பாலிவுட் நடிகர் குடும்பத்திடம் ரூ.16 கோடி மோசடி; மும்பை மாநகராட்சி உதவி கமிஷனர் ...
Celebi: "இந்தியாவில் ஒரே நாளில் ரூ. 4,700 கோடி வணிகத்தை இழந்தோம்" - துருக்கி விமான நிறுவனம்
கடந்த 2025 ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லையைக் கடந்து இந்தியா 'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
இந்த ராணுவ நடவடிக்கை மே 10 அன்று முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த ஐந்தாவது நாளே பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியின் செலிபி நிறுவனத்திற்கான அனுமதியை இந்திய அரசு ரத்து செய்தது.

இந்தியா - துருக்கி உறவில் விரிசல்:
இந்த மோதலின் போது துருக்கி அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, இந்தியாவின் தாக்குதலைக் கடுமையாக விமர்சித்தது.
மேலும், இப்போரில் பாகிஸ்தான் துருக்கி தயாரிப்பு ட்ரோன்களைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் வெளியானதால் இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது.
இதனால் இந்தியப் பொதுமக்கள் மத்தியில் துருக்கியப் பொருள்கள் மற்றும் நிறுவனங்களைப் புறக்கணிக்கும்படி கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
நிறுவனத்தின் விளக்கமும் இறுதி முடிவும்:
தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தது. அதே நேரம், துருக்கியைச் சேர்ந்த பிரபல விமான போக்குவரத்து சேவை நிறுவனமான ‘செலிபி’ (Celebi), "எங்களின் நிறுவனத்திற்கும் துருக்கி அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எங்கள் நிறுவனத்தின் 65 சதவீதப் பங்குகள் சர்வதேச முதலீட்டாளர்களிடமே உள்ளது" என விளக்கமளித்திருந்தது.
இருப்பினும், நாட்டின் பாதுகாப்பைக் கருதி இந்திய அரசு எடுத்த உறுதியான முடிவால், செலிபி நிறுவனம் இந்தியாவில் கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 4,700 கோடி) மதிப்பிலான மொத்த வணிகத்தையும் இழந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ‘செலிபி’ நிறுவனத்தின் தலைவர் கானன் செலிபியோக்லு (Canan Celebioglu) 'ப்ளூம்பெர்க் எச்டி' (Bloomberg HT) ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "2025 மே மாதம் இந்திய அரசு எடுத்த இந்த முடிவு, எங்கள் நிறுவன வரலாற்றிலேயே மிகவும் வேதனைக்குரிய ஒரு அத்தியாயம்.
இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பிய எங்களின் உழைப்பு, முதலீடுகள் மற்றும் தளவாடப் பொருட்கள் அனைத்தும் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்டோம்.
டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி 9 முக்கிய விமான நிலையங்களில் தரைக்கட்டுப்பாட்டுச் சேவை (Ground-handling) மற்றும் சரக்குக் கையாளுதல் (Cargo) பணிகளை செலிபி நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பணிபுரிந்து வந்த சுமார் 10,000 ஊழியர்கள் ஒரே நாளில் மாற்று நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டனர். பண மதிப்பைத் தாண்டி, இந்தியாவை எங்களின் இரண்டாவது வீடாகக் கருதி, அதன் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சிக்கு எங்களின் நிறுவனம் ஆற்றிய பங்களிப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. இது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அளித்தது" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.














