Valentino Garavani: ஃபேஷன் உலகமே அஞ்சலி செலுத்தும் ஜாம்பவான் வாலென்டினோ கரவானி -...
Book Fair: "லாரியில கொண்டு போனோம்" - ரூ. 1.5 லட்சத்திற்கு புத்தகங்கள் வாங்கிய பிக்பாஸ் தினேஷ் அம்மா
சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்குப் புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளது திருவில்லிபுத்தூரில் இயங்கி வரும் பென்னிங்டன் நூலகம்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இந்த நூலகம்தான் தமிழ்நாட்டில் தனியார் நூலகங்களிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமான நூல்களை வைத்திருக்கும் நூலகம்.
சில மாதங்களுக்கு முன் 150 வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய நூலகத்திலிருந்து சென்னை புத்தகக் காட்சிக்கு வந்திருந்த நூலகர் கிருபா, பென்னிங்டன் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரும் சின்னத்திரை நடிகருமான தினேஷின் அம்மா அம்சவேணி ஆகியோருடன் பேசினோம்.

''1875ம் ஆண்டு அப்போதைய திருநெல்வேலி மாவட்ட கலெக்டரா இருந்த பென்னிங்டன் பெயரில் தொடங்கப்பட்ட நூலகம். நாடு சுதந்திரமடைஞ்சதும் முதல் முதலமைச்சரா இருந்த குமாரசாமி ராஜா தொடங்கி சர் சி. வி. ராமனுடன் இருந்த விஞ்ஞானி கே.எஸ். கிருஷ்ணன் வரைக்கும் பயன்படுத்திய நூலகம். திருவில்லிபுத்தூருக்கு ஆண்டாள் கோவில் ஆன்மிக அடையாளம்னா இந்த நூலகம் கல்வி அடையாளம். தினமும் 300 பேருக்குக் குறையாம மக்கள் வந்து பயன்படுத்தறாங்க.
சுத்து வட்டாரக் கிராமங்கள்ல போட்டித் தேர்வுக்குத் தயார் செய்கிறவர்களுக்கு பெரிய உதவியா இருக்கு இந்து நூலகம். அரசு நிதியுதவி எதுவும் இல்லாம அந்தக் காலத்துல பென்னிங்டன் ட்ரஸ்டுக்கு வாங்கிப் போட்ட சொத்துகள் மூலமா கிடைக்கிற வருமானத்தை வைத்தே நூலகம் இயங்கிட்டிருக்கு. மாவட்ட ஆட்சித்தலைவர் கௌரவத் தலைவரா இருக்கிறார்.
150வது ஆண்டு கொண்டாட்டாத்தின் போதே, இந்த முறை புத்தகக் காட்சிக்குப் போய் நிறைய புத்தகங்களைப் பர்ச்சேஸ் செய்து வரலாம்னு முடிவு பண்ணினோம். அதனால பொங்கல் விடுமுறையில் சென்னை வந்து புத்தகங்கள் வாங்கினோம். இங்கிருந்து புத்தகங்களுக்கு மட்டும் தனியே லாரி அமர்த்திக் கொண்டு போனோம்" என்றார் அம்சவேணி.

நூலகத்தின் பொறுப்பாளர் கிருபாவிடம் பேசிய போது,
''தமிழ்நாடு அரசின் கெஜட் 1950 வது வருஷத்தில இருந்து எங்க நூலகத்தில் இருக்குது. அதேபோல நாளிதழ், வார இதழ்னு எல்லாப் பத்திரிகைகளும் படிக்க கிடைக்கும். சமீபத்துல நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் இந்த நூலகத்தைப் பயன்படுத்திய ஐந்து பேர் அரசுப் பணிக்குத் தேர்வாகியிருக்காங்க. தனியார் நூலகமா இருந்த போதும் இதை நிறுவிய முன்னோர்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கினாங்களோ அதே பாதையில் தடம் மாறாமல் இயங்கிட்டு வருது'' என்றார்.

















