"என் அனுமதி இல்லாமல் என் கதையை எப்படி எடுப்பார்கள்!" - வழக்கு தொடர்ந்த இயக்குநர்...
வேலூர்: பாலியல் தொழிலில் பணத்தகராறு; சக புரோக்கரைக் கொன்று புதைத்த கும்பல்; சிக்கியது எப்படி?
வேலூர் மாவட்டம், திருவலம் அருகேயுள்ள அம்முண்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 33). இவர், வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள ஒரு லாட்ஜில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 9-ம் தேதி மாயமானார். இது குறித்து, வேலூர் வடக்குப் போலீஸில் தேவராஜின் மனைவி நதியா புகாரளித்தார். அவரின் புகாரில், வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த யாசின் (35) மற்றும் சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த உமர் (28) ஆகியோர்தான் கணவன் தேவராஜை காரில் அழைத்துச் சென்றதாகவும், மாயமானதில் அவர்களுக்கு ஏதோ தொடர்புள்ளதாகவும் நதியா குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், யாசினையும், உமரையும் தேடியபோது நேற்று முன்தினம் இரவு போலீஸாரிடம் பிடிபட்டனர்.

விசாரணையில், யாசின் பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் என்பதும், அவரிடம் தேவராஜ் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில்தான் தேவராஜ் தனியாக பாலியல் தொழில் நடத்த திட்டமிட்டு, யாசினிடமிருந்து விலகிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் தொழில் போட்டியில் தேஜாஸ்ரீ என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். தேஜாஸ்ரீயிடம் இருந்து ரூ.2 லட்சத்தை தேவராஜ் கடனாக வாங்கியிருந்தாராம். அந்த பணத்தை திருப்பித் தராததால், யாசினை தொடர்பு கொண்டு பணத்தை பெற்றுத் தருமாறு தேஜாஸ்ரீ கூறினாராம்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காகத்தான் தேவராஜை காரில் ஏற்றிக் கொண்டு, கே.வி.குப்பம் அருகேயுள்ள மேல்விளாச்சூர் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் யாசின். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆடு வெட்டும் கத்தியால் தேவராஜின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கொடூரமாக வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்து போன தேவராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டார்.

இதையடுத்து, வீட்டின் பின்புறமுள்ள காலி இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி தேவராஜின் உடலை புதைத்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, நேற்றைய தினம் யாசினை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி தேவராஜின் உடலை மீட்டனர். அதே பகுதியில், மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது. பின்னர் வழக்குத் தொடர்பாக, யாசின், உமர், யாசின் மனைவி ஹரிசுதா, காட்பாடி காந்தி நகரைச் சேர்ந்த பரணிதரன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தேஜாஸ்ரீ உள்ளிட்ட மேலும் ஒருசிலரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


















