செய்திகள் :

BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மன் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்

post image

“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 97

இந்த எபிசோடில் மூன்றே பகுதிகள் மட்டுமே இருந்தன. கானா வினோத் farewell, பிரவீன் ராஜை வறுத்தது, வியானாவின் குழப்பத்தைக் கேட்டது. 

இதில் வினோத் விடைபெறும் பகுதியைத் தவிர எதுவுமே சுவாரசியமாக இல்லை. 

“வீட்டுக்கு திரும்பி வந்தவங்க கிட்ட ஒரு ஃபயர் இருக்கு. அதை ஏன் ஆட்டத்துல இருக்கும்போதே காட்டலை.. நானும் தலை தலையா அடிச்சிக்கிட்டேன். வெளியல விமர்சனங்கள் பார்த்துட்டு வந்தாங்களான்னு தெரியல.

BB TAMIL 9 DAY 97
BB TAMIL 9 DAY 97

ஒரு வார்த்தையை வெச்சு ஒரு நாள் முழுக்க டிகோட் பண்ணிட்டு இருக்காங்க.  வாங்க என்னன்னு விசாரிப்போம். அதுக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்’ என்றார் விசே. 

அந்த வெள்ளிக்கிழமையில் வழக்கம் போல் ஒன்றுமில்லை. கார்டன் ஏரியாவில் கைகாலை நீட்டி படுத்து விட்ட திவாகரை வைத்து மற்றவர்கள் செய்த  ‘டெட்பாடி காமெடி’ நன்று. திவாகரும் இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார். 

உள்ளே வந்த விசே முதலில் பிரவீன் காந்தியிடம் ஒரண்டை இழுத்தார். “உங்களுக்கு என்னை பிடிக்குமா, பிடிக்காதா.. வெளில நீங்க பேசின வீடியோ பார்த்தேன்” என்று விசே, சங்கடமான சிரிப்புடன் “பிடிக்கும் சார்” என்றார் டைரக்டர். ‘விஜய்சேதுபதி எங்களை பேசவே விட மாட்டார்’ என்பது முதல் பல விஷயங்களை பிரவீன் காந்தி நேர்காணல்களில் சொல்லியிருந்தார் போல.

எஃப்ஜேவும் கானா வினோத்தும் இதே விஷயத்தை வீட்டிற்குள்ளேயே சொன்னார்கள். ‘அவர் கிட்ட என்ன விளக்கம் தர்றது. உக்காருன்னுவாரு.

BB TAMIL 9 DAY 97
BB TAMIL 9 DAY 97

ஸாரி சொன்னாலும் எடுபடாது. ஹோஸ்டிற்கு மரியாதை தரணுமில்ல” என்று இவர்கள் பேசியதை வைத்தும் நையாண்டி செய்தார் விசே. 

இவர்கள் சொல்லும் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறது என்பது விசேவிற்குத் தெரியும். எனில் ஏன் மறைமுகமாக கிண்டல் செய்து மடக்க நினைக்கிறார். “என் மீது விமர்சனங்கள் சொல்லுங்க.. அது எனக்குப் பிடிக்கும்” என்று சொல்கிற விசே, அப்படி உண்மையான விமர்சனங்கள் வந்தால் ஸ்போர்ட்டிவ்வாக எடுக்கிறாரா? Anyway, விசேவின் கிண்டல் வெறும் ஜாலிக்குத்தான் என்றால் ஓகே. 

“எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு” - திவாகர் பெருமித அறிவிப்பு

முன்னாள் போட்டியாளர்களிடம் “வெளியுலக அனுபவம் எப்படி இருந்தது?” என்று விசாரிக்க அனைவருமே சொல்லி வைத்தாற் போல ஆஹாஓஹோ என்றார்கள். ‘ரோட்ல ஆட்டோக்காரர் செல்ஃபி எடுக்கறார். பால்காரர் ஆட்டோகிராஃப் கேட்கிறார்” என்று புளகாங்கிதப்பட்டார்கள்.

ஒருவர் அசட்டுத்தனமான ரீல்ஸ்கள் போட்டு அதன்  மூலம் பிரபலமாகி விட்டார் என்றால், அவருடன் செல்ஃபி எடுக்க அலைமோதும் கூட்டம்தான் நாம். அவர்களைத்தான் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கூப்பிடுவார்கள். ஏன் பிக் பாஸில் கூட கூப்பிடுவார்கள் என்பதற்கான உதாரணம் திவாகர். 

