புதுச்சேரி: `இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்!' - காவல்துறை தலைமை அதிரடி உத்தரவு
Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா - மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா!
எர்ணாகுளத்தில் வசிக்கும் ஜஸ்டினின் (நிவின் பாலி) வீட்டுக்கு அருகே தன் குடும்பத்துடன் புதிதாகக் குடிவருகிறார் ஆஷ்லி (மமிதா பைஜு). அங்கே கேட்ரிங் தொழில் செய்துவரும் ஜஸ்டினை ஊரே மதிக்கிறது. அவருடைய சகோதரன் ஜோயல் (சங்கீத் பிரதாப்), ஒருபுறம் குறும்படம் எடுப்பதாக அலப்பறைகள் கொடுத்துவர, ஜஸ்டின் பொறுப்புடன் ஊருக்கு உதவுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஆஷ்லிக்கு ஜஸ்டினைப் பிடித்துப் போகிறது. இருவருக்கும் இடையே இருக்கும் 12-13 ஆண்டுகள் வயது வித்தியாசம் முதலில் ஜஸ்டினை யோசிக்க வைக்க, அவர்களின் காதலை ஊர் எப்படிப் பார்க்கிறது, ஜஸ்டின் என்ன முடிவெடுத்தார் என்பதை நல்லுணர்வுமிக்க காமெடி படமாகக் கொடுத்திருக்கிறார் `பிரேமலு' புகழ் இயக்குநர் கிரிஷ் ஏ.டி.
மதிப்பும் மரியாதையும் மிக்கவராக வலம் வந்தாலும், ஆங்காங்கே வெளிப்படும் க்யூட் குழந்தைத்தனத்துடன் நிவின் பாலி, படம் முழுக்க நிறைந்து கிடக்கிறார். முதிர்ச்சியான நடிப்பு, கோபத்தின் வெளிப்பாடு தாண்டி, வெட்கப்படும் தருணங்கள்... அழகு சேட்டா! துடிப்பான கதாபாத்திரத்தில் இயல்பாக மனதில் நிறைகிறார் மமிதா பைஜு. நிவினைச் சீண்டும் இடங்கள், காதலை வெளிப்படுத்தும் காட்சிகள், குடும்பத்தின் பிளாக்மெயிலுக்கு கலங்கும் இடம் போன்றவற்றில் எமோஷன்களிலும் அட்டகாசப்படுத்துகிறார்.
நிவினின் சகோதரராக சங்கீத் பிரதாப் தன் வழக்கமான காமெடி கவுன்ட்டர்களாலும் உடல்மொழியாலும் அதகளப்படுத்துகிறார். இயக்குநராக அவர் கூட்டும் அலப்பறைகள் ரகளை! நிவினின் சீனியர் நண்பர்களில் மது பிரியராக சுரேஷ் கிருஷ்ணா காமெடி கதகளி ஆட, க்ளிக்சனாக ரோஷன் ஷானவாஸ், கோபக்காரராக தன் 'பிரேமலு' பாத்திரத்தை மீண்டும் பிரதிபலிக்கும் ஷ்யாம் மோகன் ஆகியோர் படத்துக்கு கலகலப்பூட்டுகின்றனர். வினய் ஃபோர்ட், ஷ்ரிந்தா உள்ளிட்ட மற்ற துணை கதாபாத்திரங்களும் இந்த குடும்ப யூனிட்டின் முக்கிய அங்கங்களாகின்றனர்.
அஜ்மல் சபுவின் ஒளிப்பதிவு, சர்ச் மற்றும் அதைச் சுற்றிய வீடுகள், அம்மக்களின் வாழ்வியல் உள்ளிட்டவற்றைக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. கண்களுக்கும், முகபாவனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது எமோஷன்களை இன்னும் ஆழமாக நமக்குக் கடத்திவிடுகிறது. படத்தொகுப்பாளர் ஆகாஷ் ஜோசப் வர்க்கீஸ், கதையின் தன்மையை உணர்ந்து, திரைக்கதைக்குத் தேவையான மிதமான வேகத்தைக் குறைகளின்றி வழங்கியிருக்கிறார். விஷ்ணு விஜய்யின் இசையில் 'மாந்திரிகம்', 'இல்லே இல்லா' பாடல்கள் கதையை முன்நகர்த்துவதோடு, மெலடிகளாக மனதைக் கரைக்க, பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளுக்குப் பக்கபலமாக நிற்கிறது.
இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் நாயகன், புதிதாக அந்த ஊருக்கு வரும் நாயகி, இவர்களுக்கு இடையே மலரும் உறவு, அங்குள்ள மனிதர்களிடையே வெளிப்படும் நகைச்சுவை தருணங்கள் என்பதாகத் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. கொஞ்சம் கொஞ்சமாக நாயகனிடம், நாயகி மனதைப் பறிகொடுக்கும் காட்சிகள் யதார்த்தத்துடன் எழுதப்பட்டிருப்பது அத்தனை அழகு! நாயகன் - நாயகியின் காதல் கதை மேடையை நிறைத்தாலும், எண்ணற்ற துணை கதாபாத்திரங்கள், அவர்களின் இயல்பு, அவர்களின் பயணம் என எல்லாவற்றுக்கும் அழகாக இடமளிக்கிறது படம். குறிப்பாக சங்கீத் பிரதாப்பின் கதாபாத்திர வடிவமைப்பு, அவரின் காதல் கதை, அதற்கான க்ளைமாக்ஸ் போன்றவை நிறைவான அத்தியாயங்களாக நீள்கின்றன.
காதலர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம், அது நாயகனுக்குக் கொடுக்கும் தடுமாற்றம், நாயகியின் வெளிநாட்டுக் கனவு, குடும்பத்தின் எதிர்ப்பு என பேப்பரில் பிரச்னைகள் நிறைய இருந்தாலும், அவற்றை பெரும் சிக்கல்களாக அணுகாமல் இயல்பான வசனங்களாலும் காட்சிகளாலும் அதைக் கடந்து செல்கிறது திரைக்கதை. ஊரே அஞ்சும், மரியாதை கொடுக்கும் நாயகன், நாயகியிடம் மட்டும் குழந்தைத்தனமாக இருப்பது, ஊர்ப் பேச்சுக்கு யோசிப்பது போன்றவை ஜாலியான ஹைக்கூ! அதே சமயம், அவரின் தயக்கத்துக்கான காரணம் முந்தைய இழப்பா, வயது வித்தியாசமா என்பதை இன்னுமே தெளிவுபடுத்தியிருக்கலாம். அவரின் பாத்திர வார்ப்பே முதிர்ச்சியுடன் இருக்க, துணிந்து ஒரு முடிவெடுக்க அவர் நீண்ட காலம் எடுப்பது ஏற்புடையதாக இல்லை.
அதேபோல, ஆங்காங்கே வரும் பெரிய பிரச்னைகளை கூட காமெடியாக அணுகி, கலாய் கவுன்ட்டர்கள் கொடுத்து ஆஃப் செய்துவிடுவதால் படம் எதை நோக்கி நகர்கிறது, ஏன் இவ்வளவு நீள்கிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஜாலியான, வன்முறையற்ற, தென்றலாக வருடும் ஒரு கவிதையான படைப்பு என்ற வகையில் இந்த `பெத்லகேம் குடும்ப யூனிட்'டுக்குள் நிச்சயம் நாமும் தயக்கமின்றி நுழையலாம்.

















