"அவன் அடிப்பான்; அவன் அடிப்பான்; அவன் அவன் கதையை முடிப்பான்" - ரெக்கார்ட் சேஸ் ச...
+2வுக்குப் பின் என்ன படிக்கலாம்? - மாணவர்களுக்கு வழிகாட்டிய விகடன்!
பிளஸ் 2 தேர்வுகள் ஒரு வழியாக முடிந்துவிட்ட நிலையில், "அடுத்து என்ன படிக்கலாம்?" என்ற மாணவர்களின் நீண்டநாள் குழப்பத்திற்கு விடை சொல்லும் பிரம்மாண்ட நிகழ்வு இன்று (25.04.2026) சென்னையில் இனிதே அரங்கேறியது.
"Think - Innovate - Transform" என்ற தாரக மந்திரத்துடன், கல்வி விகடன் மற்றும் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்திய இந்த வழிகாட்டி முகாம், மாணவர்களின் உயர்கல்விப் பயணத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டியுள்ளது.
சென்னையிஸ் அமிர்தா குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து வழங்க, சேலம் விநாயகா மிஷன்ஸின் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி அசோசியேட் ஸ்பான்சராகத் தோள் கொடுத்தது.
அரங்கம் நிறைந்த மாணவர்கள், பெற்றோர்களிடையே தமிழகத்தின் டாப் கல்வி ஆலோசகர்கள் தங்கள் ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

உயிருக்கு நிகர் எதுவுமில்லை!
தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட கல்வியாளர் ரமேஷ் பிரபா, "மார்க் குறைந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைக்காதீர்கள்" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
மே 4 தேர்தல் முடிவுகளை உதாரணமாகக் காட்டி, தோற்றவர்கள் அத்தோடு முடிந்துவிடுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், உயிர் மிகவும் விலைமதிப்பற்றது என்றும் அறிவுறுத்தினார்.
ஒரு துறையில் ஆர்வம் (Interest) இருப்பது மட்டும் போதாது, அந்தத் துறையில் செயல்படுவதற்கான திறமையும் (Aptitude) இருக்கிறதா என்பதை மாணவர்கள் உரசிப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்.
மருத்துவக் கனவோடு இருப்பவர்கள் நீட் தேர்வுக்காக வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை என்றும், கார்டியாக் டெக்னாலஜி உட்பட 30-க்கும் மேற்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேடல் இருந்தால் மட்டுமே வைரங்கள் கிடைக்கும்!
"மாணவர்களின் தேடல் ஆழமாகவும் விரிவாகவும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் வைரங்கள் தென்படும்" என்று கூறிய கல்வியாளர் த. நெடுஞ்செழியன், ஐ.ஐ.டி மற்றும் நீட் தேர்வுகளைத் தாண்டி அரசு நடத்தும் 60-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் குறித்துப் பட்டியலிட்டார்.
இன்று தகவல் வெடிப்பு (Information Explosion) அதிகமாக நிகழும் காலத்தில் இருக்கிறோம் என்றும், ஹார்வர்டு போன்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கணினி அறிவியலை இலவசமாகவே ஆன்லைனில் கற்றுத் தருகிறார்கள் என்றும் கூறினார்.
அதனால், எங்கு சிறந்த கல்வி தரமாகக் கிடைக்கிறதோ, அதைத் தேடிச் செல்ல மாணவர்கள் தயங்கக்கூடாது என வலியுறுத்தினார்.
மேலும், புதிய கல்விக் கொள்கை மற்றும் ஏ.ஐ (AI) வருகையால் உலகம் வேகமாக மாறிவருவதை உணர்ந்து, சீனா போன்ற நாடுகள் ஆறாம் வகுப்பு முதலே ஏ.ஐ கல்வியைக் கட்டாயமாக்கியுள்ள நிலையில் நாமும் அந்தப் போட்டிக்குத் தயாராக வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.
படிக்கும்போதே பார்ட் டைம் சம்பாத்தியம்!
சென்னையிஸ் அமிர்தா குழுமத்தின் நிறுவனர் பூமிநாதன் பேசுகையில், ஓட்டல் மேனேஜ்மென்ட் துறையில் செய்முறைப் பயிற்சியே சிறந்தது என்பதை விளக்கினார். பத்தாம் வகுப்பு பாடங்களை நாம் மறந்தாலும், ஐந்து வயதில் ஓட்டிய சைக்கிளை மறப்பதில்லை; இதற்குக் காரணம் செய்முறைப் பயிற்சிதான் என்று அவர் குறிப்பிட்டார்.
ஓட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும்போதே ஆறாம் மாதத்தில் இருந்து பார்ட் டைம் வேலை மூலம் மாணவர்கள் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஈட்ட முடியும். இந்தியாவில் இன்று ஒவ்வொரு 45 நாட்களுக்கும் ஒரு புதிய விமான நிலையம் உருவாகி வருவதால், ஏவியேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் பிரமாண்டமான வேலைவாய்ப்புகள் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டுப் படிப்பு ஒரு மாயை அல்ல!
கல்வி ஆலோசகர் கலைமணி பேசுகையில், வெளிநாட்டுக் கல்வி என்பது அனைவருக்கும் சாத்தியமான ஒன்று என்பதைத் தெளிவுபடுத்தினார். ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதல் உயர்கல்வி வரை இலவசமாகப் பயில முடியும்.
ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்ச்சி பெற்றிருந்தால் ஜெர்மனியில் நேரடியாகச் சேரலாம் என்றும், அதற்கு ஏ.பி.எஸ் (APS) சான்றிதழ் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
"எய்ம்ஸ் (AIIMS) நர்சிங் படிப்பிற்கு வெறும் 600 ரூபாய் மட்டுமே கட்டணம்" என்று குறிப்பிட்ட அவர், மாணவர்கள் உதவித்தொகை பெற ‘நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டல்’ மற்றும் 'Buddy4study' போன்ற தளங்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஐ.ஐ.டி-யின் நவீன முகங்கள்!
ஐ.ஐ.டி மெட்ராஸின் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன், ஜே.இ.இ தேர்வு எழுதாமலேயே ஐ.ஐ.டி பட்டத்தைப் பெறும் ‘நான்-கேம்பஸ் பிஎஸ்’ (Non-Campus BS) படிப்புகள் பற்றி விளக்கினார். டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.

பி.காம் போன்ற படிப்புகள் இன்று டிஜிட்டல் திறன்கள் இல்லாமல் பின்தங்கி வருவதால், மேனேஜ்மென்ட் மற்றும் டேட்டா சயின்ஸ் படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஏ.ஐ தெரிந்த ஒருவர், ஏ.ஐ தெரியாதவரின் வேலையைப் பறிப்பார் என்று எச்சரித்த அவர், மாணவர்கள் எவ்வளவு சுமை (Load) எடுத்துப் படிக்கிறார்களோ அவ்வளவு தூரம் அவர்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
விகடன் இந்த வழிகாட்டி முகாம் மாணவர்களின் குழப்பங்களைத் தீர்த்து, எதிர்காலக் கனவுகளுக்கு வலுவான அடித்தளமிட்டுள்ளது; இனி தன்னம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வானமே எல்லை!



















