"இலவச கேஸ் சிலிண்டரை 2 மாசமா நிறுத்திட்டாங்க; ஆனாலும்..." - ரூ.1 இட்லி பாட்டியின...
"இலவச கேஸ் சிலிண்டரை 2 மாசமா நிறுத்திட்டாங்க; ஆனாலும்..." - ரூ.1 இட்லி பாட்டியின் அன்பு சேவை!
கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் பகுதியில் ஏழை, எளிய தொழிலாளர்களின் பசி தீர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக வெறும் 1 ரூபாய்க்கு கமலாத்தாள் பாட்டி இட்லி வழங்கி வருகிறார்.
பாட்டியின் இந்தச் சேவைக்காக தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு உருளைகள் தற்போது சரியாகக் கிடைப்பதில்லை. இதனால் பாட்டி விறகுகளைச் சேகரித்தும், வீட்டிலுள்ள சிறிய அடுப்பைப் பயன்படுத்தியும் இட்லி சுட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

விறகு அடுப்பின் கடும் வெப்பத்திலும், புகைக்கும் நடுவே நின்று குறைந்த அளவிலான இட்லிகளையே சுடும் கமலாத்தாள் பாட்டியயின் உடல் உழைப்பும், அதற்காகச் செலவிடும் நேரமும் இரட்டிப்பாகியுள்ளது.
இருப்பினும் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு உள்ளிட்ட பிரச்னைகளைத் தாண்டி, ஒரு ரூபாய்க்கு இட்லி தருவதை நிறுத்தி விடாமல் தொடர்ந்து வருகிறார். பாட்டிக்குத் துணையாக அக்கம் பக்கத்தினர் தேங்காய் உரித்துக் கொடுப்பது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற சிறிய உதவிகளைச் செய்து வருகின்றனர்.
தங்கள் கிராமத்திற்கு பாட்டியின் தியாக உணர்வும் சேவையும் பெரும் பெருமை சேர்க்கிறது என ஊர் மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கமலாத்தாள் பாட்டி கூறியதாவது, ”ஐம்பது வருசமா இட்லி சுடுறேன். மொதல்ல ஐம்பது பைசாவுக்கு இட்லி கொடுத்திட்டு இருந்தேன். இப்போ ஒரு ரூபாய்க்கு கொடுக்குறேன். எப்பவும் ஒரு ரூபாய்தான். நான் சாக வரைக்கும் ஒரு ரூபாய்க்குத்தான் கொடுப்பேன்.
தினமும் ஐநூறு, அறநூறு பேரு சாப்பிட வருவாங்க. இந்த 2 மாசமா சிலிண்டர் கிடைக்காம தட்டுப்பாட இருக்கு. இதனால இட்லி சரியா சுட முடியல. இப்போ முன்ன மாதிரி இட்லி சுட முடியல. கடைக்கு வர கூலிக்குப் போறவங்க எல்லாம் வருத்தப்படுறாங்க.

கடைக்கு வரவங்க ஏன் இட்லி சுடுவதில்லை பாட்டினு கேட்குறாங்க. கேஸ் இல்ல சாமினு நான் சொல்லிட்டு இருக்கேன். காசு இருக்குறவங்க வேற கடைக்குப் போயி சாப்பிடுவாங்க. காசு இல்லாத ரொம்ப ஏழைக எப்படிச் சாப்பிடுவாங்க? பசியோடு வரவங்களை வெறும் வயிற்றோடு அனுப்பறது கஷ்டமா இருக்கு.
கேஸ் ஆயிரத்து நூறு ரூபாக்கு விக்குது. அதை வாங்கி இட்லி சுட்டு ஒரு ரூபாய்க்குத் தர முடியுமா? இட்லி சுடுறதை கம்மி பண்ணிட்டேன். இருந்தாலும் நான் இருக்குற வரைக்கும் ஒரு ரூபாக்கு இட்லி தருவதை நிறுத்தமாட்டேன். எனக்கு தந்திட்டு இருந்த கேஸ் மீண்டும் கிடைச்சா நல்லாயிருக்கும். அதுக்காக கலெக்டரிடம் போய் மனு கொடுத்தேன்” என்றார்.