ஆனால் இந்தப் புகழ் எல்லாம் தற்காலிகம்தான். இன்னொரு ரீல்ஸ்காரர் புகழ்பெற்றால் கூட்டம் அவர் பின்னால் ஓடிவிடும். பிக் பாஸ் தரும் வெளிச்சத்தை  எப்படி திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். கமல் ஏற்கெனவே இதை சிறப்பாகச் சொன்னார். ‘இந்த மேடை உங்களுக்கு புகழை பெற்றுத் தரும். அதை கையாள்வது உங்கள் பொறுப்பு’ என்று. இதற்கு முன்னால் பிக் பாஸில் கலந்து கொண்டவர்களில் அரிதாக  சிலர் மட்டுமே இன்னமும் லைம் லைட்டில் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஆளையே காணோம். ஓவியா உட்பட. 

BB TAMIL 9 DAY 97
BB TAMIL 9 DAY 97

“எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு சார்.. விஜய்சேதுபதி கிட்ட நீங்க திட்டு வாங்கற காட்சிகள் க்யூட்டா இருக்குன்னு சொல்றாங்க” என்று வித்தியாசமாக சொன்னார் திவாகர். “நீங்க எது பண்ணாலும் அது க்யூட்தான் சார்” என்று கிண்டலடித்தார் விசே. “ஆட்டோல ஏறினேன்.. ஆட்டோகாரர் கண்டுபிடிச்சிட்டார்’ என்று திணறித் திணறி வியானா விவரித்த போது திவாகரின் இன்னொரு வடிவத்தைப் பார்ப்பது போலவே இருந்தது. 

மற்ற எல்லோரையும் விசாரித்து பிரேக்கில் சென்ற விசே “அய்யோ.. பிரவீன் காந்தியை கேட்க மறந்துட்டேன். அப்புறம் வெளில போய் ஏதாவது சொல்வாரு” என்று மீண்டும் திரும்பி வந்தது, வேண்டுமென்றே செய்த குறும்போ?!  

பிரேக் முடிந்து திரும்பியதும் ‘ஒரு சர்ப்ரைஸ்’ என்று ஆரம்பித்தார் விசே. வந்தது கானா வினோத். 

உணர்வுப்பூர்வமாக நிகழ்ந்த ‘கானா வினோத்’ farewell

இதுவரை மற்றவர்களின் பயண வீடியோவை ஒரு சம்பிரதாய மனநிலையில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் கானா வினோத்தின் பயண வீடியோ ஸ்பெஷலாகவும் உணர்வுபூர்வமாகவும் தயாரிக்கப்பட்டிருந்தது. ரஞ்சித் படங்களில் இருந்து இணைக்கப்பட்ட பாடல்கள் அருமையான உணர்வைத் தந்தன. 

மைக்கை கையில் வாங்கி ‘செக்.. செக்’ என்றவர் ‘செக் வர்றதுக்கு 45 நாள் ஆகுமாமே?’ என்று டைமிங்கில் கிண்டலடித்தார்.  “நல்ல பசில பிரியாணிக்கு காத்திருக்கிறத விட கூழ் முக்கியம். அப்படித்தான் இந்த 18 லட்சம். இதை வெச்சு என் குடும்பத்தை பார்த்துப்பேன். இந்த முடிவு நானா எடுத்ததுதான்.. மத்தவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு பணத்தை தூக்கிட்டேன்” என்று ஜாலியாக பேசினார் வினோத். 

BB TAMIL 9 DAY 97
BB TAMIL 9 DAY 97

“உங்க பாடி லேங்வேஜ்ல ஒரு ‘அதுப்பு’ இருக்கு. அது பார்க்க நல்லா இருக்கு” என்று லோக்கல் மொழியில் விசே பாராட்டியது சிறப்பு. கெமி ஆரம்பித்து வைத்த பழக்கத்தை அனைவரும் பின்பற்றுகிறார்கள். ‘உங்க கண்ணாடி வேணும்’ என்று அடம்பிடித்த வினோத்திற்கு வரவழைத்து தந்தார் விசே. 

வீட்டிற்குள் நுழைந்ததும் “என்னா தர்பீஸூ.. நான் இல்லாம ஜாலியா இருக்கிறயா.. நான் வெளில போகணும்ன்னு ஒவ்வொரு காமிராலயும் சொல்லிட்டு நல்லா இருக்கியான்னு கேட்கறே” என்று திவாகரை கலாய்த்தார் வினோத்.

