Phonepay IPO வெளியீடு தாமதமாவது ஏன்? | IDBI | IPS Finance - 461
விகடனில் தொடராக வெளிவந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது!
2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழின் மூத்த படைப்பாளியும், கலை இலக்கியச் செயற்பாட்டாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவருமான ச.தமிழ்ச்செல்வன் எழுதிய `தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்ற நூலுக்கு வழங்கப்படுகிறது. இந்த நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
ச.தமிழ்ச்செல்வன் 'கதை சொல்லிகளின் கதை' என்ற தலைப்பில், 2017 நவம்பர் முதல் செப்டம்பர் 2018 வரை விகடன் இணையதளத்தில் எழுதிய தொடரின் முழுமை பெற்ற வடிவமே `தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' நூல். இந்த நூலில் வ.வே.சு அய்யர் தொடங்கி கந்தர்வன் வரை 50 எழுத்தாளர்களின் படைப்புகளை தன் பார்வையிலிருந்து இளம் தலைமுறைக்கு அறிமுகம் செய்கிறார் தமிழ்ச்செல்வன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'இலக்கிய விமர்சனம்' என்ற வகைமையின் கீழ் இந்த விருதை தமிழ்ச்செல்வனுக்கு வழங்கியிருக்கிறது, சாகித்ய அகாடமி.
ச.தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் 27.5.1954-ல் பிறந்தவர். இவரது தாத்தா, மதுரகவி பாஸ்கரதாஸ் பிரபலமான நாடகவியலாளர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் ஆசிரியர். அப்பா எம்.எஸ்.சண்முகம் எழுத்தாளர். பல திராவிட இயக்க இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன, அம்மா பெயர், சரஸ்வதி. எழுத்தாளர் கோணங்கி, நாடகவியலாளர் முருகபூபதி ஆகியோர் தமிழ்ச்செல்வனின் சகோதரர்கள்.
குடும்பத்தில் இயல்பாக இருந்த வாசிப்புப் பழக்கம் சிறுவயதிலேயே தமிழ்ச்செல்வனையும் தொற்றிக்கொண்டது. தொடர் வாசிப்பு, எழுதும் வேட்கையைத் தூண்டியது. இவரது முதல் கவிதை 'நீலக்குயில்' என்ற சிறுபத்திரிகையில் வெளிவந்தது. முதல் சிறுகதை, 'தாமரை' இதழில் வந்தது. அஞ்சல் துறையில் பணியாற்றிய தமிழ்ச்செல்வன், பிறகு ராணுவத்தில் இணைந்து இந்திய-சீன எல்லையில் பணி புரிந்தார். பிறகு ராணுவத்தில் இருந்து வந்து அஞ்சல் துறையில் இணைந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று ஏராளமான இளைஞர்களை அந்த அமைப்பு நோக்கி ஈர்த்ததில் தமிழ்ச்செல்வனின் பங்கு அளப்பரியது. அறிவொளி இயக்கத்திலும் பங்கேற்று கிராமம் கிராமமாகப்போய் கற்றலின் தேவை குறித்து விழிப்புணர்வூட்டினார். அதற்கென சிறு சிறு நூல்களையும் ஏராளமான பாடல்களையும் எழுதினார் தமிழ்ச்செல்வன். இயக்கப் பணிகளுக்காகவே அஞ்சல் துறைப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

ச.தமிழ்ச்செல்வனின் மனைவி பெயர் இரா.வெள்ளதாய். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மகன் சித்தார்த் சென்னையில் வசிக்கிறார்.
தமிழ்ச்செல்வனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'வெயிலோடு போய்'. 1984-ல் வெளிவந்தது. மனித உணர்வுகளை அதன் இயல்பில் உயிர்ப்போடு காட்சிப்படுத்தும் எழுத்து தமிழ்ச்செல்வனுடையது. அதற்காகவே அந்தத் தொகுப்பு பெரிதும் பேசப்பட்டது. அந்தத் தொகுப்பில் இடம்பெற்ற 'வெயிலோடு போய்' சிறுகதையை திரைப்பட இயக்குநர் சசி, 'பூ' என்ற பெயரில் படமாக்கினார். அப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அந்தப் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது ச.தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்டது.

'மிதமான காற்றும் இசைவான கடலலையும்' என்ற தலைப்பில் அவர் எழுதிய பெரும்பாலான கதைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. 20-க்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களையும் ச.தமிழ்ச்செல்வன் எழுதியுள்ளார். இளம் தலைமுறைக்கு தமிழின் ஆகச்சிறந்த படைப்பிலக்கியங்களை அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதப்பட்ட 'தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்' நூல், இப்போது சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. 'திருப்பி அடித்த வரலாறு' என்ற பெயரில் தஞ்சை மாவட்டத்தின் பொதுவுடமை இயக்க வரலாற்றை இரண்டு தொகுதிகளாக எழுதி சமீபத்தில் வெளியிட்டார் தமிழ்ச்செல்வன். அவரின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று விரைவில் வெளியாகவிருக்கிறது. தமிழின் மிக முக்கிய ஆய்வாளர்கள் குறித்த நூலொன்றும் விரைவில் வெளிவரவிருக்கிறது.
1978-ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த தமிழ்ச்செல்வன், மாநில செயலாளர், தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். தற்போது மதிப்புறு தலைவராகத் தொடர்கிறார்.
வழக்கமாக, ஒவ்வோராண்டும் டிசம்பர் மாத இறுதியில் அந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படும். 2025, டிசம்பர் 18-ம் தேதி குஜராத்தி, காஷ்மீரி, ஆங்கிலம் தவிர்த்து மற்ற 21 மொழிகளுக்கும் விருதாளர் தேர்வு இறுதி செய்யப்பட்டு, நிர்வாகக்குழு ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. அன்று மாலை 3 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் விருதாளர்கள் பெயர்களை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மத்திய கலாச்சாரத்துறை தலையீட்டில் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
கலாச்சாரத்துறை சார்பில், விருதாளர் தேர்வு மறுதணிக்கை செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆயினும் தேர்வுப்பட்டியல் ஊடகங்களில் வெளியாகி மலையாளம், தெலுங்கு முதலான பல்வேறு மொழி நாளிதழ்களில் தெரிவு செய்யப்பட்ட விருதாளர்களின் பேட்டிகள் வெளிவந்துவிட்டன. தமிழிலும் பலர் ச.தமிழ்ச்செல்வனுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டார்கள். ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்தியாவெங்கும் படைப்பாளிகள் மத்தியில் இது கொந்தளிப்பை உருவாக்கியது. சாகித்ய அகாடமியின் தன்னாட்சி உரிமையை பறிக்க மத்திய அரசு முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டது. பாராளுமன்றத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர், மத்திய அரசின் இந்தச் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்தார்கள். இதையடுத்து, இன்று மதியம் சாகித்ய அகாடமி, விருதாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தெலுங்கில் கவிதை நூலுக்காக நந்தினி சீதாரெட்டி, மலையாளத்தில் நாவலுக்காக என்.பிரபாகரன், கன்னடத்தில் சிறுகதை நூலுக்காக அமரேஷ் நுகடோனி உள்ளிட்டோரும் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ் மொழிக்கான தேர்வுக்குழுவில் தமிழிசைக் கலைஞர் டாக்டர் அரிமளம் எஸ்.பத்மநாபன், டாக்டர் எம். துர்கா, டாக்டர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள்.
சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள தோழர் ச.தமிழ்ச்செல்வனுக்கு விகடனின் மனமார்ந்த வாழ்த்துகள்!



















