5 தொகுதி இடைத்தேர்தல் TVK, DMK, ADMK திட்டம் என்ன? | Political Lab
`10,000 கோடி ரூபாய்! வந்தா போகுமா? ஆனா, போயிடுச்சே..!' - ராஜஸ்தான் இளைஞருக்கு நடந்த ட்விஸ்ட்
ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான சமீர் கான். இவர் அப்பகுதியில் உள்ள நிர்மல் மெடிக்கல் பாயிண்ட் என்ற மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மாதச் சம்பளமே ரூ.10,000 மட்டும்தான். வழக்கம்போல செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காகத் தனது பேங்க் பேலன்ஸை சரிபார்த்திருக்கிறார். ஆனால், கணக்கில் பூஜ்ஜிய இருப்பு (Zero Balance) காட்டியிருக்கிறது.
என்ன ஏதென்று புரியாமல் அதிர்ச்சியடைந்த சமீர், கூடுதல் விவரங்களை ஆராய்ந்தபோதுதான் அவருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.
அவரது வங்கிக் கணக்கில் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான தொகைக்கு 'லியன்' (Lien) விதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
லியன் என்றால் என்ன?
ஒருவருடைய வங்கிக் கணக்கில் உள்ள குறிப்பிட்ட தொகையைத் தற்காலிகமாகப் பயன்படுத்த முடியாதபடி முடக்கி வைப்பதுதான் லியன். ஆனால், இதில் சோகம் என்னவென்றால், சமீரின் கணக்கில் உண்மையாக இருந்த அவருடைய சொந்தப் பணமான ரூ.55,000-ஐக்கூட அவரால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து தனது முதலாளி தீரஜ் ஷர்மாவிடம் தகவல் தெரிவித்த சமீர், அவருடன் சிகார் சைபர் காவல் நிலையத்தை அணுகியிருக்கிறார். பின்னர் வங்கியைத் தொடர்புகொண்டபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தப் பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. வங்கி அந்தப் பிழையைச் சரிசெய்ததும், சமீரின் உண்மையான பண இருப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது.
இதுகுறித்துப் பேசிய அவரது முதலாளி தீரஜ் ஷர்மா, மாதம் ரூ.10,000 சம்பளம் வாங்கும் தனது ஊழியரின் கணக்கில் ரூ.10,000 கோடி முடக்கப்பட்டிருப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.!



















