`மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, ...
`100 பேர் முன் மன்னிப்பு கேட்டேன்; அப்பவும் விடலை!' மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார்
பிப்ரவரியில் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தன்னைப் போட்டியிட விடாமல் தடுக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார் ‘மயங்கினேன் தயங்கினேன்’, பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் நடித்த ‘ஜின்’ ஆகிய படங்களைத் தயாரித்த ராஜேஸ்வரி வேந்தன்.
தமிழ்நாடு அரசின் மானியத்துக்கான திரைப்படத் தேர்வுக் கமிட்டியில் உறுப்பினராகவும் இருக்கிறார் இவர்.
சங்கத் தேர்தலில் நிற்பதற்கும் மகளிர் ஆணையத்துக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியுடன் அவரைச் சந்தித்தோம்.

‘’திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துல இதே முரளி ராமசாமி அணியிலதான் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினரா ஒரு தடவை இருந்தேன். அந்தச் சமயத்துல சங்கப் பதிவுப் பிரச்னை தொடர்பா அவ்வளவு வேலைகள் செஞ்சிருக்கேன். அதுக்கு முன்னாடி ரெண்டு முறை நியமன உறுப்பினரா இருந்தேன்.
பொதுக்காசை எடுத்து மிக்சர் சாப்பிட்டுட்டு கலையறது எனக்குப் பிடிக்காது. நிர்வாகிகளை நிறையக் கேள்வி கேட்பேன். கேள்வின்னா வரவு செலவு முறையாக் காட்டுங்க, பொதுக்குழுவை உரிய நேரத்துல கூட்டுங்கன்னு சங்க நலன் தொடர்பான கேள்விகள்தான். அது இவங்களுக்குப் பிடிக்கலை. கடந்த தேர்தல்லயே நிக்க விடாம தடுத்தாங்க. சுயேட்சையா துணைத் தலைவர் பதவிக்கு போட்டி போட்டு 357 ஓட்டு வாங்கினேன்.
இந்த முறை செயலாளர் பதவிக்குப் போட்டியிட நினைச்சேன். நின்னா நான் ஜெயிச்சிடுவேன்னு நினைக்கிறாங்க. அதனால என்னை சங்கம் பக்கம் வரவிடாமச் செய்ய என்னென்னவோ சொல்றாங்க.
பொதுக்குழுவை கூட்டுங்கனு சொன்னதை சங்கத்துக்கு எதிரான நடவடிக்கைனு சொல்லி சங்கத்துல இருந்து நீக்கியிருக்காங்க. நான் நீதிமன்றம் போயிருக்கேன். வழக்கு போயிட்டுதான் இருக்கு.

தேர்தலை நிறுத்தணும்கிறது என் நோக்கம் இல்லை. என் மீதான தடையை உடைத்து தேர்தல்ல நின்னு நிர்வாகத்துக்குள் போகணும். அதான் இந்த போராட்டம்’ என்றவரிடம்,
மகளிர் ஆணையத்துல என்ன புகார் எனக் கேட்டோம்,
‘இடையில திடீர்னு என்ன நினைச்சாங்களோ, நீக்கறதுக்கு முன்னாடி சங்கத்துக்கு வந்து மன்னிப்புக் கேக்கச் சொன்னாங்க. நானும் போனேன். அங்க ஆண்களும் பெண்களுமா கிட்டத்தட்ட 100 பேர் இருந்தாங்க. அவங்க எல்லார் முன்னிலையிலயும் மன்னிப்புக் கேக்கச் சொன்னாங்க. நானும் கேட்டேன்.
வாயால கேட்டாப் போதாதுனு கடிதம் எழுதித் தரக் கேட்டாங்க. அதை எழுதித் தந்தப்ப தலைவர், செயலாளர்கிட்ட கொடுங்கிறார். அவர்கிட்ட கொடுத்தா, தலைவர்கிட்டயே கொடுங்கனு சொல்றார். நான் இப்படி மாத்தி மாத்தி அலைஞ்சதைப் பார்த்து சிரிக்கிறாங்க, இது எனக்கு பெரிய அவமானமா இருந்தது.
மன்னிப்பு கேட்டா பிரச்னை முடிஞ்சிடும்னு நினைச்சுப் போனா, அங்க போன பிறகே தெரிஞ்சது, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தேர்தலே வேண்டாம்னு ஓடணும்னு நினைச்சு செய்திருக்காங்கனு. அதனால்தான் இவங்களைச் சும்மா விடக்கூடாதுனு மகளிர் ஆணையத்தில் புகார் தந்தேன்.

ஆணையமும் பெண்களின் சுயமரியாதை தொடர்பான விஷயம். ரொம்பவே நியாயமான புகார்னு விசாரணைக்கு எடுத்திருக்கு. இன்னைக்கு மதியம் விசாரணை. எதிர்தரப்பையும் ஆஜராக உத்தரவிட்டிருக்காங்க. இந்த விஷயத்துல நான் பின் வாங்கப் போறதில்லை’ என்கிறார் இவர்.
மகளிர் ஆணையம் சங்க செயலாளர்களான ராதாகிருஷ்ணன், கதிரேசன் இருவருக்கும் சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில் ராதாகிருஷ்ணைத் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டதற்கு,
‘எனக்கு சம்மன் எதுவும் வரலைங்க, வந்தா, நாங்க பார்த்துக்கறோம்’ என முடித்துக் கொண்டார் அவர்.




















