’முதலமைச்சர் ஜோசப் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்’ – வானதி சீனிவாசன் சொல்லும் க...
'விஜய் ஸ்கெட்சை கணிக்க தவறிய எடப்பாடி பழனிசாமி.!' - அதிமுக மீண்டும் ஒருமுறை பிளவுப்பட்ட பின்னணி!
இரு கூறாக பிளவுப்பட்டு களத்தில் நிற்பது ஒன்றும் அதிமுகவுக்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இறப்பை தொடர்ந்து பல முறை அதிமுக பிளவுப்பட்டு இரு கூறாக நின்றிருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் அதிமுகவின் இருப்பைப் பற்றிய கேள்வி எழுந்ததே இல்லை. காரணம், களம் திமுக vs அதிமுக என்றே இருக்கும்.

அதிமுக சரிவுகளிலிருந்து மீண்டு வந்து தன்னுடைய இடத்தைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இப்போது மூன்றாவதாக வந்திருக்கும் தவெக எனும் சக்தி முதன்மை சக்தியாக மாறி நிற்கிறது. அந்த மூன்றாவது சக்தியை மையமாக வைத்துக் கொண்டு அதிமுகவின் பிளவு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதனாலயே அதிமுகவின் இந்த பிளவையும் இப்போதைய நெருக்கடியையையும் அக்கட்சியினர் கூடுதல் கவனம் கொடுத்து அணுக வேண்டிய தேவையும் உருவாகியிருக்கிறது.
திமுக எதிர்ப்பு வாக்கு...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இப்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார். அவரின் தலைமை இடமே கேள்விக்குள்ளாகி நிற்கிறது. இப்படியொரு நிலைக்கு அவரே கூட காரணம் என்று கூட சொல்லலாம். விஜய் 2024 பிப்ரவரியில் புதிய கட்சியை தொடங்கிய போதே திமுக எதிர்ப்பை மட்டுமே தன்னுடைய ஆதாரப்பொருளாகக் கொண்டிருந்தார். திமுக எதிர்ப்பு வாக்குகள் என்பது மொத்தமாக அதிமுகவுடையது. அரைநூற்றாண்டாக அந்த திமுக எதிர்ப்பு வாக்கு வங்கியில் எந்தவொரு மூன்றாவது சக்தியாலும் ஓட்டைப் போட முடியவில்லை. அந்த பகீரத முயற்சியை விஜய் கையில் எடுத்தார்.

அதிமுக முன்பும் எடப்பாடி பழனிசாமி முன்பும் இரண்டு வாய்ப்புகள் இருந்தது. ஒன்று விஜய்யை ஆதரித்து அவரை தங்கள் கூட்டணிக்குள் இழுத்து திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறவிடாமல் தடுத்தல். இன்னொன்று விஜய்க்கு இடமே கொடுக்காமல் திமுக எதிர்ப்பை கூர்ப்படுத்தி இடையிடையே விஜய்யின் இருத்தலையும் தேவையையும் கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி இதில் முதல் வாய்ப்பை மட்டுமே கடைசி வரைக்கும் நம்பினார். விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்றவுடன், விஜய் -அதிமுக கூட்டணி குறித்து பரவலாக பேசப்பட்டது. 'அதிமுகவை பற்றி அதிகம் பேசாமல் திமுகவை மட்டும் விமர்சியுங்கள்' என்ற உத்தரவும் தவெக செய்தித் தொடர்பாளர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. திரைமறைவில் தவெகவின் டிமாண்டுகள் அதிகம் இருந்ததால், எடப்பாடி விருப்பமில்லாமல் என்.டி.ஏவை நோக்கி சென்றதாக தகவல் வெளியானது.

தவெக தரப்பு அதன்பிறகு அதிமுகவுடன் கூட்டணி, என்.டி.ஏவுடன் கூட்டணி என்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை. தங்களின் திமுக எதிர்ப்பை மட்டுமே கூர்மைப்படுத்தி, திமுகவுக்கு எதிரான முகம் விஜய் மட்டுமே எனும் கோணத்தில் பிரசாரத்தை நகர்த்தினார். ஆனால், அதிமுகவும் எடப்பாடியும் விஜய் எப்போது கூட்டணிக்கு வருவார் என காத்திருந்தனர். தன்னுடைய கட்சிக்காக தொகுதிவாரியாக பிரசாரம் செய்கையில், 'ஒரு பிரமாண்ட கட்சி நம்முடன் இணைகிறது' என்று பேசினார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜய் புகழ்பாடினர். கரூர் சம்பவத்தின் போது ஒட்டுமொத்த அதிமுகவும் விஜய்க்கு அரணாக நின்றது.
விஜய்க்காக சட்டமன்றத்தில் ஸ்டாலினுடன் சண்டை செய்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது பிரசாரத்தில் தவெக கொடியை காண்பித்து, 'கொடி பறக்குதா, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டாச்சு' எனப் பேசினார். அத்தோடு நிற்கவில்லை. பிப்ரவரி வரைக்கும் அதிமுகவும் பாஜகவும் விஜய்யின் வருகையை எதிர்பார்த்தே கருத்து கூறிக் கொண்டிருந்தனர். இதெல்லாம் அதிமுக வெல்வதற்கே தவெகவின் கூட்டணி தேவைப்படுகிறது எனும் தோற்றத்தை ஏற்படுத்தியது.

