்போது இருக்கும் அரசியல்வாதிகளால் ஏன் ஐயாவைப் போல இருக்க முடியவில்லை என்பதற்கு அவர்கள் மட்டும் காரணமில்லை. மக்களும் காரணம். இந்த முறையாவது வாக்குக்கு காசு வாங்காமல் வாக்களித்தால், காசு கொடுக்கும் அரசியல்வாதிகள் முகத்தில் அந்தக் காசைத் தூக்கி வீசினால் பாடம் கற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். ஐயா மிகப்பெரும் உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார். பணத்தால் ஐயாவை வாங்க முடியவில்லை.

அரசு கொடுத்த அன்பளிப்பைக்கூட அதற்கு மேல் தன் கைகாசைப் போட்டு அரசுக்கே கொடுத்தவர். அவரைப்போல வாழ்வது கஷ்டம் என்றாலும், அவரிடமிருந்து ஒரு விஷயத்தையாவது இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நாம் அவருக்குச் செய்யும் சரியான மரியாதையாக இருக்கும்.
ஐயாவின் உடல் தானம் செய்யப்பட்டிருக்கிறது. இறந்த பிறகும் இந்தச் சமூகத்துக்கு உதவ வேண்டும் என்ற அவரின் எண்ணம் என்னை மிகவும் கவர்ந்தது. அவரைப் பார்த்து நானும் நீண்ட நாள்களுக்கு முன்பே உடல் தானம் செய்திருக்கிறேன். இதையே என் வீர வணக்கமாக அவருக்குச் செலுத்துகிறேன்" என்றார்.












