'மீனவர் நலத்துறைக்கு வேற ஆளே இல்லையா?' - அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராக கொதிக்க...
BB Tamil 10: வினோத்தை அவமதித்த ஜேசன்; பேக் ஃபயரான முனியின் அலப்பறைகள் -11வது வாரத்தில் என்ன நடந்தது?
ஷாதிகா மற்றும் முகேஷ் எவிக்ஷன். இருவரையும் ஜோடியாக வீட்டிற்கு அனுப்பியதில் பிக் பாஸ் டீமின் குறும்புத்தனம் இருக்கிறதா?
அதென்னமோ தெரியவில்லை. ஜேசனின் ‘ஸ்வீட் சிஸ்டர்’ ஆக மாறுகிறவர்கள் எல்லாம் உடனே வீட்டுக்குச் சென்று விடுகிறார்கள். முன்னர் சாந்தினி, அக்ஷிதா. இப்போது ஷாதிகா.
11வது வாரத்தில் என்ன நடந்தது?
பழைய சீசன்களை கரைத்துக் குடித்து வந்திருப்பவர்கள் கூட இந்த ஆட்டத்தில் ஆட்டம் காணும் போது, பிக் பாஸிற்கென்றே டிசைன் செய்யப்பட்டவராக முனியம்மாளைச் சொல்ல முடியும். கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்தவராக இருந்தாலும் கூர்மையாக சிந்திக்கும் திறன் கொண்டவர்.
பிக் பாஸ் ஷோவின் அடிப்படையே போட்டியாளர்களை டிரிக்கர் செய்து அவர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைச் சோதிப்பதுதான். ஆனால் அத்தனை பெரிய டீம் செய்யும் வேலையை ஒற்றை ஆளாக செய்து வருகிறார் முனியம்மாள்.
கிச்சனுக்குள் புகுந்து உணவுகளை வேட்டையாடும் உரிமையை ‘கௌபாய்’ டாஸ்க்கில்தான் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் தந்தார். ஆனால் முனியம்மாள் இந்த விஷயத்தை அவ்வப்போது செய்வார். பசி தாங்க முடியாத சமயங்களில் எல்லாம் விதியை மீறி உணவு வேட்டையாடுவது அவரின் பழக்கம்.

போட்டியாளர்கள் ஒருவரையொருவர் கடுமையாக சீண்டிக் கொள்ளும் டாஸ்க்கை ரூம் போட்டு யோசித்து பிக் பாஸ் தருவார். ஆனால் முனியம்மாளுக்கு அதுதான் பிரதானமான பொழுது போக்கே. யாரையாவது ஒரண்டை இழுத்து விட்டு விட்டு அவர்கள் கடுமையாக ரியாக்ட் செய்தால் இடது கையால் தட்டி விட்டுப் போவார்.
‘சர்க்கஸ் துப்பாக்கி பின்னாடியும் சுடும்’ - பேக் பயரான முனியின் அலப்பறைகள்
டாஸ்க்கின் விதிகள் எளிமையாக இருந்தால் அம்மணிக்குப் பிடிக்காது. ‘இதுல என்ன சுவாரசியம் இருக்கு?’ என்று அலுத்துக் கொள்வார். பூப்பாதையில் நடப்பதை விட சிங்கப் பாதையில் நடப்பதுதான் பிடிக்கும்.
இப்படியாக, இந்த சீசனுக்குள் தனக்கென்று ஒரு தனி சீசனை நடத்தி வருபவர் முனியம்மாள். ‘யாரு சாமி இவன்’ என்று பிக் பாஸே ஆச்சரியப்படும் படியாக ஆடி வருபவர். முனியின் சிறப்பம்சங்களைப் பற்றி பலமுறை எழுதியுள்ளேன்.
ஆனால் இந்த வாரம் முனியின் ஆட்டம் ஓவராகி அவருக்கே ஃபேக்பயர் ஆகி விட்டது. வாசனுக்கு அதிகமான கைத்தட்டல் வருவதைப் பார்த்து ஜேசனுக்கு வயிற்றெரிச்சல் வருவதைப் போல முனியம்மாளிற்கும் வந்து விட்டது போல. எனவே இந்த வாரம் முழுக்க வாசனை ஒரண்டை இழுத்துக் கொண்டேயிருந்தார் முனி. சாப்பிடும் போது கூட விடவில்லை. ‘உங்க முகத்துல கோபம் தெரியுது தம்பி. அதை வெளிப்படுத்திடுங்க’ என்று தொடர்ந்து கடுப்பேற்றிக் கொண்டேயிருந்தார்.