வினோத்தின் மனைவி பாக்யா வந்து பேசியதும் “பொண்டாட்டி சொல்றதைக் கேளுங்க. வாழ்க்கைல உருப்படுவீங்க” என்கிற முக்கியமான செய்தியை சொல்லி விட்டு விடைபெற்றார் வினோத். 

வீட்டிற்குள் திரும்பி வந்த போது ஏற்பட்ட அனுபவம், அவர்களிடம் போட்டியாளர்கள் எதிர்கொண்ட அனுபவம் என்று இரண்டு பகுதிகளாக விசாரித்தார் விசே. அதில் சுவாரசியமாக ஒன்றுமில்லை. “இங்க இருக்கறவங்க யாரையும் மிஸ் பண்ணலை. அவங்க வெளிய இருக்காங்க. ஆதும்மா” என்று வித்தியாசமாக சொன்னார் வியானா. “அப்படின்னா நீங்க வந்தது இவங்களுக்கு பிடிக்கலைன்னு வெச்சுக்கலாமா?” என்று விசே மடக்க “may be” என்றார். (வீட்டிற்குள் இருந்த போது குழந்தை மாதிரி இருந்த வியானா, ரீஎன்ட்ரியில் கோட்டானாக மாறியிருக்கிறாரே?!)

BB TAMIL 9 DAY 97
BB TAMIL 9 DAY 97

பிரவீன்ராஜை மடக்கி மடக்கி வறுத்தெடுத்த விசே

பிரவீன்ராஜ் திரும்ப வரும் போது ‘மிதப்பாக’ சொன்ன ஒரு வாக்கியத்தால் விசேவிடம் மாட்டிக் கொண்டார். “இந்த ஆட்டத்துல humanity-ஐ இழந்துட்டு ஆடறீங்க.. உண்மையா இல்ல” என்றெல்லாம் அவர் சொன்னதை பிக் பாஸ் டீம் அண்டர்லைனில் குறித்துக் கொண்டது போல. 

“Humanity இல்லாத அளவிற்கு அப்படி என்ன நடந்துச்சு.. ஒரு சம்பவத்தை சொல்லுங்க.. நாங்க அப்படி என்ன கவனிக்கத் தவறிட்டோம்.. விசாரிக்காம விட்டுட்டோம்.. சொல்லுங்க. சொல்லுங்க…’ என்று விசே மடக்க, பந்து எறிந்த சம்பவத்தை பொருத்தமில்லாமல் சொன்னார் பிரவீன்ராஜ். “அந்த ஸ்மைலி பந்தா.. அதுல அடிச்சா வலிக்குமா.. அது திசை திருப்புவதற்காக செய்தது.. வேற உதாரணம் சொல்லுங்க” என்று மீண்டும் மடக்கினார் விசே. 

ஒருவர் என்ன சுற்றி விட்டாலும் அவரை மறுபடியும் பாயிண்ட்டிற்கு அழைத்து வந்து விவாதிக்கும் திறமை விசேவிடம் நிறைய இருக்கிறது. எதையாவது சொல்லி இவரிடம் தப்பித்துக் கொள்வது சிரமம். ஆனால் இந்த தர்க்கத் திறமையை விசே கடுமையான தொனியில் வெளிப்படுத்துகிறார். எதிராளியின் வாயை உடனே அடைத்து விடும் அதிகாரம் அவரிடம் வெளிப்படுகிறது.

பிக் பாஸ் ஹோஸ்ட் என்கிற பொஷிஷனை வைத்துக் கொண்டு மேலாதிக்கம் செய்கிறார். மாறாக இரு தரப்பிற்குமான சௌகரியத்தை தந்து மடக்குவது நன்றாக இருக்கும். கமல் இதை சிறப்பாகச் செய்வார். 

பிரவீன்ராஜ் என்னதான் மல்லுக்கட்டினாலும் அவர் சொன்ன உதாரணங்கள் மொக்கையாக இருந்ததால் வாதம் எடுபடவில்லை. 

ஆனால் பிரவீன்ராஜ் சொன்னது பொத்தாம் பொதுவாக பார்த்தால் உண்மைதான். நாம் ஒரு போட்டிக்குள் நுழையும் போது நம்மிடமுள்ள மனிதத்தன்மை தன்னிச்சையாக குறைந்து விடுகிறது. சுயநலம் பெருகி விடுகிறது. பேருந்து இருக்கையை ஓடிச் சென்று கைப்பற்றும் அன்றாட நடைமுறையிலேயே இதைப் பார்க்கலாம். ஒரு வயதான பெரியவரை இடித்துத் தள்ளிக்கொண்டாவது இருக்கையைப் பற்றும் சுயநலவாதிகளாக மாறி விடுகிறோம். அந்த நேரத்தில் மனிதனின் ஆதாரமான நல்ல விஷயங்கள் மறைந்து போட்டி மனப்பான்மை மட்டுமே பெருகி விடுகிறது. 

