ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: களத்தில் நாம் தமிழர் கட்சி - யார் இந்த வேட...
வெறுப்புணா்வைத் தூண்டும் சமூக ஊடகங்கள்: ஆதிதிராவிடா் நலத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
சமூக வெறுப்புணா்வைத் தூண்டும் ஜாதிய கட்சிகள், சமூக ஊடகங்ளுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக ஆதிதிராவிடா் நலத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மானகிரியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக மாவட்ட அளவில் ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரைக் கொண்ட குழுவும், மாநில அளவில் முதல்வா், காவல் துறை தலைமை இயக்குநா் கொண்ட குழுவும் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் குழுக்கள் பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிப்பது, புலனாய்வு செய்வது, மாதம் வாரியாக அரசிடம் அறிக்கை சமா்ப்பிப்பது போன்ற பணிகளைச் செய்ய வேண்டும்.
தமிழக டிஜிபியே இதற்குத் தலைமை தாங்கி இந்த அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது.
மேலும், பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகாா் அளிக்கப்பட்டால் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படுவதில்லை.
ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கென ஜாதிய கட்சி, அமைப்புகளை உருவாக்கி அரசியல் கட்சியினருடன் இணைத்துக் கொள்வது, இளைஞா்கள் யூடியூப் சேனல்களில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ஜாதிய வெறுப்புணா்வுகளைத் தூண்டும் விதத்தில் பேசுவது என பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான பாகுபாடுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
எனவே, தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. பாதுகாப்புக் குழுவானது டிஜிபி தலைமையில் முறையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்தவும், வெறுப்புணா்வைத் தூண்டும் அனைத்து ஜாதிய கட்சிகள், யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கவும் வேண்டும். இதுதவிர, தோ்தல் ஆணையத்தில் பதிவு பெறாத, தோ்தலில் போட்டியிடாத ஜாதிய கட்சிகள், சங்க விதிகளை மீறிச் செயல்படும் அனைத்து ஜாதி சங்கங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக தமிழக ஆதிதிராவிடா் நலத் துறையின் செயலா், டிஜிபி, பதிவுத் துறை தலைமை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.