A2B : ரூ.1,600 கோடி... கைமாறிய பெரும்பான்மையான பங்குகள்! - வாங்கியது யார் தெரியு...
A2B : ரூ.1,600 கோடி... கைமாறிய பெரும்பான்மையான பங்குகள்! - வாங்கியது யார் தெரியுமா?
போதி ட்ரீ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் A2B-இன் பெரும்பான்மையான பங்குகளை சுமார் 180 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,600 கோடி) வாங்குவதன் மூலம் அடையாறு ஆனந்த பவனின் உரிமையைத் தன்வசமாக்கி இருக்கிறது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் A2B நிறுவனம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்திய உணவு மற்றும் இனிப்பகத் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. அடையாறில் சாதாரணமாக ஒரே இனிப்பு கடையாகத் தொடங்கிய இதன் பயணம் இப்போது நாடு முழுவதும் 160 கிளைகளுடன் செயல்பட்டுவருகிறது.
வெளிநாடுகளிலும் 30-க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
A2B நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முயற்சியில் அதன் உரிமையாளர்கள் சீனிவாச ராஜா மற்றும் வெங்கடேசன் ஈடுபட்டிருந்த நிலையில் போதி ட்ரீ சிஸ்டம்ஸ் இதன் பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ளது.

இந்த போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த ஜேம்ஸ் மர்டாக் (ரூபர்ட் மர்டாக்கின் மகன்) மற்றும் முன்னாள் ஸ்டார் இந்தியா, டிஸ்னி நிர்வாகி உதய் சங்கர் ஆகியோரால் 2021-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
போதி ட்ரீ சிஸ்டம்ஸ் ஏற்கெனவே ஜியோ ஸ்டார் மற்றும் ஆலென் (ALLEN) என்ற தேர்வுப் பயிற்சி நிறுவனங்களில் முதலிடு செய்துள்ளது. தற்போது A2B நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதன் மூலம் உணவுத் துறையிலும் கால்பதித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம், A2B நிறுவனத்தை இந்தியா மற்றும் சர்வதேசச் சந்தைகளில் இன்னும் பெரிதாக விரிவாக்கம் செய்யும் வாய்ப்புள்ளது.

இனி A2B நிறுவனத்தின் புதிய இயக்குநர் குழுவுக்குத் தலைவராக போதி ட்ரீ சிஸ்டம்ஸின் இணை நிறுவனர் உதய் சங்கர் இருப்பார் எனவும் கூறப்படுகிறது. நிறுவனத்தின் உரிமை, நிர்வாகம் யார் கையில் என்பது போகப்போக தெரியும்.
"எங்களின் அடுத்தகட்ட அத்தியாயத்தை போதி ட்ரீயுடன் முன்னெடுப்பது மகிழ்ச்சி" என்று A2B நிறுவனர் சீனிவாச ராஜா கூறியுள்ளார்.


















