Mahindra: குழப்பிக்காதீங்க! XUV7OO - XUV7XO ரெண்டும் ஒரே கார்தான்!எம்மாடியோவ்.....
ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, அன்புமணி தரப்பு பா.ம.க ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. மேலும், சில கட்சிகள் இணையும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் பணியை அ.தி.மு.க தொடங்கி முடித்தது. அதைத் தொடர்ந்து, வேட்பாளர் நேர்காணல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேர்காணல் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில், அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற நடிகையும், கட்சி நிர்வாகியுமான நடிகை கௌதமி, நேர்காணலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ``தேர்தல் வேட்பாளர் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறேன். அண்ணன் எடப்பாடி என்ன முடிவு எடுக்கிறாரோ அதுவே என் முடிவு. என்ன நடந்தாலும், இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றிப்பெறும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. அதற்காக நானும், என்னுடன் இருப்பவர்களும் கடுமையான உழைப்போம்.
நான் விருப்ப மனுவில் கொடுத்த ராஜபாளையம் தொகுதியில் இன்று நேற்றல்ல பல வருடமாக அந்த மக்களுடன், இளைஞர்களுடன், பெண்களுடன், விவசாயிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் என் ஊர்தான் என்றாலும், எனக்கு ராஜபாளையம் மிக நெருக்கமான ஊராக உணர்கிறேன்.
இந்த தேர்தலில், அந்தத் தொகுதியில் போட்டியிட்டு அந்தப் பகுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், அந்த தொகுதியில் யாரை நிறுத்த வேண்டும் என்பது அண்ணன் எடப்பாடியாரின் முடிவு என்பதிலும் நான் தெளிவாக இருக்கிறேன். நான் யாருக்கும் அட்வைஸ் செய்வதில்லை.

பொது வாழ்க்கை என்றாலும், சினிமா என்றாலும் இரண்டும் கடினப் பாதைதான். விஜய் இரண்டிலும் கால் வைத்திருக்கிறார். அவர் எல்லாவற்றையும் கடந்து வந்துகொண்டிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு செயல்பாடும்தான் அவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
நேர்மையாக முயற்சி செய்யும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதிமுக-வின் வாக்குகளை விஜய் கொண்டுசெல்வார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களின் விருப்பம் மட்டுமல்ல, கள நிலவரத்தையும் புரிந்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும் இதை ஏற்கமாட்டார்கள்.
நான் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டால் நூறு சதவிகிதம் வெற்றி உறுதி என்பதில் நம்பிக்கை இருக்கிறது. மக்களுக்கு யார் முழு மனதுடன் நல்ல முறையில் மக்களுக்காக செயல்பட முடியுமோ அவர்களுக்குதான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வேண்டும். அவர்கள் புதியவர்கள், பழையவர்கள் என்றெல்லாம் கணக்கில்லை" என்றார்.














