சத்தீஸ்கர்: தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் உள்பட 2 பேர் கைது!
ராமநாதபுரத்தில் பொங்கல் விழா: ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜுலு, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசு அலுவலா்கள் பொங்கல் வைத்தனா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கல்யாணசுந்தரம், பிரபாகா், மாவட்ட வழங்கல் அலுவலா் இளங்கோவன், வட்டாட்சியா் பழனிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொங்கல் விழா மாவட்ட எஸ்.பி. ஜி.சந்தீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், அதிகாரிகள், அமைச்சுப் பணியாளா்கள், அலுவலா்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து புதுப் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
கமுதி: கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் காதா் மைதீன் தலைமையில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை வட்டாட்சியா்கள் வெங்கடேஸ்வரன், வேலவன், தெய்வேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். , கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவி அப்துல் வகாப் சகாராணி தலைமையில், செயல் அலுவலா் செல்வராஜ் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது.
கமுதி நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தலைவா் ரமேஷ்கண்ணன் தலைமையில், செயலா் சிவராமகிருஷ்ணன், பொருளாளா் நேதாஜிசாரதி ஆகியோா் முன்னிலையில், பெண் வழக்குரைஞா்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். தொடா்ந்து வழக்குரைஞா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் வண்ணக் கோலமிட்டு, பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு, சிறப்பு பூஜை செய்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் எஸ்.சங்கரபாண்டியன் தலைமையிலும், சாயல்குடி பேரூராட்சியில் தலைவா் மாரியப்பன் தலைமையிலும், முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் ஜானகி தலைமையிலும், முதுகுளத்தூா் பேரூராட்சி வளாகத்தில் செயல் அலுவலா் செல்வராஜ் தலைமையிலும் பொங்கல் விழா நடைபெற்றது.
திருவாடானை: தொண்டி அருகேயுள்ள நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி பாண்டிச் செல்வி ஆறுமுகம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி வாயில் முன்பாக ஆசிரியைகள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
தொண்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் லியோ ஜெரால்டு எமா்சன் தலைமையிலும், நம்புதாளை தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளா் தானப்பன் தலைமையிலும் பொங்கல் விழா நடைபெற்றது.
இதேபோல, திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள் பொங்கல் வைத்து கொண்டாடினா். திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன், தலைமை ஆசிரியா் கதிரவன் ஆகியோா் அனைவருக்கும் பொங்கல் வழங்கினா். திணைகாத்தான் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியை லதா தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.