பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திய இந்தியா? "அடுத்த டார்கெட் ஜெர்மனி" - மத்திய அரசு...
வழக்கமான ரூட்டில் ப.சிதம்பரம்; முட்டுக்கட்டை போடும் திமுகவினர் - காரைக்குடி தொகுதி யாருக்கு?
தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி மற்ற கட்சிகளைவிட ஆளும்கட்சியான திமுக-வினர் ஆர்வமாகத் தயாராகி வருவதுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்தியும் வருகிறார்கள்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தின் முதன்மைத் தொகுதியான காரைக்குடியில் இம்முறை திமுக போட்டியிட்டே ஆக வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் தலைமைக்கு வலியுறுத்தி வருவதோடு, தொகுதி தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக முக்கியப் புள்ளிகள் முதலமைச்சரின் குடும்பத்தினரையும், அறிவாலய பவர் செண்டர்களையும் சுற்றி சுற்றி வருகிறார்கள்.
தற்போது காரைக்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரசைச் சேர்ந்த மாங்குடி உள்ளார். இந்நிலையில்தான் திமுகவினர் தொகுதியை தங்களுக்கு கேட்டு வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காரைக்குடி திமுக நிர்வாகிகள், "திமுக ஆதரவாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் அதிகம் நிறைந்த காரைக்குடித் தொகுதியை 1996 முதல் 2021 வரை கூட்டணிக் கட்சிகளுக்கே திமுக ஒதுக்கி வருகிறது. இதில், 2011 தேர்தலைத் தவிர மற்ற 5 தேர்தலிலும் திமுகவினரின் கடுமையான உழைப்பால் கூட்டணி கட்சியினரே வெற்றி பெற்று வருகின்றனர். 2001-ல் பாஜக ஹெச்.ராஜாவே திமுக கூட்டணியால்தான் வெற்றி பெற்றார்.

திமுக போட்டியிட்டால் இன்னும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறக் கூடிய தொகுதி இது.
அப்படி இருக்கையில், எங்கள் தலைமை தொடர்ந்து காங்கிரசுக்கு ஒதுக்கி வருவது எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே சிவகங்கை எம்.பி தொகுதியை தங்களுக்கென்றே வைத்திருக்கும் ப.சிதம்பரம் குடும்பத்தினர், கூடவே காரைக்குடி சட்டமன்றத் தொகுதியையும் தங்கள் ஆதரவாளருக்காக பெற்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தொகுதியில் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லாத, அதே நேரம் கோஷ்டிகள் மட்டும் அதிகமுள்ள காங்கிரஸ், திமுகவினரின் கடும் உழைப்பால் நோகாமல் வெற்றி பெற்று வருகிறது. ஆனால், அப்படி வெற்றி பெற்றவர்கள் திமுகவுக்கு விசுவாசமாக இருப்பதில்லை. கார்த்தி சிதம்பரம் அவ்வப்போது மீடியாவில் திமுகவுக்கு எதிராகப் பேசி எதிர்க்கட்சியினருக்கு கண்டெண்ட் கொடுக்கிறார். தற்போது காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடியும், காரைக்குடி மாநகராட்சிக்கு எதிராக பிரச்சனைகளை தூண்டி வருகிறார்.
இதனால், திமுக அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் ப.சிதம்பரம், திமுக தலைமையிடம் நைசாகப் பேசி இத்தொகுதியை காங்கிரசிலுள்ள தன் ஆதரவாளருக்கு ஒதுக்க வைத்து விடுகிறார், இனி அப்படி விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிறோம். திமுக ஆட்சியில்தான் காரைக்குடியை மாநகரட்சியாக்கி, தொகுதிக்கும் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வியறிவும், உலக அறிவும், திராவிட சிந்தனையும் கொண்டோர் அதிகமுள்ள இத்தொகுதியில் திமுகவைச் சேர்ந்தவர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், இதை மாவட்டச் செயலாளர், துணை முதலமைச்சர், முதலைமைச்சர் ஆகியோரிடமும் வலியுறுத்தியுள்ளோம்" என்றனர்.
திமுகவில் தொகுதியை குறி வைத்து ஜோன்ஸ் ரூசோ, காரைக்குடி மேயர் முத்துதுரை, நகர்ச் செயலாளரும் துணை மேயருமான குணசேகரன் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருகிறார்கள்.

தொகுதியை கேட்டு திமுகவினர் குரல் எழுப்பி வரும் நிலையில் ப.சிதம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்து மீண்டும் காரைக்குடியை தங்களுக்கே ஒதுக்கும்படி வலியுறுத்திவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், இந்தமுறை திமுக-வுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது என்ற முடிவில் திமுக தலைமையும் தீவிரமாக இருப்பதாக காரைக்குடி திமுக-வினர் மகிழ்ச்சியுடன் பேசி வருகிறார்கள்.
முடிவு தொகுதி உடன் படிக்கையின் இறுதியில் தான் தெரிய வரும். அதுவரை பொறுத்திருப்போம்!
















