இனி வரும் காலத்தில் AI வளர்ச்சியால் வாரத்தில் 3 நாள் மட்டுமே வேலையா?- அமேசான் நி...
50 ஆண்டு சம்பளத்தை புத்தகங்களுக்கே செலவிட்ட நடத்துனர்: 20 லட்சம் நூல்களுடன் இலவச நூலகம்!
2026 ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ விருது' பெற்ற 75 வயதான அங்கே கௌடாவின் கதை அமைதியான ,அதே சமயம் அசாதாரணமான சான்றாகத் தனித்து நிற்கிறது. கர்நாடகாவின் கிராமப்புறத்தில் ஒரு எளிய தொடக்கத்திலிருந்து, இந்தியாவின் மிகப்பெரிய இலவச அணுகல் நூலகம் ஒன்றின் நிறுவனராக ஆனது வரை அங்கே கௌடாவின் வாழ்க்கை அர்ப்பணிப்பு பயணமாகும்.

கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த அங்கே கௌடா, புத்தகங்கள் அரிதாக இருந்த மற்றும் வாசிப்பு பழக்கம் இல்லாத ஒரு சூழலில் வாழ்ந்தார். இருப்பினும் அத்தகைய சூழல்தான் இவருக்கு அறிவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. கன்னடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் அங்கே கௌடாவுக்கு, கல்லூரிக் காலங்களில் ஒரு ஆசிரியர் கொடுத்த உத்வேகம் தான் வாசிப்பின் பாதையில் வாழ்வை திருப்பியது.
இவரின் ஆரம்பகால வாழ்க்கை அவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருக்கவில்லை. ஒரு பேருந்து நடத்துனராகவும், பின்னர் ஒரு சர்க்கரை ஆலையின் நேரக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். குறைந்த வருமானம் இருந்த போதிலும் வருமானத்தில் பெரும் பகுதியை புத்தகங்களுக்காக செலவிட்டார். சாதாரணமாகத் தொடங்கிய இந்த பயணம், படிப்படியாக மகத்தான தொலைநோக்குப் பார்வையாக உருவெடுத்தது.

மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில் அமைந்துள்ள "புஸ்தக மனே" (புத்தகங்களின் இல்லம்) என்ற ஒரு பிரமாண்டமான தனிநபர் நூலகமாக உருவெடுத்தது. தன்னுடைய வீட்டை விற்று விட்டு , 1500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இதை உருவாக்கி நூலகத்தின் ஒரு மூலையில் தனது மனைவி மகனுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நூலகத்தில் அரிய கையெழுத்து பிரதிகள் ,ஆய்வு இதழ்கள், அகராதிகள், வரலாற்று நூல்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன.
அங்கே கௌடாவின் சாதனையில் குறிப்பிடத்தக்கதாக விளங்குவது , இதற்காக இவர் எந்த ஒரு நிறுவன நிதிஉதவியோ, அரசாங்க ஆதரவோ இல்லாமல் இந்த களஞ்சியத்தை தனி ஒரு நபராக உருவாக்கியுள்ளார். நூலகத்தின் ஒவ்வொரு அலமாரியும், ஒவ்வொரு புத்தகமும் இவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.

பல தனியார் சேகரிப்புகளைப் போல் அல்லாமல், புஸ்தக மனே ஒரு மூடிய அல்லது பிரத்யேகமான இடம் அல்ல. இது மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு பணிக்குத் தயாராகும் மாணவர்கள், நாடு முழுவதிலும் இருந்து வரும் அறிஞர்கள் என அனைவருக்கும் திறந்தே இருக்கிறது. எல்லோருக்கும் அறிவு எளிய முறையில் சென்று சேர வேண்டும் என்பதே அங்கே கௌடாவின் குறிக்கோளாக இருக்கிறது.

2009 -ம் ஆண்டில் கன்னட புத்தக ஆணையத்திடமிருந்து, ஜிபி ராஜரத்தினம் சாகித்திய பரிசாரிகா விருது , 2011 -ல் ஆல்வாவின் நுடிரிசி விருது ,2014 -ல் ராஜ்யோத்சவ விருது, 2016 -ல் லிம்கா சாதனைப் புத்தகத்தில் 'மிகப்பெரிய தனிப்பட்டப் புத்தக சேகரிப்பு' பிரிவில் இடம் பெற்றார். 2026 -ம் ஆண்டில் இந்திய அரசு, "பெயர் அறியப்படாத நாயகர்கள்" என்ற பிரிவின் கீழ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ விருது ' வழங்கி அங்கீகரித்தது.
அங்கே கௌடாவின் வாழ்க்கை, ஒரு நோக்கத்துடன் வாழ்வதற்கான பாடத்தை வழங்குகிறது. அவர் புகழ், செல்வம் ,அங்கீகாரத்தை நாடவில்லை. மாறாக, மற்றவர்கள் கற்கவும், வளரவும் ,கனவு காணவும், தன் வாழ்நாளை புத்தகங்களில் அர்ப்பணித்துள்ளார். புத்தகங்களின் இல்லம் வெறும் நூலகம் மட்டுமல்ல, இந்நாட்டின் நம்பிக்கைக்கான சின்னம், கற்றலின் கலங்கரை விளக்கம், ஒவ்வொரு புத்தகமும் உலகை மற்றும் ஆயுதங்கள்.



















