நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?!
பண்டோரா உலகத்தில் நவி இன மனிதனாக மாறிய ஜேக் சல்லி, அந்த இனத்தின் நலனுக்காக நிற்கத் தொடங்குவதாக அவதார் முதல் பாகம் முடியும்.
மனைவி நய்த்ரி மற்றும் தன் குழந்தைகளுடன் வாழும் ஜேக் சல்லியை, மீண்டும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தாக்க வரும் பூமியைச் சேர்ந்த மனிதர்களையும், கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு வரும் நவி இன அவதாரையும் வென்று பண்டோராவைக் காப்பதாக அவதார் இரண்டாம் பாகம் முடியும்.

இந்நிலையில், இந்த மூன்றாம் பாகத்தில், சல்லியுடன் வளரும் தன் மகன் ஸ்பைடரை அழைத்துப் போகவும், சல்லியைக் கொன்று மொத்த பண்டோரா உலகைக் கைப்பற்றவும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு ஒரு அவதார் வருகிறது. உடன் மீண்டும் அதிநவீன தொழில்நுட்பம். மீண்டும் அவற்றை எல்லாம் சமாளித்து, தன் குடும்பத்தையும், தன் வீடாகக் கருதும் பண்டோராவையும் எப்படி சல்லி காப்பாற்றுகிறான் என்பதை பேசுகிறது 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' ஆங்கிலத் திரைப்படம்.
Variable High Frame Rate (HRF) இல் 48fps இல் ஆக்ஷன் காட்சிகள் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதனால், காட்சிகளில் எக்கச்சக்க அசைவுகள் வந்தாலும், அவை துல்லியமாகத் தெரிவது பலம்!
கடலுக்கு அடியில் நடக்கும் சண்டைக்காட்சிகளும் இறுதியில் வரும் போர்க் காட்சித் தொகுப்பும் அத்தொழில்நுட்பத்தின் துல்லியத்தை உணர வைக்கிறது. அதோடு, Refined Facial Performance Capture தொழில்நுட்பத்தின் உதவியோடு, அவதார் மனிதர்களாக நடிக்கும் நடிகர்களின் நடிப்பு கச்சிதமாகப் பதியப்பட்டுள்ளது.
திரையில் ஒவ்வொரு அவதார் மனிதரின் முக அசைவுகளுக்குத் தெளிவையும் நுணுக்கத்தையும் கொடுத்து, அதனூடாகக் உணர்வுகள் கடத்தப்படுகின்றன. அதனாலேயே சல்லியின் மகளின் முக பாவனைகளில் அத்தனை நேர்த்தியும் அழகும் கைகூடியிருக்கிறது!

இவர்களுக்கிடையே சேட்டைக்கார ஸ்பைடர் கதாபாத்திரத்தில் ஜாக் சாம்பியனும், கடல்சார் ஆராய்ச்சியாளராக ஜமைனேயும், நையாண்டி அதிகாரியாக ரிபிசியும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
காடுகள் நிறைந்த நிலம், கடல், எரிமலை என வெவ்வேறு நிலவியலாகவும், போர்க் காட்சிகள், பரபர சண்டைக் காட்சிகள் என ஆக்ஷன் ரூட்டிலும் ரசல் கார்ப்பென்ட்டரின் ஒளிப்பதிவு அசாத்திய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறது. பிரமாண்டங்களைக் கொண்டு வரவும், நுணுக்கத்தை ரசிக்க வைக்கவும் வண்ணங்களைப் பயன்படுத்திய விதம் க்ளாஸ்!
அவதார் வால் போல் தேவையை மீறியோடும் படத்தின் நீளத்தைக் கண்டிப்போடு கட்டிப்போடத் தவறுகிறது படத்தொகுப்பாளர்கள் குழு. மேலும், சில காட்சிகளை இன்னும் கூடுதலான செறிவோடு தொகுக்கவும் தவறியிருக்கின்றனர்.
எமோஷன், பிரமாண்டம் என இரண்டிற்கும் நல்ல தீனியைப் போட்டிருக்கிறது சைமன் ஃப்ராங்ளெனின் பின்னணி இசை. ஒட்டுமொத்தமாக, திரையுலகில் தொழிற்நுட்ப ரீதியாக புதிய உச்சத்தைத் தொட வைத்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
முதல் பாகம் அடர்காடு, இரண்டாம் பாகம் ஆழ்கடல் என வெவ்வேறு உலகங்களைக் கண்முன் கொண்டுவந்த இயக்குநர், இந்த மூன்றாம் பாகத்தில் அவற்றோடு, சிறிது எரிமலைசார் நிலத்தையும் சேர்த்து கலவையாகப் படைத்திருக்கிறார்.

