IND vs NZ: "இந்திதான் முக்கியமானது.!" - வர்ணனையில் பேசிய சஞ்சய் பங்கர்; வலுக்கும...
BB Tamil 9 Day 98: `சாண்ட்ராவை புரிஞ்சுக்கவே முடியலை' திவ்யாவின் வருத்தம்; ஒரு குறும்படம்! ஹைலைட்ஸ்
எப்பவோ நிகழ்ந்திருக்க வேண்டிய எவிக்ஷன். இப்பவாவது நிகழ்ந்தது. ‘இவருக்கு கோப்பையை கொடுத்து விடுவார்களோ?’ என்கிற பீதியும் சந்தேகமும் ஓடிக் கொண்டிருந்த நிலையில் சாண்ட்ராவின் எவிக்ஷன் நிகழ்ந்தது, தமிழ் சீசனின் நல்ல விஷயங்களில் ஒன்று.
‘சிந்திப்பீர், செயல்படுவீர்’ என்று டைட்டில் வின்னரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மக்களின் வாக்கு பற்றி விசே சொல்லியிருக்கிறார். அப்படியே நிகழட்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தாண்டி தகுதியான போட்டியாளருக்கு கோப்பை செல்லுமாறு முடிவு அமையட்டும்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 98
வேட்டி சட்டையில் கூலர்ஸ் இல்லாமல் வந்தார் விசே. (கண்ணாடி போட்டா கேட்டு பிடுங்கிப் போயிடறாங்களோ?!) பிறகு பார்வையாளர்களின் வற்புறுத்தல் காரணமாக (?!) அணிந்து கொண்டார். “கடைசி வாரத்துக்கு வந்துட்டோம். இனிமே டாஸ்க், போட்டி கிடையாது. போட்டியாளர்கள் இனிமே தங்களை நிரூபிக்க அவசியமில்ல. மக்களின் வாக்குதான் தீர்மானிக்கப் போகுது. எனவே சிந்திச்சு செயல்படுங்க. இந்த எபிசோட்ல அதிகமா கேள்வி, விசாரணை இல்லை.. ஒரு குறும்படம்தான் இருக்கு” என்றார் விசே.
கேள்வி விசாரணை இல்லையென்றாலும் பிரவீன்ராஜ் உள்ளிட்டவர்களை இன்றும் ரோஸ்ட் செய்தார். சிக்கன் குனியா வந்து சாகப் போகிறவனுக்கு சிக்கன் பிரியாணி கொடுத்தால் என்ன, தயிர்சாதம் கொடுத்தால் என்ன என்கிற கதையாக, கடைசி வாரத்தில் ‘குறும்படம்’ என்று சொல்லி கைத்தட்டல் வாங்கினார் விசே.
அது என்ன என்று பார்த்தால் ‘அதுல ஒண்ணுமில்ல. கீழே போட்ரு’ காமெடிதான். விசே வந்த பிறகு குறும்படம் என்பதற்கே ஒரு மரியாதை இல்லாமல் போச்சு. முக்கியமானதிற்கெல்லாம் விட்டு விட்டு அற்பமான விஷயத்திற்கு குறும்படம்.
“போட்டில அஞ்சு பேர் இருக்காங்க. முன்னாள் போட்டியாளர்கள் சொல்லுங்க. நீங்க யாருக்காவது வாக்கு கேட்கணும்ன்னா யாரை சொல்லுவீங்க?” என்று முதல் டாஸ்க்கை வைத்தார் விசே. முதலில் எழுந்த திவாகர் ‘இவரு ரொம்ப நல்லவரு’ சார்.. என்று சபரியை சொன்னார்.
மிக்சர் பார்ட்டி என்று கிண்டலடிக்கப்பட்ட சபரிக்கு, கார் டாஸ்க் தியாகத்திற்குப் பிறகு மைலேஜ் கன்னாபின்னாவென்று கூடியிருக்கிறது. இது தவிர அடிப்படையிலேயே சபரியிடம் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அடுத்து எழுந்த அப்சராவும் சபரியின் பெயரைச் சொன்னார். திவ்யாவின் பெயரைச் சொன்னார் கெமி.