“அக்கா.. எனக்கு கோபம்ன்னு உங்களுக்கு எப்படித் தெரியும். அதை நான் பார்த்துக்கறேன். விடுங்க” என்று வாசன் மன்றாடியும் முனி வம்பிழுத்துக் கொண்டேயிருந்ததால் ‘மென்ட்டல்’ என்பது போன்ற வார்த்தைகளை வாசன் விட வேண்டியதாக இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு முனிக்கு ஆதரவு தெரிவித்து வாசனை கூடுதலாக கடுப்பேற்ற முயன்றார் ஜேசன்.
அடுத்த டார்கெட்டை ஆரம்பித்தார் முனி. ‘தான் கேட்கும் போது உடனே உணவை தந்து விட்ட வினோத் நல்லவராம். கேட்கும் போது முட்டையை தராத அன்சர் கெட்டவராம்’. இந்த கான்செப்டில் முனி ஆடிய அலப்பறையைப் பார்த்து டென்ஷன் ஆகி விட்டார் அன்சர். முனிக்கும் அன்சருக்கும் எப்போதுமே ஒரு நல்ல அன்னியோன்யம் உண்டு. பரஸ்பரம் சிறப்பாக கலாய்த்துக் கொள்வார்கள். அதில் போட்டியைத் தாண்டிய நட்புணர்ச்சி தெரியும்.
ஆனால் முனி தொடர்ந்து கடுப்பேற்றியதால் “நான் ஒரு பேச்சுக்கு முட்டையைத் தரதா சொல்லி நீ டபக்குன்னு முழுங்கிட்டா என்ன பண்றது?” என்று அன்சர் பதிலுக்கு கலாய்க்க அதற்கு டென்ஷன் ஆகி விட்டார் முனி. பிறகு அன்சருக்கு சோறு ஊட்டுவது போல் எடுத்துக் கொண்டு சென்று ‘உனக்கு விஷம் வெச்சிதான் தரணும்’ என்று வார்த்தையை விட்டு விட்டார்.

அதைக் கூட அப்போதைய மனநிலையில் சொல்லி விட்டார் என்று கூட விட்டு விடலாம். ஆனால் “அப்படி நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்?” என்று அன்சர் உண்மையாக வருத்தப்பட்டு பேசிய போது “இல்லப்பு. சும்மா ஏதோ சொல்லிட்டேன். விட்டுத்தள்ளு” என்று மன்னிப்பு கேட்டிருக்கலாம். மாறாக இதை வன்மம் கலந்த வீம்புடன் வளர்த்துக் கொண்டே சென்றார் முனி. “விஷம் கிடைச்சா கண்டிப்பா உனக்கு கலந்து கொடுப்பேன்” என்று வன்ம குடோனாக மாறினார். யாராவது இதை கண்டித்தால் “நான் அப்படித்தான் பேசுவேன்” என்று ஜானி படத்தின் ஸ்ரீதேவி மாதிரி அழும்பு செய்வார்.
‘தக்காளி சட்னி - ரத்தம்’ தத்துவத்தைப் பின்பற்றும் முனியம்மாள்
இப்படி பிக் பாஸிற்கு நிகராக, சக போட்டியாளர்களை டிரிக்கர் செய்யும் முனியம்மாள், “எல்லோருமே இங்க நல்லவரா இருந்தா நாடு தாங்குமா. சண்டை வர்றது இயல்பு. அப்பத்தான் ஒருத்தர் உண்மையான முகம் வெளியே தெரியும்” என்று சிறப்பாக லாஜிக் பேசும் முனியம்மாள், தன் மீதான விமர்சனங்களையும் கிண்டல்களையும் அதே போல் எடுத்துக் கொள்கிறாரா என்று பார்த்தால் இல்லை.