நல்ல கதாநாயகன், அப்புராணி மக்கள், அதீத ஆயுதங்களுடன் களமிறங்கும் எதிரிகள், மக்களை ஒருங்கிணைத்து வெல்வது என வழமையான கதையை மீண்டும் கையிலெடுத்திருக்கிறது ஜேம்ஸ் கேமரூன் தலைமையிலான எழுத்துக் கூட்டணி.
முதலாளித்துவம், பெரு நிறுவனங்களின் பேய்ப்பசி, அழிக்கப்படும் பழங்குடிகள், இயற்கையை மதித்து வாழும் சமூகம் எனக் கதை பேசும் அரசியல், ஏற்கெனவே முந்தைய இரு படங்களிலும் போதுமான அளவு விளக்கப்பட்டுவிட்டன. அதை இன்னும் ஆழமாக்கி, சமகாலத்தோடு ஒப்பிட்டுப் பேசாமல், மீண்டும் அதே கதை அரசியலை ரிப்பீட் மோடில் அப்படியே பேசுகிறது படம்.
கதாபாத்திர அறிமுகங்கள், கதைக்கள விவரிப்பு, மையக்கதைக்கான முன்னோட்டம் என மெல்ல மெல்ல நகர்கிறது திரைக்கதை. திருப்பங்கள் பெரும்பாலானவை முன்பே யூகிக்கும்படி இருப்பதும், காட்சிகளை நீட்டிக்கொண்டே போவதும் தொடக்கத்திலேயே அயர்ச்சியைத் தரத் தொடங்குகின்றன.
சல்லியின் மகள் கிரி, இயற்கை அன்னையைத் தேடும் கதை, மகன் லோ'அக் கதை, கர்னல் மைல்ஸ் - மகன் ஸ்பைடர் பாசக்கதை எனச் சில கிளைக்கதைகள் சுவாரஸ்யம் கூட்ட முயல்கின்றன. ஆனால், அவற்றைத் தேவையான அளவிற்கு நீட்டிக்காமல் பேசிய உணர்வுகளையே மீண்டும் மீண்டும் பேச வைத்தது, அந்த சுவாரஸ்யத்தையும் சறுக்க வைக்கின்றன.
இவற்றைத் தாண்டி, சில உணர்வபூர்வமான காட்சிகள் கதைக்குக் கைக்கொடுத்திருக்கின்றன. காட்டாற்றில் சிறுவர்கள் தப்பிப்பது, கர்னல் மைல்ஸ் - சல்லி - ஸ்பைடர் உரையாடல், கடல்வாழ் உயிரினங்களுடனான உரையாடல், பறக்கும் கப்பலில் வரும் வணிகர்கள் போன்ற காட்சிகள் சுவாரஸ்யம் கூட்டுவதோடு ரசிக்கவும் வைத்திருக்கின்றன.
இரண்டாம் பாதியை நிரப்பும் போர்க் காட்சிகள் கச்சிதமான மேக்கிங்கால் அட்டகாசமான உணர்வைத் தருகிறது.

மனிதர்களின் அதிநவீன ஆயுதங்கள், கடல்வாழ் உரியினங்களின் பங்கெடுப்பு, வேறொரு நவி இன மக்களின் ஆயுதங்கள் என அசரடிக்கும் பிரமாண்டம் ஒருபக்கம் இருந்தாலும், இவற்றுக்கூடாக ஆங்காங்கே தலைகாட்டும் உணர்வுபூர்வமான காட்சிகளும் கனம் கூட்டுகின்றன.
அதேநேரம், யூகிக்கும் கதாபாத்திரத் திருப்பங்களும், எல்லையை மீறி ஓடிக்கொண்டே இருக்கும் போர்க்காட்சித் தொகுப்பும், அதுவரை சேர்த்து வைத்த சுவாரஸ்யத்தையும், பிரமிப்பையும் பின்னுக்கு இழுக்கின்றன. 'ஆஷ்' இனத்தின் பெயர் தாங்கிய படத்தில் அந்த இனத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெறாதது ஏனோ?!
அட்டகாசமான மேக்கிங், பிரமாண்ட திரையனுபவம் எனத் தொழில்நுட்ப ரீதியாக அசரடிக்க வைத்தாலும், வழக்கமான டெம்ப்ளேட் கதையை, அதை விட வழக்கமான திரைக்கதையில் சொல்லி அயர்ச்சியையும் நிறையவே சேர்த்துக் கொடுக்கிறது இந்த `அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'.
















