Champions Trophy 2025: `ஹைபிரீட் முறையில் நடத்த தயார்! ஆனால்..' -பாகிஸ்தான் முன்வைக்கும் நிபந்தனைகள்
சாம்பியன்ஸ் டிராபி 2025 -ஐ பாகிஸ்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது முதல் இந்தியா பங்கேற்பது குறித்து பல சலசலப்புகள் ஏற்பட்டுவிட்டன.
26/11 மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவதில்லை. கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு உலகக்கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களைத் தவிர இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எதிரெதிராக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.
2023ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் போட்டிகள் ஹைப்ரீட் முறையில் இலங்கையில் நடைபெற்றன. ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் ஹைபிரீட் முறையில் போட்டிகளை நடத்த முடியாது என இழுத்தடித்துவந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
தற்போது ஹைபிரீட் முறையில் போட்டிகளை நடத்த ஒத்துக்கொண்டாலும் அதற்காக சில நிபந்தனைகளை வைத்துள்ளனர்.
இந்தியா டுடே வலைத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துயாயில் நடைபெறும்.
இந்தியா தகுதிபெற்றால் அரையிறுதி மற்றும் இறுதி சுற்றுப் போட்டிகளும் கூட துபாயிலேயே நடைபெறும். இந்தியா தேர்வாகவில்லை என்றால் இறுதிப்போட்டி பாகிஸ்தான் திட்டமிட்ட படி, லாகூரில் நடைபெறும்.
எதிர்காலத்தில் இந்தியா எதாவது தொடர்களை நடத்தினால் பாகிஸ்தான் வெளிநாட்டு அரங்கில்தான் கலந்துகொள்ளும் என்பது பாகிஸ்தான் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனை.
இதுகுறித்து ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் முபாஷிர் உஸ்மானியை துபாயில் சந்தித்து ஹைபிரீட் முறையில் போட்டி நடத்துவது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி - மார்ச் மாநிலங்களில் போட்டிகள் நடைபெறவிருக்கும் மைதானங்களில் கட்டுமான வேலைகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறதாம்.
சாம்பியன்ஸ் டிராபியில் பங்குகொள்ள வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு உயர்தர பாதுகாப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்கின்றனர்.