BB TAMIL 9 DAY 97
BB TAMIL 9 DAY 97

பிக் பாஸ் தரும் அனுபவத்தை சரியான நோக்கில் அடைகிறோமா?

“பிரவீன்காந்தி.. கவனிச்சீங்களா.. இவரை முழுசா பேச விட்டேன்..” என்று கிண்டலடித்த விசே, பிரவீன்ராஜிடம் உள்ள விவாதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் விசே சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. 

“இந்த வீடு உங்களுக்கு பல அனுபவங்களைத் தந்திருக்கும். அதை வெச்சு வெளில போய் யோசிச்சிருப்பீங்க.. அந்தச் சிந்தனை ஞானமா மாறியிருக்கும்.. இப்படியெல்லாம் நான் எதிர்பார்த்தேன். ஆனா நீங்க பழைய விஷயங்களை அப்படியே சுமந்துட்டு வந்திருக்கீங்க. இனி மேலாவது மாறுங்க” என்று சொன்ன உபதேசம் நன்று. 

இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் பொருந்தும். எத்தனையோ சீசன்களாக நானும் இதைத்தான் சொல்லி வருகிறேன். இந்த நிகழ்ச்சியின் மீதான வம்புகளை மட்டும் உற்சாகமாக பேசுவதால் இழப்பு நமக்குத்தான்.

மாறாக போட்டியாளர்களின் இடத்தில் நம்மை வைத்து அந்தத் தவறுகளை சுயபரிசீலனையுடன் பார்த்தால் நமக்குள்ளும் மாற்றங்கள் நிகழும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் மீதான நுகர்வின் வெற்றி. மாறாக வெறும் அரட்டையாக முடித்தால் இழப்பு நமக்கே. 

விசேவிடம் அடுத்து மாட்டியவர் வியானா. கான்வென்ட் தேவதையாக வெளியே சென்றவர், விநோத டிராகுலாவாக மாறி உள்ள வந்ததின் மர்மம் பிடிபடவில்லை. அதிலும் குறிப்பாக விக்ரமை டார்கெட் செய்து ‘நீங்க ஒரு பிராடு. வக்ரம்.. மத்தவங்களை மானிபுலேட் பண்றீங்க. ரூல்ஸ் மதிக்கணும்னு மத்தவங்களுக்கு சொல்வீங்க. நீங்க பின்பற்ற மாட்டீங்க..”

என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வியானா வைத்த போது அதற்கான காரணம் நிச்சயமாக புரியவில்லை. வெளியில் எதையோ தவறாக பார்த்து விட்டு புரியாமல் வந்து பேசுகிறார் என்பது மட்டும் புரிந்தது. 

BB TAMIL 9 DAY 97
BB TAMIL 9 DAY 97

விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியது ஏன்?

இன்று விசே வியானாவிடம் கிடுக்கிப்பிடி போட்டு “வக்ரம்ன்ற வார்த்தையை சொல்ல வேணாம்ன்னு ஏற்கெனவே சொன்னேன். அப்படியும் சொல்லியிருக்கீங்க.. நீங்க ஏதோ பாதிக்கப்பட்டிருக்கீங்க போல. அதை என்னன்னு வெளிப்படையா சொல்லுங்க” என்று விசாரித்தார். 

ஏதோவொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகப் போகிறது என்று பார்த்தால், பிரவீன்ராஜை விடவும் மொக்கையான சம்பவத்தை உதாரணமாகச் சொன்னார் வியானா. உண்மையில் அது அவர் மீதே பூமராங் போல பாய்ந்தது. 

ஒரு டாஸ்க் நடப்பதற்கு முன்னால் அதற்கு நடுவராக யார் இருக்கப் போகிறார் என்பதற்கான விவாதம் பெண்கள் அணியில் நடந்தது.

அதற்கான தகுதிக் காரணமாக வியானா சொன்ன காரணம் “நான் நம்ம அணி சார்பா பேசி பாயிண்ட் எடுத்துடுவேன்’. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து வியானா வாயை விட்டு விட்டார். இதை அப்போதே திவ்யா கண்டித்தார். 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள் அணி “பாரபட்சமாக நடந்து கொள்வேன் என்று சொல்பவரை நீதிபதியாக எங்களால் ஏற்க முடியாது. மாற்றுங்கள்” என்று போராட்டம் நடத்தினார். விக்ரம் செய்தது சரியான விஷயம். 