இவர் துடுக்காக இரைத்து விடும் வார்த்தைகளின் பத்து சதவீதத்தை யாராவது திருப்பிக் கொடுத்து விட்டால் ‘தொண்டைல ஆபரேஷன்’ என்கிற தனுஷ் மாதிரி சுயபச்சாதாபத்துடன் கண்ணீர் விட ஆரம்பித்து விடுவார். ‘இந்தம்மாவிற்கும் நிறைய பேன்ஸ் இருக்கே. அழ விட்டா நமக்கு ஆபத்தாச்சே” என்று சக போட்டியாளர்களும் வலுக்கட்டாயமாக வந்து ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டியிருக்கிறது. அப்படி ஆறுதல் சொல்பவரையே அடுத்த டார்கெட்டாக வைத்துக் கொள்வது முனியம்மாளின் ஸ்டைல்.
பிக் பாஸ் என்கிற சிக்கலான கேமை, தன்னிச்சையான ஞானத்துடன் சிறப்பாக புரிந்து வைத்திருக்கிற முனியம்மாள், தனது சேட்டைகளை குறைத்துக் கொண்டு பயணித்தால் கிளைமாக்ஸ் வரை பயணிக்கலாம். ஆனால் இந்த குணாதிசயங்களும் சேர்ந்ததுதானே முனியம்மாளின் ஆளுமை?
வினோத்தை அவமதித்த ஜேசன் - மாற்றி மாற்றி சமாளித்த அழிச்சாட்டியம்
முனியின் அலப்பறைகள் இப்படியென்றால் ஜேசனின் அலப்பறைகள் வேறு ரகம். முனியாவது சுயபச்சாதாபத்தில் கண்ணீர் விடுவார் அல்லது அப்படியாக காட்டிக் கொள்வார். ஆனால் மற்றவர்களின் மீது கடுமையான வார்த்தைகளை இறைக்கிற ஜேசன், பதில் வார்த்தைகளுக்கு கவலைப்படுவதில்லை. ‘மக்களாவது மண்ணாங்கட்டியாவது’ என்று ‘don't care’ பாணியில் இருப்பவர். உயர்வு மனப்பான்மையில் எழும் இவரின் அழிச்சாட்டியங்களைக் கூட ‘what a man!’ என்று ரசிக்கும் பார்வையாளர்களும் இருக்கிறார்கள். இவரின் அலப்பறைகளை வார இறுதியில் ஹோஸ்ட் சுட்டிக் காட்டும் போது ‘நான் ஆட்டத்திலிருந்து போறேன்’ என்று பூச்சாண்டி காட்டுபவராக இருக்கிறார்.
கடந்த வாரத்தில் கேப்டனாக இருந்த போது எந்த வேலையையும் ஒழுங்காக செய்யாமல் வார இறுதியில் வாங்கிக் கட்டிக் கொண்டார் ஜேசன். “மத்த வாரங்களில் கேப்டனை போட்டு பாடாய்ப்படுத்தி விடுவார். ஆனால் இவர் கேப்டனாக இருந்த போது பொறுப்புகளை ஏற்கவில்லை.
இந்த வாரத்தில் கேப்டனாக தன்யா இருந்த போது ‘எனக்குத் தோணின வேலையைத்தான் செய்வேன். இல்லாட்டி செய்ய மாட்டேன். என்ன வேணா பண்ணிக்கங்க.. எத்தனை தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க” என்று அழும்பு செய்தார் ஜேசன். சர்க்கரை பற்றாக்குறை என்று தெரிந்தும் கூட அதை காலி செய்து விட்டு நியாயப்படுத்தி பேசினார். சுட்டிக் காட்டிய கேப்டன் தன்யா மீது எகிறிக் கொண்டு வந்தார்.

ஜேசனிடம் ஓர் அப்பட்டமான ஆணாதிக்கத்தனம் தெரிகிறது. ‘Am a man’ என்று கத்துவதில் இருந்தே இது வெளிப்படுகிறது. திறமைசாலியான பெண் போட்டியாளரைக் கண்டால் இவருக்கு ஆகாது. ஷமா இருக்கிற வரை அவரை ஜென்ம விரோதியாக பார்த்துக் கொண்டிருந்தார். இவருடைய ஓவரான Attitude-ஐ லட்சுமிபிரியா, தன்யா போன்றவர்கள் வெறுப்பதால் அவர்களை தனது வெறுப்பு பட்டியலில் இணைத்துக் கொண்டு சமயம் கிடைக்கும் போதெல்லாம் வன்மத்தைக் கொட்டுகிறார் ஜேசன். வாசனைப் போன்று முனியம்மாளுக்கும் கைத்தட்டல்கள் கிடைப்பதால் அவரின் மீதும் ஜேசனுக்கு வெறுப்புதான். என்றாலும் சமயங்களில் இணக்கமாக நடந்து கொள்வார்.
