பாலிவுட் நடிகர் குடும்பத்திடம் ரூ.16 கோடி மோசடி; மும்பை மாநகராட்சி உதவி கமிஷனர் ...
``Please எனக்கு இப்படி பட்டம் கொடுத்துறாதீங்க: மன்னிப்பு கேட்டுக்கிறேன்" - நடிகர் மாஸ்டர் மகேந்திரன்
நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அண்மையில் மின்வெட்டு தொடர்பாகவும், சோலார் பேனல் தொடர்பாகவும் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, ட்ரால் (Troll) செய்யப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பொதுமக்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் தான் கூற வந்த உண்மையான கருத்துக்களை விளக்கும் வகையில் ஒரு தெளிவுரை வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ``சமீபத்தில் நான் கொடுத்த நேர்காணல் ஒன்றில் பேசிய விஷயங்கள் பயங்கர ட்ரால் ஆகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நான் யாரையெல்லாம் மதிக்கிறேனோ, யாருடைய கருத்துக்கள் எல்லாம் சரி என்று என் நண்பர்களிடம் இவ்வளவு நாளாகப் பேசி வந்தேனோ, அவர்களே என்னைப் பற்றிப் பேசியிருந்தார்கள்.

'மகேந்திரன் இதைச் சொல்ல வரவில்லை, வேறு ஏதோ சொல்லியிருக்கிறார்' என்று அவர்கள் ஒரு நிமிடம் யோசித்து ஆதரவாகப் பேசியிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. நான்தானே பேசினேன், அதனால் என் மக்களுக்கு நான் என்ன சொல்ல வந்தேன் என்பதைச் சரியாக விளக்கம் கொடுக்கலாம் என்றுதான் தற்போது பேசுகிறேன்.
நேர்காணலில் "கேள்வி கேட்டா கரெக்டா வந்துருமா?" என்று நான் யாரைப் பார்த்து கேட்டேன் என்றால், மின்சாரப் பிரச்னையை வைத்து அரசியல் செய்பவர்கள், மக்களின் உணர்வுகளை வைத்து அரசியல் பண்ணுபவர்கள் மற்றும் எதற்கெடுத்தாலும் கடைசி வரை கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பவர்களை நோக்கித்தான். அவர்களைப் பார்த்துதான் "நீங்கள் கேள்வி கேட்டால் கரண்ட் வந்துவிடுமா?" என்று கேட்டேன்.
அதேபோல், "ஆறு மாதம் டைம் கொடுங்கள், கேள்வியே கேட்காதீர்கள்" என்று நான் ஏன் கூறினேன் என்றால், அண்ணா விஜய் ஆட்சிக்கு வரும்போது 'எனக்கு ஒரு ஆறு மாத கால அவகாசம் கொடுங்கள், எல்லாவற்றையும் சரியாகச் சீரமைத்து நல்ல ஆட்சியைத் தருகிறேன்' என்று கூறினார். அவர் மீது இருந்த நம்பிக்கை மற்றும் அன்பின் காரணமாகவும், அவரே அப்படிக் கேட்டிருக்கும்போது நாமும் ஏன் கேட்கக்கூடாது என்ற சென்ஸிலும்தான் நான் அதைக் குறிப்பிட்டேனே தவிர, பொதுமக்களுக்கானது அல்ல.
அடுத்தபடியாக 'சோலார் சிஸ்டம்' என்று நான் பேசியது என்னுடைய வார்த்தைப் பிழைதான், அதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் ஒன்றும் பெரிய புத்திசாலி மாணவன் கிடையாது. ஒரு சாதாரண ஆவரேஜ் மாணவன்தான். அதனால் வார்த்தை தடிப்பில் 'சோலார் சிஸ்டம்' என்று கூறிவிட்டேன். அதற்குப் பதிலாக சோலார் எனர்ஜி, சோலார் பவர் அல்லது சோலார் பேனல் என்று நான் சொல்லியிருக்க வேண்டும்.
