இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; முகமது ஷமி அணியில் சேர்ப்பு!
42 நிமிஷங்கள் மட்டுமே விளையாடி ரூ.900 கோடி சம்பாதித்த கால்பந்தின் இளவரசன்!
பிரேசிலை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் 2024ஆம் ஆண்டில் 2 போட்டிகளில் சேர்த்து 42 நிமிஷங்கள் மட்டுமே விளையாடி 101 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 882 கோடி ) சம்பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது கால்பந்து உலகில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மொத்தமாக தனது கால்பந்து வாழ்க்கையில் 717 போட்டிகளில் விளையாடிய நெய்மர் 439 கோல்கள் அடித்துள்ளார். 279 முறை கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.
2023இல் பிஎஸ்ஜியில் இருந்து சௌதி புரோ லீக்கில் அல்-ஹிலால் அணியில் சேர்ந்தார் நெய்மர்.
பார்சிலோனா அணியில் கலக்கிய நெய்மர் பந்தினை கட்டுப்படுத்தும் திறமையில் பல ஜாம்பவான்களை விடவும் சிறப்பாக இருப்பதாக வர்ணனையாளர்கள் கூறுகிறார்கள்.
மெஸ்ஸி, ரொனால்டோ புகழ்பெற்ற காலத்தில் தனியாளாக இவ்வளவு புகழ்பெறுவது சாதாரணமில்லை. அதனால்தான் நெய்மர் ரசிகர்கள் அவரை ‘கால்பந்தின் இளவரசன்’ என்கிறார்கள்.
காயம் காரணமாக அவரால் தொடர்சியாக விளையாட முடியாமல் போனது துரதிஷ்டம் என்கிறார்கள்.
மீண்டும் மெஸ்ஸியுடன் விளையாடுகிறாரா?
2017இல் நெய்மருக்கு 200 மில்லியன் டாலர் ஊதியமாக பிஎஸ்ஜி அளித்ததாக தகவல்கள் வெளியாகியன. ஆனால், தொடர்ச்சியாக காயம் காரணமாக அவரது சந்தை மதிப்பு வெகுவாக குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஒரு சீசனில் விளையாட நெய்மருக்கு 130 மில்லியன் டாலர் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுதான் உலகத்திலேயே அதிகபட்ச தொகை என்கிறார்கள். இண்டர் மியாமி அணியில் மீண்டும் மெஸ்ஸி, நெய்மர், செர்ஜிகோ இணைவார்கள் என தகவல் வெளியானது.
”நெய்மர் குறித்து நாங்கள் பேசவில்லை. நெய்மர் தலைசிறந்த வீரர்தான். உலகில் உள்ள ஒவ்வொரு பயிற்சியாளரும் அவரை தனது அணியில் இருக்க வேண்டுமென விரும்புவர். ஆனால். எம்எல்எஸ்-இன் விதிகள் உங்களுக்கே தெரியுமல்லவா. தற்போதைக்கு இது நடக்க வாய்ப்பில்லை” என அதன் மேலாளர் அதனை மறுத்துவிட்டார்.
புதிய அணிக்கு செல்கிறாரா?
ஜனவரிமுதல் நெய்மரை மாற்றுவதற்கான காலம் தொடங்கியது. இரு அணிகளுக்கும் சம்பளம் தொடர்பான ஒப்புதல் ஏற்பட்டுவிட்டால் அல்- ஹிலாலிருந்து நெய்மர் வெளியேறலாம். 2025 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் இருந்து நெய்மர் பாதியில் வெளியேறும்போது அவருக்குப் பணம் பிடித்தம் செய்யப்படும் என்பது விதிமுறை.
தற்போது, காயத்திலிருந்து மீண்டுவந்துள்ள நெய்மர் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
2026 உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டுமென்பதே அவரது விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.