சிறையில் இருந்த ஜேசனிடம், கேப்டன் என்கிற முறையில் தன்யா சென்று பேசிய போது ‘எனக்கு ஏதாவது வேணுமின்னா boys கிட்ட கேட்டுக்கறேன். நீ கிளம்பு. காத்து வரட்டும்’ என்று துரத்தி விட்டார். சர்க்கரை பிரச்சினையில் தன்யாவின் மீது மோதுவது போல பாய்ந்தார்.
இந்த வாரத்தில் ஜேசன் செய்த உச்சபட்ச தவறு, அரியணை டாஸ்க்கின் போது வினோத்தின் முன்னால் செருப்புக் காலை நீட்டிக் காட்டியதுதான். வினோத்தும் ஜேசனும் ஆரம்பக் கட்டத்தில் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் ஜேசனின் அழுகுணித்தனமான ஆட்டத்தைக் கண்டு ஒதுங்கிக் கொண்டார் வினோத். எனவே ஜேசனின் பகைவர்கள் பட்டியலில் இணைந்து விட்டார்.
அரியணை டாஸ்க்கில் தோற்றுப் போன ஜேசன்
‘இப்படி காலை நீட்டிக் காண்பிச்சது தப்பு’ என்று சக போட்டியாளர்கள் சுட்டிக் காட்டிய போது ‘அவர் முகம் மறைச்சதால காலை தள்ளி வெச்சேன்’ என்று சமாளித்த ஜேசன், பிறகு ‘நான் உள்நோக்கத்தோட பண்ணலை’ என்று இரவில் வினோத்திடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஆனால் வார இறுதி விசாரணையில் விசே, கறாராக கிடுக்கிப்பிடி போட்ட போது “ஆமாம், வேணுமின்னுதான் காலை நீட்டினேன். ஆனா பொய் சொல்லி சமாளிச்சிட்டேன். நான் அப்படி பண்ணக்கூடியவன்தான்’ என்று வாக்குமூலம் அளித்தார். “ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசறீங்க?” என்று அன்றைய இரவில் வினோத் கேள்வி எழுப்பும் போது “நான் எங்க ஒப்புக்கொண்டேன்?” என்று பிளேட்டை மீண்டும் மாற்றினார் ஜேசன்.
அரியணையில் அமர்ந்திருப்பவர்களை டிரிக்கர் செய்து உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். அந்த வகையில்தான் வினோத் வெறுப்பேற்றும் சைகைகளை செய்ய ஆரம்பித்தார். ஜேசன் எப்போதுமே செய்யும் உடல்மொழியை பாவனை செய்து காண்பித்தார். இது ஜேசனுக்கு பிடிக்கவில்லை. எனவே செருப்புக்காலை உயர்த்தி காண்பித்தார். இதன் மூலம் தன்னுடைய கோபத்தை ஜேசன் வெளிப்படுத்தினார் என்றுதான் பொருள். எனில் இந்த டாஸ்க்கில் ஜேசன் தோற்று விட்டார் என்றுதான் அர்த்தம்.
இதே அரியணை டாஸ்க்கில் வாசனின் மீதுள்ள வன்மத்தையெல்லாம் கொட்டினார் ஜேசன். “உன்னைப் பார்த்தெல்லாம் எனக்கு பயமில்லை. கைதட்டல் கிடைச்சா பயந்துருவாங்களா.. உன்னை மீறி நான் ஜெயிச்சுக் காட்டறேண்டா. முடிஞ்சா என்னை தடுத்துப் பாருடா’ என்றெல்லாம் அநாவசியமாக சவடால் விட்டார் ஜேசன்.

முரட்டுத்தனம் பிக் பாஸ் டைட்டிலுக்கான பாதையா?