கடந்த 2015-ம் ஆண்டு கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையம், உலகிலேயே முதன்முறையாக ஒட்டுமொத்தமாக சோலார் எனர்ஜி (சூரிய சக்தி) மூலம் இயங்கும் ஏர்போர்ட்டாக மாற்றப்பட்டது. அதை நான் நேரில் பார்த்தபோது, 'ஏன் நம் தமிழ்நாட்டில் நம் கிராமத்து மக்கள் மின்சாரத்திற்கு இவ்வளவு கஷ்டப்படும்போது, இந்த மாதிரியான திட்டங்களை நம் அரசு செய்யவில்லை?' என்று யோசித்தேன்.
ஆனால், அதன் பிறகுதான் தெரிந்தது கடந்த 2011-லேயே அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீட்டின் மேல் கூரைகளில் சோலார் பேனல் அமைக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். தொலைநோக்கு பார்வையில் கொண்டு வரப்பட்ட திட்டம். அன்றைய தொழில்நுட்பத்தை நாம் சரியாகப் பின்பற்றியிருந்தால், இந்த 2026-ல் அதன் பலனை முழுமையாக உணர்ந்திருப்போம். அதை நாம் மிஸ் செய்துவிட்டோம் என்ற ஆதங்கத்தில்தான் அதைச் சொன்னேன்.
அதேபோல், "என் வீட்டிலிருந்து கரண்ட் எடுத்துக்கோங்க" என்று நான் பேசியதும் தவறாகக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. என் வீட்டிலிருந்து எப்படி அவர்களால் கரண்ட் எடுக்க முடியும்? 'என் வீட்டிலும் கரண்ட் கட் ஆனாலும் பரவாயில்லை, நானும் இந்த மக்களின் ஒருவனாக நானும் கஷ்டத்தை அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன்' என்ற அர்த்தத்தில்தான் நான் அப்படிப் பேசினேன். ஆனால், அது தப்புத் தப்பாக கன்வே ஆகிவிட்டது.
இதற்கிடையில், மகேந்திரனுக்கு பயங்கர திமிர், சின்ன வயதிலிருந்தே அவனுக்கு ஆட்டிடியூட் அதிகம், ஒருமுறை இயக்குனர் மணிரத்னம் சார் முன்னாடியே கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்து சீன் போட்டான் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. இதுபற்றிப் பேசிய நபரை நானே போனில் அழைத்துக் கேட்டேன். அதற்கு அவர், "சும்மா ஒரு ஃபன்னுக்காக அப்படிப் பேசினேன்" என்றார். அவர் பேசி இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இன்றளவும் அதைத் தோண்டி எடுத்து என்னை 'திமிர் பிடித்தவன்', 'யாரையும் மதிக்க மாட்டான்' என்று சித்தரிக்கிறார்கள்.

மேலும், மக்களின் கஷ்டத்தைப் பார்த்து நான் சிரிப்பதாகவும், ஏளனமாகப் பேசுவதாகவும் மற்றொரு குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ப்ளீஸ், எனக்கு அப்படிப்பட்ட பட்டங்களை எல்லாம் கொடுத்துவிடாதீர்கள். இன்று நான் ஒரு வேளை சோறு சாப்பிடுகிறேன் என்றால் அதற்கு இந்த மக்கள்தான் காரணம். இவ்வளவு முக்கியமான என் மக்களை நான் எப்படி ஏளனம் செய்வேன்? என்னுடன் வேலை பார்த்தவர்களுக்கும், என்னுடன் பழகியவர்களுக்கும் நான் இந்த மக்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது நன்றாகத் தெரியும்.
நான் சரியாக நடிக்கவில்லை என்றாலோ, என் படம் நன்றாக இல்லை என்றாலோ நீங்கள் தாராளமாக விமர்சியுங்கள்; "மகேந்திரன் நீ சரியாக நடிக்கவில்லை" என்று கூறுங்கள், நான் என்னை மாற்றிக்கொண்டு உங்களை இம்ப்ரஸ் செய்யும் அளவிற்கு நல்ல நடிகனாக மாற முயற்சிக்கிறேன். அதைத் தவிர்த்து இப்படிப்பட்ட தவறான அவதூறுகளை என் மீது சுமத்த வேண்டாம்.
என்னுடைய இந்த பேச்சுக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, ஏதேனும் ஒரு பொதுமக்களின் மனதை புண்படுத்தியிருந்தால், நான் என் மனதின் ஆழத்திலிருந்து வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றிகள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


















