"நான் 'ராமாயணா' படத்தில் முதலில் நடிக்க மாட்டேன் என்றுதான் சொன்னேன், ஏனென்றால்.....
Artemis II: முடிவுக்கு வந்த 50 ஆண்டுக்காலக் காத்திருப்பு; மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா
அப்போலோ 17 திட்டத்திற்குப் பிறகு, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் கனவு நனவாகாமல் இருந்தது. நிலவின் தடம் அழிவதற்குள், மீண்டும் அங்கே மனிதர்களின் பாதச்சுவடுகளைப் பதிக்க நாசா தயாராகிவிட்டது. பல கோடி மக்களின் கனவுகளைச் சுமந்துகொண்டு, 'ஆர்டெமிஸ் 2' விண்கலம் நிலவை நோக்கித் தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இது வெறும் விண்வெளிப் பயணம் மட்டுமல்ல; மனித இனம் அடுத்த கிரகத்திற்குச் செல்வதற்கான ஒரு பிரமாண்ட நுழைவுவாயில்! புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டுள்ள இந்த விண்கலம், மனித வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இது நிலவில் தரை இறங்கப் போவதில்லை என்றாலும், நிலவைச் சுற்றி வந்து பூமியை வந்தடையும் இந்த 10 நாள்கள் பயணம், எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு முன்னோட்டமாக அமையும்.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமே இதில் பயணிக்கும் நான்கு விண்வெளி வீரர்கள்தான். இதில் நிலவுக்குச் செல்லும் முதல் பெண்மணி (கிறிஸ்டினா கோச்) மற்றும் ஒரு கறுப்பின வீரர் (விக்டர் குளோவர்) நிலவுப் பயணத்தில் இணைந்து வரலாறு படைத்துள்ளனர். இவர்களுடன் ரீட் வைஸ்மேன் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் ஆகியோரும் நிலவைச் சுற்றியுள்ள ஆழமான விண்வெளிப் பகுதிக்குச் சென்றுள்ளனர். வீரர்களின் பாதுகாப்பு மற்றும் விண்கலத்தின் செயல்பாடுகளைச் சோதிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
சுமார் 23 லட்சம் கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தச் சவாலான பயணத்தில், 'ஒரியன்' விண்கலம் நிலவின் மறுபக்கத்திற்குச் சென்று அங்கிருந்து பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி மீண்டும் திரும்புமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவின் தெற்குத் துருவத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், அங்கு ஒரு நிரந்தரத் தளத்தை அமைப்பதற்கான வாய்ப்புகளை நாசா ஆராய்ந்து வருகிறது. 2028-ல் திட்டமிடப்பட்டுள்ள ஆர்டெமிஸ் 3 திட்டத்தில் மனிதர்கள் நிலவில் தரை இறங்குவதற்கு இந்தத் திட்டம் ஒரு மிக முக்கியமான படிக்கட்டாகும்.

தற்போது விண்கலத்தின் அனைத்து உயிர் காக்கும் அமைப்புகளும் சீராகச் செயல்பட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் விண்கலம் பத்திரமாகத் தரையிறங்கும் வரை உலகம் முழுவதுமுள்ள விண்வெளி ஆய்வாளர்கள் இதைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இந்தத் திட்டம் வெற்றிபெறும்பட்சத்தில், மனிதர்கள் நிலவில் தங்கிச் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான வாய்ப்புகள் மிக விரைவில் சாத்தியமாகும்.