ஆனால் வியானா என்ன சொல்கிறார் என்றால், “பிக் பாஸ் சொன்ன உடனே கேட்டுக்கற விக்ரம், இதுல மட்டும் ரூல்ஸை தனக்கேத்த மாதிரி மாத்திக்கறாரு” என்று வாதாடுகிறார். மேலோட்டமாக யோசித்தாலே வியானா பக்கம் தவறு என்பது புரிந்து விடும். இந்த மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டா அத்தனை வன்மத்தைப் பொழிந்தார் வியானா? 

BB TAMIL 9 DAY 97
BB TAMIL 9 DAY 97

இந்த வாரத்தில் ஒரு சிறப்பான எவிக்ஷன்

“சுபிக்ஷாவை தன்னிச்சையாக விளையாட விட்டிருந்தால் அவர் டைட்டில் அடித்திருப்பார்” என்பதும் வியானா சொல்கிற குற்றச்சாட்டு. நாம் பார்த்தவரையில் விக்ரம் சுபிக்ஷாவிற்கு வழிகாட்டும் வேலையை மட்டுமே செய்தார். ஆனால் ஒருவரின் நிழலில் நாம் இருக்கக்கூடாது என்பது சுபிக்ஷாவிற்கு தெரிந்திருக்க வேண்டும். இதில் விக்ரமின் தவறு என்னவிருக்கிறது? அப்படியே இது விக்ரமின் ஸ்ட்ராட்டஜி என்றாலும் அதிலிருந்து விடுபடுவதுதானே சுபிக்ஷாவின் வேலை?

டாஸ்க்கில் ஆதிரையின் காலைப் பிடித்து இழுத்ததற்கும் விக்ரம் அவரிடம் மனமார மன்னிப்பு கேட்டு விட்டார். எல்லோரிடமும் வருந்தினார். சம்பந்தப்பட்ட ஆதிரையே இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு விட்டார். 

ஆக விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியதில் உப்புக்கு கூட பெறாத காரணங்கள்தான் இருக்கிறது. அவருக்கு விக்ரம் மீது ஏதோவொரு கோபம். அல்லது அவருக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். 

BB TAMIL 9 DAY 97
BB TAMIL 9 DAY 97

“நீங்க சொன்ன காரணங்கள் எதுவும் பொருத்தமில்ல. இங்க இருந்து நல்ல விஷயங்களை எடுத்துட்டுப் போங்க. தேவையில்லாதத சுமக்காதீங்க. விக்ரம் எனக்கு என்ன செல்லப்பிள்ளையா.. சரியான காரணம் இருந்தா நானே அவரைக் கேட்டிருக்கேன்” என்பதுடன் விடைபெற்றுக் கொண்டார் விசே. 

இந்த வாரத்தில் ஒரு அவசியமான எவிக்ஷன் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.! 

Bigg Boss Tamil 9: பணத்தேவை, மனச்சோர்வு - வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது ஏன்?

பணப்பெட்டி டாஸ்க் மூலம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கானா வினோத் வெளியேறியதால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.இந்த சீசனில் டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளவர் என எதிர்பா... மேலும் பார்க்க

BB Tamil 9: பணப்பெட்டி டாஸ்க்; "இதுதான் இந்த சீசனின் கடைசி குறும்படம்" - விஜய் சேதுபதி அதிரடி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 97 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா எவிக்ஷனில் வெளியேறியிருந்தார்.BB Tamil 9இதனைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ன் கடைசி வார எவிக்‌ஷனில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர்.கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி.வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் த... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 96: பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! அரோரா, விக்ரம், சபரி தூண்டினார்களா?

வினோத்தின் டைமிங் கிண்டல் காரணமாக அவருக்கு ரசிகர்கள் அதிகம் உருவாகியிருக்கிறார்கள். கூடுதலாக, அடிமட்டத்திலிருந்து வருபவர் வெற்றியடைய வேண்டும் என்கிற சென்டிமென்ட் எல்லோருக்குமே இருக்கும். எனவே ‘டைட்டில... மேலும் பார்க்க

BB Tamil 9: "நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த பணம் கோடி ரூபாய் மாதிரி"- பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க