முந்தைய சீசன் ஒன்றில் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட அசிம், டைட்டில் வென்றதையொட்டி தானும் அப்படி ஆடி ஜெயித்து விடலாம் என்று ஜேசன் நினைக்கிறாரா? அல்லது அவரது இயல்பே அப்படித்தானா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் தன்னுடைய வெற்றி ஒன்றே குறி என்று முரட்டுத்தனமாக ஆடுபவர்கள் வெல்லக்கூடாது என்பதுதான் அடுத்தடுத்த சீசன்களுக்கு நியாயம் சேர்க்கும்.
ஒவ்வொரு வாரமும் தொடரும் ஜேசனின் முரட்டுத்தனங்களை, வழக்கம் போல் இந்த வாரமும் கண்டித்த விசே “நீங்க வெளில எப்படி வேணா இருங்க” என்று சொன்ன பின்குறிப்பு அதிர்ச்சிகரமானது. காமிராவின் பார்வையில் ஒழுங்காக இருந்தால் போதும் என்பது போல் அர்த்தமாகிறது. ‘நீங்கள் கண்காணிக்கப்படாத போதும் சரியாக நடந்து கொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம்’ என்பது பிரபலமான மேற்கோள்.
பிக் பாஸ் என்பது தவறு செய்கிறவர்களை திருத்தி அனுப்பும் பயிற்சிக்கூடம் இல்லைதான். ஆனால் இந்த அனுபவத்தின் மூலம் போட்டியாளர்கள் தங்களின் தவறுகளை தாங்களே உணர வேண்டும். போட்டியாளர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களும் இதே அனுபவத்தைப் பெறுவதுதான் இந்த நிகழ்ச்சியை சரியாக அணுகும் முறை. “நீங்க வெளில எப்படி வேணா இருங்க” என்று கை கழுவி விடுவது போல விசே சொன்னது நெருடல். ஒருவேளை கமல் இருந்திருந்தால் இப்படி அணுகியிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.
மர்டர் டாஸ்க்கில் மாஸ் காட்டி சொதப்பிய வாசன்
வாசனுக்கு வெளியில் நிறைய ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் இந்த ஆட்டத்திற்குள் அவர் என்ன செய்தார் என்பதைப் பொறுத்தே பாராட்டுக்களை வழங்க வேண்டும். தனக்குப் பிடித்தமானவரை பார்த்தவுடனேயே உற்சாகமாக கைத்தட்டுவது, அவர் என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்வது, முட்டுக் கொடுப்பது போன்ற கலாசார பலவீனங்கள் நம்மிடம் ஏராளமாக உண்டு.
‘இவருக்கு கேமே புரியலை’ என்று மற்றவர்களால் தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டிருந்த வாசன், வைரம் திருடும் டாஸ்க்கில் ‘மாஸாக’ செயல்பட்டு சக போட்டியாளர்களின் வாயை அடைத்தது மட்டுமல்லாமல், பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றார். ஆனால் இது ‘ஒன்டைம் வொண்டராக இருக்குமா அல்லது தொடர்ந்து வாசன் இப்படி ஜெயிப்பாரா?’ என்கிற சந்தேகத்தை அப்போது நான் எழுப்பியிருந்தேன்.
அதை நிரூபிக்கும் வகையில் சொதப்பி விட்டார் வாசன். ‘காண்டிராக்ட் கில்லர்’ டாஸ்க்கில், தான் வித்தியாசமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு ஷாதிகாவைக் கொல்ல பிருத்வியிடம் பணம் வாங்கிக் கொண்டு பிருத்வியையே போட்டு தள்ளி டபுள் கிராஸ் ஆட்டம் ஆடினார். “டேய் ஏண்டா இப்படிச் செஞ்சே?” என்று பிருத்வி அதிர்ச்சியுடன் புலம்பிய போது “அடுத்தது நீ என்னைப் போட்டுத் தள்ளுவே இல்ல. அதுக்காகத்தான் முன்னாடியே நான் உன்னைப் போட்டேன்” என்று சினிமா வசனம் பாணியில் லாஜிக் பேசினார் வாசன். “டேய்.. அது ரூல்ஸ்ல இல்லடா. நீ செஞ்சது தப்பு” என்று கதறினாலும் வாசனுக்குப் புரியவில்லை.

