செய்திகள் :

கால்களில் காலணி இல்லை… ஆனால் கண்களில் கனவு; 1600 மீட்டர் 6 நிமிடம்: கைம்பெண் தாயின் நம்பிக்கை ஓட்டம்

post image

இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், குடும்பத்தின் பாரத்தைத் தாங்கவும்… சேலையில், வெறுங்காலுடன் ஓடிய கவிதா மஹதோவின் ஓட்டம் சமூக வலைதளங்களில் நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளது.

ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை என்றால், முறையான விளையாட்டு உடை, ஓடும் காலணி, பயிற்சிக்கான வசதிகள் என பல விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால், ஜார்க்கண்டின் ராம்கரைச் சேர்ந்த கவிதா மஹதோவிடம் அவற்றில் எதுவுமே இல்லை. இருந்தது ஒரு சேலை… வெறுங்கால்கள்… மனதில் ஒரு கனவு. அந்தக் கனவுக்காகவே அவர் 1,600 மீட்டர் தூரத்தை சுமார் ஆறு நிமிடங்களில் ஓடி முடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்தக் காணொளி, ஒரு பெண் ஓடும் காட்சியை மட்டும் காட்டவில்லை. வாழ்க்கையின் சுமைகளைத் தாண்டி ஓட முயற்சிக்கும் ஒரு தாயின் போராட்டத்தையும் காட்டுகிறது. ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டம், சோசோ கிராமத்தைச் சேர்ந்த கவிதா மஹதோ, ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புக்கான உடல் தகுதித் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

கைம்பெண் தாயின் நம்பிக்கை ஓட்டம்

வாழ்க்கையை நகர்த்துவதற்காக செங்கல் சூளையில் கூலி வேலை செய்தும் வருகிறார். காலையில் தொடங்கும் வேலை, குடும்பச் செலவுகள், குழந்தைகளின் தேவைகள் என ஒரு பக்கம் வாழ்க்கையின் பாரம். இன்னொரு பக்கம், தனது குடும்பத்திற்கு நிலையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை.

அவரது ஓட்டத்தில் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது வேகம் மட்டுமல்ல. சேலை அணிந்தபடியும், காலில் காலணி இல்லாமலும் அவர் ஓடியதுதான். 1,600 மீட்டர் தூரத்தை சுமார் ஆறு நிமிடங்களில் கடந்து, ஆட்சேர்ப்புக்காக நிர்ணயிக்கப்பட்ட பத்து நிமிட காலக்கெடுவுக்குள் தனது ஓட்டத்தை நிறைவு செய்துள்ளார். 

ஆனால், அந்த ஆறு நிமிடங்களுக்குப் பின்னால் பல ஆண்டுகளின் வலி இருக்கிறது. கவிதா ஒரு கைம்பெண், அவருக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர். கணவரை இழந்த பிறகு, தனது குழந்தைகளை வளர்ப்பது மட்டுமல்லாமல், குடும்பத்தின் மற்ற பொறுப்புகளையும் அவர் சுமந்து வருகிறார். மாமியார், மாமனாரைப் பராமரித்துக்கொண்டே தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.

வாழ்க்கை அவருக்கு எளிதான பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், தனது கனவை விட்டுவிடவும் கவிதா தயாராக இல்லை. தனது குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கம். அதற்காக அரசு சார்ந்த ஒரு நிலையான வேலையைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புக்குத் தயாராகி வருகிறார். முன்பு பாதுகாப்புப் பணியாளராகவும் அவர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதும், ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதும் அவரது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. மற்றவர்களுக்கு அது ஒரு சாதாரண ஓட்டப்பயிற்சியாகத் தெரியலாம். ஆனால், கவிதாவுக்கு ஒவ்வொரு ஓட்டமும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கிய அடியாக இருக்கிறது.

“எனக்காக மட்டும் அல்ல… என் குழந்தைகளுக்காக” என்ற எண்ணமே அவரது கால்களுக்கு வேகத்தைத் தருவதாக அவரது கதை உணர்த்துகிறது.

கைம்பெண் தாயின் நம்பிக்கை ஓட்டம்

ராம்கரில் நடைபெறவுள்ள ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பில் மொத்தம் 284 பணியிடங்கள் உள்ளன. இதில் 213 பணியிடங்கள் கிராமப்புற ஊர்க்காவல் படைக்கும், 71 பணியிடங்கள் நகர்ப்புற ஊர்க்காவல் படைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கும் குறிப்பிட்ட அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், கணவனை இழந்த மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களுக்கும் தனி ஒதுக்கீடு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆட்சேர்ப்பின் ஒரு பகுதியாக 1,600 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட உடல் தகுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன. அக்டோபர் 24 முதல் நவம்பர் 5 வரை இந்த உடல் தகுதித் தேர்வு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெறுங்காலில் ஓடியதால் மட்டும் கவிதா பேசப்படவில்லை, வசதிகள் இல்லாத சூழ்நிலையிலும் முயற்சியை நிறுத்தாமல் தொடர்ந்ததால்தான் அவரது கதை பலரையும் நெகிழச் செய்துள்ளது. காலில் காலணி இல்லாமல் ஓடிய அந்தப் பெண்ணின் கால்களில் இருந்த காயங்களைவிட, மனதில் இருந்த நம்பிக்கை வலிமையானதாக இருந்தது.

