வரலாற்றுச் சின்னமாக அழகுற காட்சியளிக்கும் எல்லீஸ் மதகுகள் (16 கண் பாலம்) கட்டுமா...
Dark web-ல் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவுகள் கசிவு; பாதுகாப்பிற்கு என்னென்ன அச்சுறுத்தல்கள்?
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது கூடங்குளம் அணுமின் நிலையம். இது ரஷ்ய நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்ட அணுமின் நிலையம் ஆகும்.
இங்கே தற்போது தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரு அலகுகள் செயல்பாட்டில் உள்ளன.
இன்னும் 4 அலகுகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு கூடங்குளம் அணுமின் நிலையம் சம்பந்தமான கோப்புகளை டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளது.
அதில் அணுமின் நிலையத்தின் சில வரைபடங்கள், விநியோகஸ்தர்களின் விவரங்கள், ஆய்வுப் பதிவுகள், உபகரணங்களின் மதிப்பாய்வுகள் போன்றவை இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆவணக் கசிவு குறித்து இந்திய அணுமின் கழகம் லிமிடெட்டின் பொறுப்புத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வி. ராஜேஷ் NDTV-க்குக் கொடுத்த தகவல்...
"இவை அணுசக்திப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத, பொதுவான சர்வீஸ் பேலன்ஸ் ஆஃப் பிளான்ட் (balance of plant) அமைப்புகளைச் சார்ந்தவை. இதனால், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை."
இந்த ஆவணக் கசிவு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் கோ. சுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு...
"தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தொடர்பான சுமார் 8,58,000 கோப்புகள் கசிந்துள்ளன. இதில் சுமார் 19,000 கோப்புகள் மிகவும் ரகசியமானவை மற்றும் முக்கியமானவை என்று கூறப்படுகிறது.
இந்தத் தரவு கசிவு, கூடங்குளம் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பிற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று 'Nuclear Threat Initiatives' அமைப்பின் மூத்த இயக்குநர் நிக்கோலஸ் ரோத் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1 மற்றும் 2-வது அலகுகளின் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கை, தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ் பொதுவெளியில் வெளியிட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு.
ரஷ்ய கூட்டமைப்புடனான நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கையை NPCIL நிறுவனம் வைத்துள்ளதால், ஆர்.டி.ஐ சட்டத்தின் பிரிவு 8(1)(e)-ன் படி இதை வெளியிட வேண்டியதில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் தரவு கசிவு காரணமாக, பல முக்கியத் தகவல்கள் பொதுவெளியில் வெளியாகி, நமது மக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அணு உலைகளின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை எளிதாக்கவும், அணுசக்தித் துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இந்திய அரசு அணுசக்திச் சட்டம் 1962 மற்றும் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம் 2010 ஆகியவற்றில் சமீபத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
அணுசக்தித் துறையைத் தனியார்மயமாக்குவதில் உள்ள ஆபத்துகளை இந்தத் தரவுக் கசிவு சம்பவம் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
உதாரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஒப்பந்ததாரர்களில் ஒருவரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப், 'யோட்டா' (Yotta) என்ற மூன்றாம் தரப்பு இந்திய தரவு மைய சேவை வழங்குநரால் ஹோஸ்ட் செய்யப்பட்ட சர்வரில் தங்களது தரவுகள் 'பகுதியளவில் கசிந்துள்ளதாகவும்', இது குறித்து அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தத் தரவுக் கசிவுக்கான தார்மீகப் பொறுப்பிலிருந்தும், எந்தவொரு பொறுப்புக்கூறலிலிருந்தும் தப்பிக்க ஒரு தனியார் நிறுவனம் எவ்வாறு முயற்சிக்கிறது என்பதைப் பாருங்கள்.
மூன்றாவதாக, கசிந்த ஆவணங்களில் ஒன்று, கூடங்குளத்தில் உள்ள அலகு 3 அல்லது அலகு 4-இல் பயங்கரவாதச் செயல் ஏதேனும் நடந்தால், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் NPCIL ஆகிய நிறுவனங்களுக்கு 112 மில்லியன் டாலர் காப்பீட்டுத் தொகை கிடைக்க வழிவகை செய்யும் காப்பீட்டுக் கொள்கையை அவை எடுத்துள்ளதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம் 2010, மொத்த பொறுப்புத் தொகையை 300 மில்லியன் SDR (Special Drawing Rights) ஆகக் கட்டுப்படுத்தியுள்ளது என்பது ஆச்சரியமளிக்கிறது.
இது ஒரு விபத்திற்கு வெறும் 460 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற மிகக் குறைந்த தொகையாக மட்டுமே வருகிறது. எவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டாலும், மொத்த இழப்பீட்டுப் பொறுப்புக்கு இப்படி ஒரு உச்சவரம்பு, அதுவும் இவ்வளவு சொற்பமான ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை எங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது.
ஒன்றைச் சிந்தித்துப் பாருங்கள் - ஒரு பயங்கரவாதச் செயலுக்கு, இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 112 மில்லியன் டாலர் காப்பீட்டுத் தொகை கிடைக்கிறது.

ஆனால், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பணயத்தில் வைக்கும் ஓர் அணுசக்தி விபத்து ஏற்பட்டால், சேதங்களுக்காக இந்திய அரசு வழங்கும் தொகை வெறும் 460 மில்லியன் டாலர் மட்டுமே. இந்த மாபெரும் முரண்பாடு இந்திய அரசு மற்றும் இந்திய அணுசக்தி ஆணையத்தின் அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு மற்றும் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்துகிறது.
எனவே, இந்திய அரசு உடனடியாக இந்தத் தரவுக் கசிவு குறித்து முழுமையாக விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். அதோடு, இந்திய மக்களின் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்யப் பரந்த அளவிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும், அணுசக்தித் துறையைத் தனியார்மயமாக்குவதை அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு (national grid) வெறும் மூன்று சதவீத மின்சாரத்தை மட்டுமே வழங்கும் இந்த அணுசக்தித் துறையைத் படிப்படியாக மூட அரசு முன்வர வேண்டும்".















