கனிம ஏலம்: மத்திய அரசு மசோதாவை அதிமுக ஆதரித்தது; முதல்வா் குற்றச்சாட்டுக்கு எடப்...
104 வயது கொலை தண்டனைக் கைதி பிணையில் விடுதலை!
இந்திய தேசிய காங்கிரஸ் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டான 1920 ஆம் ஆண்டு, ராஷிக் சந்திரா மண்டல், மால்டா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தார். அவர் பிறந்து நூறாண்டுகளுக்குப் பிறகு அவரது விடுதலைக்காக உச்சநீதிமன்றத்திடம் மன்றாடி வருகிறார்.
கடந்த 1988 ஆம் ஆண்டு ராஷிக் சந்திரா மண்டல் அவரது 68-வது வயதில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, 1994 ஆம் ஆண்டு அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவரது வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைபாடுகளைக் கருத்தில்கொண்டு, அவர் சிறையிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள குற்றவாளிகள் சீர்திருத்த பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில், தன்மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக ராஷிக் சந்திரா மேல்முறையீடு செய்த மனுவை கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின், உச்சநீதிமன்றத்திலும் அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிக்க: புயல் மழை தொடர்பான புகார்கள், உதவி எண்கள் அறிவிப்பு
கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன்பாக, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் கோளாறுகளை கருத்தில் கொண்டு தன்னை உச்சநீதிமன்றம் விடுவிக்க வேண்டும் என ராஷிக் சந்திரா ரிட் மனு அளித்திருந்தார். அதேபோல, 14 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், தண்டனையைக் குறைக்கக் கோரியும் அல்லது பரோலில் விடுவிக்கக் கோரியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த மே 7, 2021 ஆம் ஆண்டு நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான நீதிமன்ற அமர்வு மேற்கு வங்க அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன் படி, ராஷிக் சந்திரா வைக்கப்பட்டுள்ள சீர்த்திருத்த சிறையின் கண்காணிப்பாளர் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை தர வேண்டும் என நீதிமன்றத்தின் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு நேற்று (நவம்பர் 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மேற்குவங்க அரசுத் தரப்பில் ஆஜரான அஸ்தா சர்மா, ராஷிக் சந்திராவுக்கு வயது முதிர்வின் காரணத்திலான உடல்நடலக் குறைபாடுகள் உள்ளன. ஆனால், வயது முதிர்வு தொடர்பான பிரச்னையைத் தவிர்த்து, அவர் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் 104-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார் எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க:புயல் எதிரொலி: 18 விமானங்கள் ரத்து!
மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜரான அஸ்தா சர்மாவின் அறிக்கையின்படி, ராஷிக் சந்திராவை பரோலில் விடுவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி ராஷிக் சந்திரா மண்டலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து, உடனடியாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இருப்பினும், அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் கால் நூற்றாண்டு எடுத்துக்கொண்டுள்ளது. அவரது மேல்முறையீடு கடந்த ஜனவரி 5, 2018 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட, அதனை உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 11, 2019 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. அதன் பின், தனது 48 வயதாகும் மகனின் மூலமாக ராஷிக் சந்திரா ரிட் மனுவை அளித்துள்ளார். தனது கடைசி காலத்தை குடும்ப உறுப்பினர்களுடன் செலவிட ராஷிக் சந்திரா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து மன்றாடி வருகிறார்.