அடுத்து எழுந்தார் பிரவீன்காந்தி. என்ன இருந்தாலும் டைரக்டர் இல்லையா? வித்தியாசமாக சொல்லியாக வேண்டும். “அவங்க கார்ல இருந்து விழுந்தப்ப வானத்தை வெறிச்சுப் பார்த்தாங்க. அந்த மொமெண்ட்ல தோணிச்சு. சான்ட்ராவிற்கு வாக்களியுங்கள்’ என்று வித்தியாசமாக கேட்டுக் கொண்டார். வெளியே மக்களின் கருத்தையெல்லாம் பார்த்தாரா இல்லையா?
பிரவீன்ராஜ் விக்ரமிற்கு வாக்கு கேட்டார். வியானா அரோராவிற்கும் ரம்யா சபரிக்கும் வாக்கு கேட்டார்கள். இந்தச் சின்ன வட்டத்தை வைத்துப் பார்த்தால் சபரிதான் முன்னணியில் இருக்கிறார். இறுதி முடிவும் இதையேதான் பிரதிபலிக்குமா?

“ஓகே.. ஒரு சின்ன குறும்படம் பார்க்கலாமா?’ என்று விசே கேட்டவுடன் போட்டியாளர்களிடம் திகைப்பும் ஆவலும் கலந்த எக்ஸ்பிரஷன். ‘அய்யோ.. யாரு இன்னிக்கு மாட்டினாங்கன்னு தெரியலையே..?” என்று குறுகுறுவென்று பார்த்துக் கொண்டார்கள்.
வினோத் பணப்பெட்டியை எடுத்தது குறித்து ஆங்காங்கே மக்கள் வம்பு பேசிய காட்சி. வியானாவிற்கு அரோரா மீது சந்தேகம். (ஏன் சர்காஸ்டிக்கா சிரிக்கணும்?) அப்சராவிற்கு விக்ரம் மீது சந்தேகம். “சபரியோட முகத்துல ஒரு நிம்மதி தெரிஞ்சது” என்றார் பிரவீன்ராஜ்.
“படம் பார்த்தீங்களா. இதுக்கு விளக்கம் சொல்லுங்க?” என்றார் விசே. உண்மையில் இந்தக் குறும்படம் தேவையில்லாத ஆணி. “நான் பணம் எடுக்க யார் தூண்டுதலும் காரணம் இல்லை. என் சுய முடிவு” என்று வினோத் அறிவித்து விட்ட பிறகு பார்வையாளர்களுக்கு இந்த விசாரணையில் ஒன்றுமே இருக்காது. என்றாலும் நேரத்தைக் கடத்த ஒரு சந்தர்ப்பமாக பிக் பாஸ் டீம் பயன்படுத்திக் கொண்டது.
உண்மை தெரியாம வம்பு பேசாதீங்க - விசே அட்வைஸ்
“நீங்க வேற. நானே 18 லட்சம் போச்சேன்று கவலைன்னு இருக்கேன். வினோத் அல்வா கொடுத்துட்டாரு” என்று சொல்லி சிரிக்க வைத்தார் அரோரா. புகார் சொன்ன ஒவ்வொருவரையும் வரிசையாக விசாரித்தார் விசே. பிரவீன்ராஜ் தனது வழக்கமான பாடி லேங்வேஜில் பேச “இந்த டோனை நிறுத்துங்க. நானும் அப்படி பேசட்டுமா?” என்று விசே எரிச்சலானது நெருடல். தனது ஈகோ சீண்டப்படும் போதெல்லாம் உடனே டென்ஷன் ஆகி விடுகிறார் விசே. ஒருவேளை இவர் போட்டியாளராக சென்றால் என்னவெல்லாம் செய்வார்?!

“போட்டி நடக்கற இடத்துல ஒருத்தர் போற போது இன்னொருத்தருக்கு நிம்மதியாத்தானே இருக்கும்..அதுதானே நேச்சுரல்?” என்று தம் கட்டிப் பார்த்தார் பிரவீன்ராஜ். ஆனால் செல்லுபடியாகவில்லை. “அவர் மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு எப்படிங்க தெரியும்.. கண்ணைப் பார்த்தே கண்டுபிடிச்சிடுவீங்களா.. உங்க கண்ணைப் பார்த்து நான் சொல்லட்டுமா.. எனக்கு தெரியாத வித்தையா?” என்று விசே எகிற, சங்கடமான சிரிப்பைத் தந்தார் பிரவீன்ராஜ்.
