ஆளுநர் வெளிநடப்பு: "நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியும...
மதுரை LIC கிளை தீ விபத்தில் அதிர்ச்சி திருப்பம் - நேர்மையான பெண் மேலாளரை எரித்து கொன்ற கொடூர அதிகாரி
மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்.ஐ.சி கிளை அலுவலக 2- வது தளத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது பணியில் இருந்த பெண் முதுநிலை கிளை மேலளரான கல்யாணி நம்பி (55) என்பவர் தீயில் உடல் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி நிர்வாக அதிகாரியான ராம் என்பவருக்கு காலில் தீ காயம் ஏற்பட்டு, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
'போலீஸுக்கு போன் பண்ணு'
இந்த தீ விபத்து ஏற்படுவதற்கு முன் கல்யாணி நம்பி, தனக்கு செல்போனில் அழைத்து பதற்றத்துடன் 'போலீஸுக்கு போன் பண்ணு' என கூறிய நிலையில் அழைப்பு துண்டித்தாகவும் அதன் பிறகே இந்த தீ விபத்து நடந்திருக்கிறது, இதனால் தனது தாயாரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கல்யாணி நம்பியின் மகன் லட்சுமி நாரயணன் திலகர்திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் தீ விபத்தில் காயம்பட்ட ராமை மீட்கும் போது, அலுவலகத்தில் உள்ளே கல்யாண நம்பி இருப்பது குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை என மீட்பு பணியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரும் தெரிவித்திருந்தார்.
இதனால் ராம் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் திலகர்திடல் காவல்துறையினர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் தீ விபத்து நடைபெற்ற போது கல்யாணி நம்பி அறையில் சகபணியாளர் ராம் இருந்ததால் அவர் மீது சந்தேகம் வலுத்தது.

ஆனால் ராம் காலில் ஏற்பட்ட தீ காயத்திற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவரிடம் விசாரணை செய்வதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று முன்தினம் காவல்துறையினர் ராமிடம் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.
ஆவணங்களில் முறைகேடு...
தீ விபத்தில் உயிரிழந்த பெண் முதுநிலை மேலாளரான கல்யாணி நம்பி(55) கடந்த மே மாதம் திருநெல்வேலியில் இருந்து பணி உயர்வு பெற்று மதுரை எல்ஐசி கிளை அலுவலகத்திற்கு பணிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதே அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக ராம் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் தொடர்பான சில ஆவணங்களில் குளறுபடி மற்றும் முறைகேடு இருப்பதாகவும் தெரியவந்து, அது குறித்து கல்யாணிநம்பி, ராமிடம் சில மாதங்களாக தொடர்ந்து விசாரித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ராம் அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி அதனை பார்த்து அவரது மகனுக்கு செல்போன் மூலமாக பேசி காவல்துறையினரை வர சொல் என கூறியுள்ளார்.
பெண் அதிகாரி எரித்து கொலை
இதனால் ஆத்திரமடைந்த ராம் உடனடியாக பெட்ரோலை கல்யாணி நம்பியின் மீது ஊற்றிவிட்டு கதவை பூட்டிவிட்டு வந்துள்ளார். அப்போது அருகில் இருந்த தீயானது கல்யாணி நம்பியின் மீது பட்டு அவர் உடல் எரிய தொடங்கியுள்ளது.

கல்யாணி நம்பியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீப்பற்றியபோது ராமின் காலிலும் பெட்ரோல் பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியில் ஓடிவந்ததாகவும் தீ இரண்டாவது தளத்தில் பரவத் தொடங்கியதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இரண்டாவது தளத்திற்கு சென்று காயம்பட்டு கிடந்த ராமை மட்டும் பார்த்து அவரை ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பெண் முதுநிலை மேலாளர் உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு உதவி நிர்வாக அதிகாரி ராமை திலகர் திடல் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த மே மாதம் மதுரை எல்ஐசி அலுவலகத்தில் பணியில் சேர்ந்த பெண் முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி நேர்மையாக பணிபுரியக்கூடியவர் என்பதால் அங்கு இருந்த ஆவணங்களில் உள்ள குளறுபடி , முறைகேடு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















