செய்திகள் :

Artemis II: நிலவின் மறுபக்கத்தில் 40 நிமிட திக் திக்! - இணைப்பு தூண்டிக்கப்பட்டு மீண்ட ஆர்டெமிஸ் II

post image

நிலவைச் சுற்றி பயணம் மேற்கொண்டுள்ள ஆர்டெமிஸ் II விண்கலம், நிலவின் மறுபக்கத்திற்குச் சென்றபோது, சுமார் 40 நிமிடங்கள் பூமியுடனான தொடர்பை இழந்தது.

நிலவின் மறைமுகப் பகுதிக்கு விண்கலம் செல்லும்போது சிக்னல்கள் துண்டிக்கப்படுவது இயல்பான ஒன்று என்றாலும், மீண்டும் தொடர்பு கிடைத்த தருணம் நாசா கட்டுப்பாட்டு அறையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

"பூமியின் குரலை மீண்டும் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது; நாங்கள் எப்போதும் பூமியையும், ஒருவருக்கொருவரையும் தான் தேர்ந்தெடுப்போம்" என விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார்.

இந்தத் தகவல் தொடர்பு துண்டிப்புக்கு முன்னதாக, ஆர்டெமிஸ் II குழுவினர் விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்தனர்.

1970-ம் ஆண்டு அப்போலோ 13 விண்கலம் பூமியில் இருந்து சுமார் 4,00,172 கி.மீ தூரம் வரை சென்று படைத்த சாதனையை, இந்த ஆர்டெமிஸ் II விண்கலம் முறியடித்தது.

வீரர்கள் பூமியில் இருந்து சுமார் 4,06,778 கி.மீ தொலைவை எட்டி, மனித வரலாற்றிலேயே பூமியை விட்டு அதிக தூரம் பயணித்தவர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். வரும் தலைமுறையினருக்கு இது ஒரு சவாலாக அமையும் என விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் பெருமிதத்துடன் கூறினார்.

நிலவின் மேற்பரப்பை மிக அருகில் இருந்து கவனித்த வீரர்கள், அதன் அதிசயங்களை விவரித்தனர். விக்டர் குளோவர் நிலவின் பகல் மற்றும் இரவு இணையும் பகுதியான 'டெர்மினேட்டர்' ஐ விவரிக்கும்போது, "இதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது, விவரிக்க இன்னும் கூடுதல் நேரம் வேண்டும்" என்று வியந்தார். ரோபோக்கள் எடுத்த படங்களை விட மனிதக் கண்களால் அந்த காட்சிகளை விவரித்தது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த நெகிழ்ச்சியான பயணத்தில் ஒரு உருக்கமான நிகழ்வும் அரங்கேறியது.

தூர சாதனையைப் படைத்த பிறகு, வீரர்கள் நிலவில் உள்ள பெயர் சூட்டப்படாத இரண்டு குழிகளுக்கு (Craters) பெயர்களைப் பரிந்துரைத்தனர். முதலாவது குழிக்கு தங்கள் விண்கலத்தின் பெயரான 'இண்டெக்ரிட்டி' என்றும், இரண்டாவது குழிக்கு மிஷன் கமாண்டர் ரீட் வைஸ்மேனின் மறைந்த மனைவி கரோல் (Carroll) நினைவாக 'கரோல்' என்றும் பெயரிட வேண்டுகோள் விடுத்தனர்.

தற்போது இந்த ஓரியன் விண்கலம் நிலவைச் சுற்றி முடித்துவிட்டு, பூமிக்குத் திரும்பும் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

இன்னும் நான்கு நாட்களில் வீரர்கள் பாதுகாப்பாகப் பசிபிக் பெருங்கடலில் தரையிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Artemis II: முடிவுக்கு வந்த 50 ஆண்டுக்காலக் காத்திருப்பு; மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா

அப்போலோ 17 திட்டத்திற்குப் பிறகு, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் கனவு நனவாகாமல் இருந்தது. நிலவின் தடம் அழிவதற்குள், மீண்டும் அங்கே மனிதர்களின் பாதச்சுவடுகளைப் பதிக்க நாசா... மேலும் பார்க்க