ஒருவகையில் விசேவின் கோபம் கலந்த உபதேசத்தில் ஒரு நியாயமிருக்கிறது. நாம் கூட இந்தத் தவறைச் செய்கிறோம். அரைகுறையான தகவல்களைக் கேட்டு முழுமையான தீர்ப்பை உடனடியாக எழுதி காற்றில் பரப்பி விடுகிறோம். ஒருவரின் சின்ன முகபாவத்தை வைத்து ‘அந்தாள பார்த்தாலே சரியில்ல’ என்கிற முடிவிற்கு வந்து விடுகிறோம்.
அகிரா குரசேவா இயக்கிய ரஷோமான் என்கிற திரைப்படம் இருக்கிறது. ஒரே சம்பவத்தை பல்வேறு நபர்கள் அவரவர்களின் புரிதலில் சொல்வார்கள். இதில் உண்மை என்கிற வஸ்துவை எப்படி கண்டடைவது? இதே பாணியில் ‘அந்த நாள்’ ‘விருமாண்டி’ ஆகிய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஒருவரின் கோணத்தை வைத்து உண்மையை தெரிந்து கொள்ள முடியாது. உண்மையில் தூய்மையான உண்மை என்கிற சமாச்சாரம் இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். எல்லா உண்மையிலும் கொஞ்சம் பொய் கலந்திருக்கும்.
“ஒரு விஷயம் உங்களுக்கு உறுதியா தெரியாம ஏன் புறணி பேசினீங்க?” என்பதே விசே அழுத்தமாக கேட்க விரும்பும் செய்தி. இந்த தவறான வம்புகளின் மூலம் போட்டியின் முடிவுகள் மாறக்கூடும். “உங்களுக்கு விவாதிங்க. அத வேணாங்கலை. ஆனா முடிவு பண்ணிடாதீங்க. கடைசி வாரம். சந்தோஷமா இருங்க” என்று பிரேக்கில் சென்றார் விசே.

ஓர் அவசியமான எவிக்ஷன் - சான்ட்ரா
பிரேக் முடிந்து வந்த விசே “ஃபைனல்ல நாலு பேர்தான் இருப்பாங்க” என்று ஷாக் தந்து, அரிவாள் போல முதுகிலிருந்து எவிக்ஷன் கார்டை உருவினார். அதிக சஸ்பென்ஸ் இல்லாமல் கார்டை நீட்ட ‘சான்ட்ரா’ என்கிற பெயர் தென்பட்டதும் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து அத்தனை உற்சாகக் கூச்சல்.
‘ஹப்பாடா.. எப்படியோ ஃபைனல்ல வந்துட்டோம். பார்க்கலாம்.. அப்படியே டைட்டில் வரைக்கும் போயிடலாம்’ என்று மனக்கோட்டை கட்டிய சான்ட்ராவின் முகத்தில் அதிர்ச்சி. அதே சமயத்தில் வீட்டுக்குச் சென்று கணவரையும் குழந்தைகளையும் பார்க்கலாம் என்பதால் மகிழ்சசி. வழக்கமாக அழுது புலம்பும் சான்ட்ரா “எனக்கு அழுகையே வரலை” என்பதற்கான காரணம் குடும்பம். சான்ட்ராவிற்கு குடும்பம்தான் உலகம். அங்குதான் அவர் இயல்பாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. வெளியுலகில் எளிதில் எக்ஸ்போஸ் ஆகி விடுகிறார். கூட கணவர் இருந்தால்தான் துணிச்சல் வருகிறது.
“அக்கா.. நீங்க நல்லா விளையாடினீங்கக்கா.. பணப்பெட்டியை நீங்கதான் எடுப்பீங்கன்னு நெனச்சேன். கண்ணை கண்ணை காட்டினேன்” என்று சான்ட்ராவின் கூடவே நடந்து ரகசியம் பேசினார் திவாகர். (வினோத் மீது ஏன் இத்தனை வன்மம்?)