ஒரு பக்கம் குடும்பப் பொறுப்பு, இன்னொரு பக்கம் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம்.… அதற்கிடையில் தனக்கான ஒரு நிலையான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற போராட்டம். இவை அனைத்தையும் சுமந்துகொண்டே அவர் ஓடுகிறார். அவரது ஆறு நிமிட ஓட்டத்தை வெறும் சாதனையாகப் பார்க்க முடியாது.. அது, வாழ்க்கை எத்தனை தடைகளை முன்வைத்தாலும், ஒரு கனவை அடைய முயற்சி செய்யும் மனிதனின் மனவலிமைக்கான எடுத்துக்காட்டு.

இன்று அந்தக் காணொளி ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்திருக்கலாம். ஆனால், கவிதாவுக்கு அந்த ஓட்டம் வைரலாக வேண்டும் என்பதற்காக அல்ல. அவரது குழந்தைகள் நாளை தங்களது தாயைப் பார்த்து பெருமைப்பட வேண்டும் என்பதற்காக.

சேலை மடிப்புகளுக்குள் குடும்பப் பொறுப்புகளையும், வெறுங்கால்களுக்குள் வாழ்க்கையின் வலிகளையும் சுமந்துகொண்டு ஓடிய கவிதா மஹதோ, தனது இலக்கை நோக்கி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த ஓட்டத்தின் முடிவில் ஒரு வேலை கிடைக்குமா என்பது காலத்தின் கையில் இருக்கலாம். ஆனால், தனது குழந்தைகளுக்காக ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற அவரது முயற்சி ஏற்கெனவே ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டது. ஏனெனில்… சில ஓட்டங்களுக்கு வெற்றிக்கோடு தேவையில்லை.

அந்த ஓட்டமே ஒரு தாயின் கனவாக மாறிவிடுகிறது.

`சிறைத்துறையின் பிழை; மாறிய சடலம்' - 21 ஆண்டுகளுக்குப் பிறகும் லாட்டரி விற்றுப் போராடும் ராஜேஷ்!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாடு அருகே உள்ள கருவாற்றா புத்தன்புரை பகுதியைச் சேர்ந்தவர் கே.ராஜேஷ் (50). உயிரோடு இருக்கும்போதே 'மறைந்தவர்' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, சொந்த வீட்டிலேயே ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை திவான் Tottenham-ஐ தேடி வந்த ஆஸ்திரேலியப் பேரப்பிள்ளை! - கல்லறையில் கசிந்த நெகிழ்ச்சி

காலத்தின் சுழற்சியில் தேசங்களின் எல்லைகளும், நூற்றாண்டுகளின் இடைவெளிகளும் மறைந்துபோகலாம். ஆனால், மனித உணர்வுகளும், குருதியின் வழியே வழியும் பாசத் தேடலும் என்றும் மங்கிப்போவதில்லை!அதற்குச் சான்றாக, ஆஸ்... மேலும் பார்க்க

“மருத்துவம் என் Profession.. அதை Service ஆக செய்கிறேன்" - Trust Floor மூலம் உதவும் டாக்டர் குமரேசன்

பணம் இல்லாதவர்களுக்கு முதலில் சிகிச்சை.. பணம் பிறகு – Global Mission Hospital டாக்டர் குமரேசன்மருத்துவம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, ஒருவருடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சேவை. அந்த எண்ணத்தோடு செயல்பட்டு... மேலும் பார்க்க

மனநலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 7,000 கி.மீ பைக் பயணம்; பெண் ரைடரின் முன்னெடுப்பு!

இந்தியாவில் ஏழு பேரில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநலப் பிரச்னை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மனநலச் சிகிச்சை பெறுவதில் சமூகத் தயக்கம், பாகுபாடு குறித்த அச்சம் உள்ளிட்டவை பெரும் தடைகளாக உள்ளன. அ... மேலும் பார்க்க

`சாப்பாட்டுக்கே வழியில்லை ஐயா..' கலெக்டர் ஆபீஸ் வாசலில் கலங்கிய முதிய தம்பதி; உதவிய மனிதநேயர்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கையில் ஊன்றுகோலுடன் தள்ளாடியபடி நடந்து வந்த முதிய தம்பதியின் காட்சி, அங்கே நின்ற அனைவரின் நெஞ்சையும் பிழிந்தது.கு... மேலும் பார்க்க

"இலவச கேஸ் சிலிண்டரை 2 மாசமா நிறுத்திட்டாங்க; ஆனாலும்..." - ரூ.1 இட்லி பாட்டியின் அன்பு சேவை!

கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் பகுதியில் ஏழை, எளிய தொழிலாளர்களின் பசி தீர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக வெறும் 1 ரூபாய்க்கு கமலாத்தாள் பாட்டி இட்லி வழங்கி வருகிறார். பாட்டியின் இந்தச் சேவைக்காக தனியார் ந... மேலும் பார்க்க