ஜடாயு மலையில் ஒரு திக்திக் அனுபவம் – ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த வர்கலா
`258 பக்கம் ஆவணம், ரூ.1,020 கோடி ஊழல்?' - கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை கடிதம்
திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு 1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது.
அமலாக்கத்துறையின் அக்கடிதத்தில், கே.என்.நேரு அமைச்சராக இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கட்டட நிர்மாணம், கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங், NABARD (வேளாண்மை வங்கி மற்றும் கிராம வளர்ச்சி வங்கி) திட்டங்கள், தூய்மைப்பணியாளர்கள் பணிக்கான அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள், தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புத் திட்டங்கள், நீர்/குளம் வேலைக்கான ஒப்பந்தங்ககள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் முன்பே யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு டெண்டர்களுக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஊழல் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது.
லஞ்சமாகப் பெறப்பட்ட பணப்பரிவர்த்தனை வெளிநாடுகளிலும், ஹவாலா மூலமும் நடந்திருக்கலாம் என்று கூறுகிறது அமலாக்கத்துறை.
இதுதொடர்பாக கே.என்.நேரு மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் சாதனங்களில் கிடைத்த வாட்ஸாப் மேசேஜ்கள், 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை சோதனையின்போது ஆதாரமாக திரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் 258 பக்கம் கொண்ட ஆவணத்தையும் தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அனுப்பி இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த வலியுறுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக PMLA சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை எந்த நேரமும் விசாரணையைத் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை வைக்கும் முதல் குற்றச்சாட்டல்ல இது, இரண்டாவது பெரும் குற்றச்சாட்டு.
இதற்கு முன் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில் ரூ.888 கோடி லஞ்ச ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு வைத்திருந்தது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ.888 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான `ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டின் போது இது தெரியவந்தாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதற்கு அமைச்சர் கே.என். நேரு, "2012, 2013, 2014, 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு பதவிகளுக்கு இதே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகத் தான் தேர்வுகள் நடத்தப்பட்டு, இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகத்தான் இந்த பணிநியமமும் இப்போது நடந்திருக்கிறது" என்று விளக்கமளித்து தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
இப்போது மீண்டும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் 1,020 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி, தேர்தல் நெருங்கும் சமயத்தில் தீவிரமாக கே.என்.நேரு விவகாரத்தில் இறங்கியிருக்கிறது.




