மேடைக்கு வந்த சான்ட்ரா “பிரஜின் வரலை?” என்று கேட்டு விட்டு “இந்த ஷோ எனக்கு தைரியத்தைக் கொடுத்தது. ஆரம்பத்துல நல்லா போச்சு. அப்புறம் எங்கேயோ குழம்பிட்டேன். ஆட்டம் கை விட்டு போயிடுச்சு. இப்ப கூட அழணும் போல இருக்கு. ஆனா அழுதா டிராமா பண்றதா சொல்றாங்க. டைட்டில் அடிப்பேன்னு நெனச்சேன். பணப்பெட்டியை எடுக்கணும்ன்னு தோணலை” என்றார்.
ஒருவர் அழுவது பெரிய பாவமல்ல. ஒருவகையில் அது அவசியமானதே. ஆனால் எல்லாவற்றிற்கும் அழுவது, மற்றவர்களின் மீது பழி போடுவது, பாதுகாப்பாக இருக்கும் சமயத்தில் மற்றவர்களைக் காயப்படுத்துவது, சந்தர்ப்பவாத நட்பு உருவாக்குவது போன்றவை சான்ட்ராவின் பலவீனங்கள்.

“இந்த சான்ட்ராவை புரிஞ்சுக்கவே முடியலை" - திவ்யாவின் வருத்தம்
சான்ட்ரா வீட்டிலிருந்து கிளம்பும் போது, திவ்யா போட்டோ பிரேம் தந்து கை குலுக்க முற்பட்ட போது அதை தவிர்த்தார் சான்ட்ரா. எனவே திவ்யா முறைப்பாகவே இருந்தார். ஆனால் மேடைக்கு சென்ற பிறகு “திவ்யா.. நான் உன்னை நாமினேட் பண்ணதில்ல. வொர்ஸ்ட் ஃபர்பார்மர்ன்னு சொன்னதில்ல’ என்று சான்ட்ரா சொல்ல “சொல்லலாம் தப்பில்ல’ என்று முறைப்புடன் சொன்னார் திவ்யா. “உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி” என்றார் சான்ட்ரா.
பிறகு நடந்த ‘ஸாரி’ மற்றும் ‘தாங்க்ஸ்’ டாஸ்க்கில் “சான்ட்ராவை புரிஞ்சுக்க முடியல. என் முதுகில குத்தின மாதிரி ஒண்ணு செஞ்சாங்க. என் கிட்டயே நேரடியா கேட்டிருக்கலாம். நான் கை குலுக்க போனப்ப ஒதுங்கினாங்க. ஆனா மேடைல சாரி சொல்றாங்க. இதுல எது உண்மை.. இப்படியெல்லாம் யாரையும் தவிக்க விடாதீங்க.. இந்த அனுபவத்தை தந்ததற்காகவே சான்ட்ராவிற்கு தாங்க்ஸ்” என்று திவ்யா சொன்ன காரணம் சிறப்பு. பொதுவெளி என்பதற்காக நடிக்காமல் மனதில் பட்டபடி நேர்மையாக நடக்கிறார் திவ்யா.
‘பிரவீன், கனி, சுபிக்கு தாங்க்ஸ் சொல்லணும். அவங்களோட எமோஷனல் பாண்டிங் ஆயிட்டேன். அப்படி ஆகக்கூடாதுன்னு நெனச்சிதான் வந்தேன். ஸாரி சொல்லணும்னா. வியானா மற்றும் திவ்யா. நான் யாருக்கும் கெடுதல் நெனச்சதில்ல.. உண்மையாவே ஸாரி” என்று உருகினார் விக்ரம்.

‘துஷார் வரும் போது அரோ என்னவெல்லாம் பண்ணப் போறான்னு தெரியலை” என்று மக்கள் கிண்டலடிக்கும் காட்சியோடு எபிசோட் நிறைந்தது.
கிளைமாக்ஸ் நேரம். தகுதியான போட்டியாளரை சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நேரம். அந்த வாக்குகளின் படிதான் முடிவு அமையும் என்று பாசிட்டிவ்வாக நம்புவோம்.
உங்கள் பார்வையில் வெற்றிக் கோப்பைக்கு தகுதியான நபர் யார்? என்னைக் கேட்டால் சபரி மற்றும் விக்ரமிற்கு இடையேதான் கடும் போட்டி நிலவும் என்று தோன்றுகிறது.!
















