’கோவை தவெக-வில் உட்கட்சிப் பூசலா?’ – சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்!
கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”அழுகை சத்தம் இப்போதும் மறையவில்லை” - நினைவு தினத்தில் கலங்கிய பெற்றோர்
கும்பகோணம் ஶ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீக்கு இரையாகினர்.
பல குழந்தைகள் கடும் தீகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்தக் கோர சம்பவம் உலகையே உலுக்கியது. பள்ளி நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பில் காட்டிய அலட்சியமே இந்தத் தீ விபத்துக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தீ விபத்து நாள் நடந்த தினத்தில் பலியானவர்களுக்கு பள்ளி முன்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடக்கிறது.

அதன்படி கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. விபத்து நடந்த பள்ளி முன்பு உயிரிழந்த 94 குழந்தைகளின் படங்கள் அடங்கிய ப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அங்கு திரண்ட குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சகோதர, சகோதரிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் குழந்தைகளின் படங்களுக்கு மலர் தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பிள்ளைகளை இழந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விரும்பி சாப்பிட்ட பிஸ்கட், சாக்லெட், கூல்டிங்க்ஸ், பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து கை கூப்பி வணங்கிக் கதறினர். தாய் ஒருவர், "எங்க ராசா இருக்க, எங்கூட வந்திரு கண்ணு" என்று கதறியதைக் கேட்ட பலரும் கண் கலங்கினர்.
கோர தீவிபத்தில் குழந்தைகளைப் பறிக்கொடுத்த பெற்றோர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டாலும் ஆறாத வடுவாக, ஒவ்வொரு நாளும் கண்ணீர் சிந்தும் நிகழ்வாக மனதை விட்டு அகலாமல் இருக்கிறது இந்தச் சம்பவம்.

இது குறித்து சிலரிடம் பேசினோம். "காலையில் மலர்ந்த மொட்டுகளாகச் சிரித்த முகத்துடன் எங்கள் பிள்ளைகளை பள்ளியில் விட்டு சென்றோம். பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் கடவுளே எந்தக் குழந்தைக்கும் எதுவும் ஆகியிருக்கக் கூடாதுனு ஓடியாந்தோம். இங்கு வந்தால் அந்த ஏரியா முழுக்க ஒரே அழுகுரல்கள். தீயில் கருகிய குழந்தைகளின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன எங்கும் மரணம் ஓலம் கேட்டன.
இப்போதும் அந்த அழுகை சத்தம் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நாள் தீடிரென தூக்கத்தில் இந்த விபத்து கண் முன் வர தூக்கி வாரிப்போடும். இந்தச் சம்பவம் மட்டும் நடக்கலைன்னா இன்றைக்கு எங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆளாகி எங்களுக்கு துணையாக இருந்திருப்பாங்க.
பள்ளியில் விடும்போது இப்படி நடக்குமுனு தெரியாமப் போச்சு. கடவுள், எங்க உசுரை பாதியில் பறிச்சுக்கிட்டான்" என்று கண்ணீர் வடித்தனர்.

பள்ளிகள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி தீ விபத்து நாளன்று பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முந்தைய அரசுகள் இதைக் கண்டு கொள்ளவில்லை. தற்போது கும்பகோணம் வட்டத்திற்கு மட்டுமாவது உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்குக் கோரிக்கை வைத்தனர்.



















