நாயுடன் நடைபயிற்சி; விளையாட்டு வீரர்களை வெளியேற்றிய ஐ.ஏ.எஸ், டெல்லி மாநகராட்சி க...
"60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் மரபணு மதுரையில் கிடைக்கிறது" - அமர்நாத் ராமகிருஷ்ணன்
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் சார்பில், 'இந்தியாவின் வரலாற்றைச் சிதைவுகளிலிருந்து மீட்டெடுத்தல்' என்ற தலைப்பிலான ஒரு நாள் மாநில மாநாடு மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், “கீழடி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஆனால் கீழடி என்றாலே ஏன் சிலருக்குப் பயம் வருகிறது? இந்தியா என்ற பன்முகத்தன்மைக்கு எதிராகப் பயம் கொண்டுள்ளார்கள். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை? இதற்கு விரிவான அகழாய்வு நடைபெற்றதே காரணம்.
2015 வரை எனக்கு கீழடி பற்றி தெரியாது. ஆனால் இன்றைக்கு கீழடி குறித்து உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 150க்கும் மேற்பட்ட தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று இருக்கின்றன. 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ள ஒரே இடம் என்றால் அது தமிழ்நாடுதான்.

ஹோமோசேப்பியன்ஸ் என்கிற மனித இனம் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றியது. அந்த மனிதன் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் குடியேறி உள்ளான். அப்படிக் குடியேறிய மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனுடைய மரபணு இன்னும் கிடைக்கிறது.
குறிப்பாக நம்முடைய மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில்தான் இந்த ஹோமோசேப்பியன்ஸின் மரபணு உள்ளதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நாம் கடந்த 60,000 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வரலாற்று உண்மையை இன்று முழுமையாக யாரும் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.
ஆனால் நமக்கு கி.மு. 300-இல் தான் நமது சங்கக் காலமும், நாகரிகமும் தொடங்குகிறது என இன்று வரை வரலாற்று மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகள் மூலம் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்கள் எல்லாம் வெளிப்படையாக வெளி உலகிற்குத் தெரியாத காரணத்தாலேயே நமது வரலாற்றை இன்றும் மாற்ற முடியாமல் இருக்கின்றோம். அது எப்போது மாறும்.
இதை மாற்ற முயல்வதாலேயே இவ்வளவு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம். எவ்வளவோ ஆய்வுகள் நடந்து இருக்கின்றன. உண்மைக் கருத்துகளைச் சொல்வது என்பதில் ஆணித்தரமாக உள்ளோம்.
என்னிடம் இருக்கும் ஆய்வறிக்கை வெளியே வந்தால்தான் உலகத்துக்குத் தெரியும். ஆனால் அதை வெளியிடுவதில் பல தடங்கல்கள் ஏற்படுகின்றன. தொல்லியலில் ஆதாரங்கள் கிடைக்கும் போதெல்லாம் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
கீழடி ஆய்வு அறிக்கையில் திருத்தம் செய்வதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை. அந்த அறிக்கை வெளியானால் அது இன்னும் நிறைய ஆய்வுகளுக்கு வழிவகுக்கும்.
நாம் கதையிலேயே மூழ்கி விட்டோம், வரலாற்றை எழுதி வைப்பதில்லை. குறிப்பாக இராமாயணம், மகாபாரதம் ஆகிய புராணங்களைக் கேட்பதே நம்முடைய வாடிக்கையாக இருக்கிறது.

நம்முடைய வரலாற்றை எழுத வேண்டும் என்கிற எண்ணமே நமக்கு இல்லை. நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள்தான் நமக்கு வரலாறு எழுதுவது குறித்து சொல்லிக் கொடுத்தார்கள். வரலாற்றை அறிவியலாகப் பார்க்க வேண்டும்.
பானை ஓட்டில் எழுதும் பழக்கம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே இருந்தது. 1672 பானைகளில் எழுத்துகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். பானையில் சாமானிய மனிதர்கள்தான் எழுதுவார்கள், இதன் மூலம் அப்போதே சாமானிய மக்களுக்கு எழுத்தறிவு என்பது இருந்திருக்கிறது. ஆய்வுகளில் கிடைக்கும் செய்திகளைச் சரியான கண்ணோட்டத்துடன் மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

மக்கள் நிரந்தரமாக வாழ்ந்தால்தான் புதைப்பிடம் உருவாக்குவார்கள். நாடோடிகளுக்கு அது தேவையில்லை. தமிழகத்தில் மட்டும் அதிக அளவிலான புதைப்பிடங்களைத் தேடினோம். அதற்கான இடங்களைத் தேடிய போது கிடைத்த இடம்தான் கீழடி. ஆனால் கீழடியில் இதுவரை 5 சதவீதம் ஆய்வுகூட செய்யப்படவில்லை. இந்த ஆய்வே இன்று உலகைப் பேச வைத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.