வார இறுதியில் விசே வந்து விளக்கிய பிறகுதான் தான் செய்த தவறு வாசனுக்குப் புரிந்தது. அல்லது புரிந்தது மாதிரி தலையாட்டினார். “உங்க செயலால உங்க மேல இருக்கற நம்பிக்கை மத்தவங்களுக்குப் போயிடும். அடுத்து வர்றவங்க எப்படி உங்களைச் சேர்த்துப்பாங்க.. எப்படியும் அடுத்த கேம்ல உங்களை போட்டுத்தள்ளத்தானே போறாங்க.. இதுல நீங்க என்னதான் சாதிச்சீங்க?” என்று விசே சொன்னதற்கு புரிந்தது போல் தலையாட்டினார் வாசன்.
“அவர் மாஸா நெனச்சு அதைச் செஞ்சுட்டாரு” என்று ஷாதிகா சொன்னதுதான் உண்மையாக இருக்க வேண்டும். ‘உனக்கு ஒண்ணும் புரியல’ என்கிற வசனம் மீண்டும் வீட்டில் கேட்க ஆரம்பித்திருப்பதால் வைரம் டாஸ்க்கைப் போன்று அதிரடியாக ஏதாவது செய்து இன்னொரு புகழைப் பெற்று விடலாம் என்று வாசன் யோசித்திருப்பார். ஆனால் அது அவருக்கே வினையாக வந்து முடிந்தது.
ஷாதிகா - முகேஷ் எவிக்ஷன் - இருவரின் பலமும் பலவீனமும்
‘I don't deserve this Eviction” என்று வெளியேறும் போது அழுகையுடன் சொன்னார் ஷாதிகா. ஆனால் அவருடைய எவிக்ஷனுக்கு அவரேதான் காரணம் என்பதை பிறகாவது உணரக்கூடும். “என்னைப் பத்தி எனக்கே தெரியாத விஷயங்களை இந்த வீடு தெரிய வைத்தது” என்று அவர் சொன்ன பாடம்தான் உண்மை.
இந்த சீசனின் முதல் கேப்டனாக இருந்து ஆரம்ப வாரத்தின் முதல் பகுதியை திறமையாக கையாண்டார். ‘இந்தப் போட்டியின் கடைசி வரையில் இருக்கலாம்’ என்று தோன்ற வைத்தவர். ஆனால் அந்தப் பதவியின் அழுத்தம் தாங்காமல் பாதியிலேயே கை விட்டார்.
‘கடல்ல விழுந்தவனைக் கூட காப்பாத்திடலாம். காதல்ல விழுந்தவனைக் காப்பாத்த முடியாது’ என்பது நான் உருவாக்கிய பொன்மொழி. அந்த வகையில் ‘லவ் டிராக்’ என்கிற சமாச்சாரம் பல போட்டியாளர்களை காவு வாங்கியிருக்கிறது.
முகேஷிற்கும் ஷாதிகாவிற்கும் இடையில் இருப்பது நட்போ அல்லது காதலோ. எது வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அது அவர்களின் பர்சனல். ஆனால் அப்படியான தோற்றமும் கருத்துகளும் உற்பத்தியாகும் போது ‘அது தன்னுடைய ஆட்டத்தைப் பாதிக்கலாம் என்கிற எச்சரிக்கையுணர்வு ஷாதிகாவிடம் எழுந்திருக்க வேண்டும். அது தாமதமாகவே அவருக்குள் தோன்றியது.
ஷாதிகாவின் இன்னொரு பலவீனம், ஏதாவதொரு குழுவை சார்ந்திருப்பது. ஆரம்பக் கட்டத்தில் லட்சுமிபிரியா, முத்தழகி என்று பெண்கள் குழுவைச் சார்ந்திருந்த ஷாதிகா, லட்சுமிபிரியாவுடன் ஏற்பட்ட முரண் காரணமாக ஆண்கள் குழுவின் பக்கமாக நகர்ந்தார். அதிலும் வில்லங்கமான போட்டியாளரான ஜேசனின் பாசமிகு தங்கையாக மாறிய போது அவருடைய வீழ்ச்சி ஆரம்பித்தது.
