`அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' - ராகுல் நடத்த போகும் பேரணி
+2 மாணவர்களே! - CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - முழு விவரம்!
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவில் உள்ள 56 மத்திய பல்கலைக்கழகங்கள், 40 மாநில பல்கலைக்கழகங்கள், இந்தியா முழுவதுமுள்ள பல தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் CUET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (26.02.2026) கடைசி நாளாகும்.

புதியக் கல்விக்கொள்கைப்படி உருவாக்கப்பட்ட CUET UG தேர்வு மூலமாகவே அனைத்து கல்வி நிறுவனங்களின் உயர்கல்விச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. பா.ஜ.க ஆளும் பெரும்பாலான மாநிலங்கள் இந்த நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே தங்கள் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்தத் தேர்வை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவிலிருக்கும் பெரும்பாலான மத்திய அரசு நிறுவனங்கள் இந்த நுழைவுத்தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. தமிழக மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுவதன் மூலம் அந்தக் கல்வி நிறுவனங்களில் சேரமுடியும். தவிர திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திலும் சேர முடியும்.
டிசைன் & ஃபேஷன் தொழில்நுட்பம் சார்ந்த பல படிப்புகளை வழங்கும் Footwear Design and Development Institute (FDDI), இந்தியா முழுவதுள்ள பல வேளாண் கல்லூரிகள் மூலம் வேளாண்மை மற்றும் அது தொடர்புடைய அறிவியல் பாடங்களை வழங்கும் Indian Council of Agricultural Research (ICAR), குற்றவியல் அறிவியல் (Forensic Science) சார்ந்த சிறப்புப் படிப்புகளை வழங்கும் National Forensic Sciences University (NFSU), உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளை வழங்கும் National Institute of Food Technology Entrepreneurship and Management, Kundli, Indian Institute of Tourism & Travel Management உள்ளிட்ட பல நிறுவனங்கள் CUET UG தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.
இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (NTA) நடத்தி வருகிறது. 2026-27 இளநிலை படிப்புகளுக்கான CUET UG நுழைவுத் தோ்வு மே 11 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜன. 3-ம் தேதி தொடங்கி பிப். 4-ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. இந்தத் தேர்வை எழுத 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இந்தச் சூழலில் இத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, CUET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது தேசிய தேர்வுகள் முகமை. +2 பாடத்திட்டத்தின் படி நடத்தப்படும் இந்தத் தேர்வை அரசுப்பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் எழுதலாம். https://cuet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக பிப். 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது கேட்கப்பட்டுள்ள தகவல்களை மிகவும் கவனமாக உள்ளிட வேண்டும். இது இறுதி வாய்ப்பு என்பதால் திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்பட மாட்டாது. கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொள்ளலாம். அல்லது https://cuet.nta.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.



