இன்னொரு புறம் விஜய்யின் அணி தெளிவாக காய் நகர்த்தியது. கரூர் சம்பவத்துக்கு பிறகு நடக்கும் சிறப்புப் பொதுக்குழுவில் இக்கட்டான கட்டத்தில் தங்களை காத்து நின்ற அதிமுகவுக்கு ஒரு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கூட நிறைவேற்றவில்லை. மாறாக, 'விஜய்தான் முதல்வர். விஜய்யின் தலைமையில்தான் கூட்டணி!' என தீர்மானம் போடப்பட்டது. இதெல்லாம் அதிமுகவின் கூட்டணியை விரும்பவில்லை என தவெக கொடுத்த மெசேஜ். இந்த செய்தியை அதிமுக உள்வாங்கிக் கொள்ளவே இல்லை.
விஜய் அதிமுகவை விமர்சிக்காததை அவர் அதிமுகவுடன் கூட்டணிக்கு விரும்புகிறார் என எடப்பாடி தவறாக கணித்தார். ஆனால், உண்மையில் விஜய் திமுக எதிர்ப்பை தீவிரமாக பேசி அதிமுகவின் வாக்குகளுக்கு குறிவைத்தார். அதற்காக அதிமுகவின் இருபெரும் தலைவர்களையும் அவர் பயன்படுத்திக் கொண்டார்.
மதுரை மாநாட்டில் அண்ணா, எம்.ஜி.ஆர் படங்களை பிரதானமாக வைத்துக் கொண்டார். 'எம்.ஜி.ஆர் காலத்துல எப்படி மாஸா இருந்த கட்சி அது...' என ரத்தத்தின் ரத்தங்களின் மனதை கவர நினைத்தார். செங்கோட்டையனை ஜெயலலிதா படத்தோடு தவெகவில் இணைய அனுமதித்தார். செங்கோட்டையனே முன்வந்து ஜெ.வின் படத்தை அகற்றிய போதும் விஜய்யே முன்வந்து ஜெ.வின் படத்தை வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்.
இதெல்லாம் ஏற்கனவே துவண்டு போய் நிற்கும் அதிமுக ஆதரவு வாக்காளர்களை விஜய்யை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. தவெகவுக்குள் அதிமுகவினருக்கும் இடம் உண்டு. நாமெல்லாம் சேர்ந்து திமுக எனும் தீயசக்தியை வீழ்த்துவோம் என்பதுதான் ரரக்களுக்கு விஜய் கொடுத்த மெசேஜ்.

விஜய்யின் வீச்சை எடப்பாடி கணிக்க தவறினார். சொல்லப்போனால், விஜய் விரித்த வலையில் எடப்பாடி விழுந்தார். எடப்பாடியும் சேர்ந்து கொண்டு விஜய் வந்தால்தான் அதிமுக வெல்ல முடியும் எனும் கருத்தாக்கத்துக்கு வலு சேர்த்தார். இதெல்லாமே விஜய்க்கு சாதகமாகவே அமைந்தது. எதிர்பார்த்ததே போலவே தேர்தலில் விஜய்யின் எழுச்சி அதிமுகவுக்கு பெருத்த சேதாரத்தை கொடுத்தது.
தவெகவில் அதிமுகவினருக்கும் இடமுண்டு என்பதை முன்னுதாரணமாக காட்டிய செங்கோட்டையனை பின்பற்றி, அதிமுகவின் பெரும் தலைகளே தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். விஜய் இப்போதும் தெளிவாக காய் நகர்த்துகிறார். அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடியை சந்திக்காமல், கலகம் மூட்டியிருக்கும் சி.வி.சண்முகத்தின் அணியை சந்திருக்கிறார்.
சட்டமன்றத்தில் அழுத பண்ருட்டி எம்.எல்.ஏவிடம், 'நான் இருக்கேன் உங்களுக்கு. கவலைப்படாதீங்க' என்கிறார். ஆக, விஜய் அதிமுக பிளவுபடுவதையும் பலவீனமாவதையும் அதன் வழி அதிமுகவினர் தன் பின்னால் திரள்வதையும் விரும்புகிறார். அது நடக்கவும் செய்கிறது.
விஜய்யின் இந்த காய் நகர்த்தல்களையும் அவரின் வீச்சையும் எடப்பாடி முன்பே கணித்திருந்தால், விஜய் எதிர் அரசியலையும் எடப்பாடியால் செய்திருக்க முடியும். 'ஒரே எம்.ஜி.ஆர், ஒரே ஜெயலலிதா, ஒரே அதிமுக' என விஜய்யின் கருத்தாக்கத்தை உடைத்திருக்க முடியும். ஆனால், எல்லாரையும் போலவே விஜய்யின் வீச்சை எடப்பாடியும் கணிக்க தவறினார். அதற்கான பலனை அனுபவிக்கிறார். விஜய்யை கோட் சூட் போட்ட எம்.ஜி.ஆர் என ரத்தத்தின் ரத்தங்கள் முழுமையாக நம்புவதற்குள் அதிமுக சுதாரிக்க வேண்டும் என்பதே அக்கட்சி தொண்டர்களின் குரலாக உள்ளது!.