மற்றபடி ஷாதிகா ஒரு திறமையான போட்டியாளர். தர்க்கத்துடன் பாயிண்ட் பாயிண்டாக பேசுவதில் புத்திசாலித்தனம் தெரியும். பிஸிக்கல் டாஸ்க்கிலும் கலக்குவார். லவ் டிராக், க்ரூப்பிஸம் என்று இரண்டு தடைகளை ஷாதிகா வெற்றிகரமாகத் தாண்டியிருந்தால் ஆட்டத்தில் தொடர்ந்திருப்பார்.

வீட்டிற்குள் ஜீரோவாக இருந்த முகேஷ், வெளியில் ஹீரோ ஆகட்டும்
ஏறத்தாழ ஷாதிகாவிற்கு சொன்ன அதே காரணங்களையே முகேஷின் எவிக்ஷனுக்கும் பொருத்திவிடலாம். அதே லவ் டிராக்தான் அவருக்கு பின்னடைவைத் தந்தது. இந்த லட்சணத்தில் இரண்டு டிராக் வேறு.
‘எதுக்கு வந்தோம்ன்றதை மறந்துட்டு சமையல்காரனாவே மாறிட்டான்’ என்கிற சந்தானத்தின் காமெடி மாதிரி கிச்சன் ஏரியாவில் மட்டும் கில்லியாக செயல்பட்ட முகேஷ், தன் தனித்தன்மையை நிரூபிக்கத் தவறிவிட்டார். “என்ன முகேஷ்… ஆளையே காணோம்.. வந்து இத்தனை வாரமாச்சு.. இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாம நிக்கறீங்க?” என்று பல வாரங்களில் வார்னிங் பெல் அடித்தும் முகேஷ் அதைக் கேட்கவில்லை.
மற்றபடி பிஸிக்கல் டாஸ்க்குகளில் சிறந்து விளங்குகிற, அன்சருக்கு நிகரான நகைச்சுவைத் திறமையைக் கொண்டிருக்கிற முகேஷ், முனைப்பு அதிகமில்லாத காரணத்தினால் எவிக்ஷனை எதிர்கொண்டார். சினிமா ஹீரோ என்கிற அவரது கனவு மெய்ப்படட்டும். அதற்கான தோற்றத்தையும் சாத்தியங்களையும் கொண்டவர்தான் முகேஷ்.
எப்போதோ வெளியேறியிருக்க வேண்டியிருக்க போட்டியாளர்களில் ஒருவர் தன்யா. அதிர்ஷ்டமோ, அழகோ அல்லது அவரை விடவும் சுமாரான போட்டியாளர்கள் இருந்ததோ அவரை காப்பாற்றி வந்திருக்கிறது. கடந்த இரு வாரங்களாக அவரிடம் தென்பட்டிருக்கும் மாற்றம் நன்று. அதிலும் ஜேசனை துணிச்சலுடன் எதிர்கொண்ட காட்சி நன்று. ஆனால் வாசனிடம் காட்டும் பாரபட்சம் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
இந்த வாரத்திலும் விசே பேசிய சில வசனங்கள் சுவாரசியமாக இருந்தன. ‘அரியணை டாஸ்க்கில் ராஜாவை நோக்கி கன்னா பின்னான்னு கேள்வி கேட்டீங்க.. இந்த வாய்ப்பு யாருக்காவது கிடைக்குமா?” என்றதும் சரி,
“கேள்வி கேட்டா பதில் சொல்லணும்.. அதை விட்டுட்டு கேள்வி கேக்கறவங்களை அவமானப்படுத்தறது, கிண்டல் பண்றது, மிரட்டறதுன்னு இருக்கறாங்கன்னா.. அந்தக் கேள்வியைப் பார்த்து அவங்க பயப்படறாங்கன்னு அர்த்தம்” என்றதும் சரி..
சமகாலத்திற்கு மட்டுமல்லாமல், எந்தவொரு காலகட்டத்தின் அரசியல் பின்னணிக்கும் பொருந்தக்கூடியது.
இரண்டு எவிக்ஷன்கள் நிகழ்ந்து போட்டியாளர்களின் எண்ணிக்கை இன்னமும் சுருங்கியிருக்கும் நிலையில் ஆட்டம் இனி எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
முனியம்மாள் மற்றும் ஜேசன் ஆகிய இருவரும் தொடர்ந்து செய்யும் அலப்பறைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட்டில் சொல்லுங்க மக்களே.




















